Published:Updated:

பனிமூட்டமா... தொழில்நுட்பக் கோளாறா? - வேகமெடுக்கும் ஹெலிகாப்டர் விபத்து விசாரணை!

ஹெலிகாப்டர் விபத்து
பிரீமியம் ஸ்டோரி
News
ஹெலிகாப்டர் விபத்து

கடந்த சில ஆண்டுகளாகவே வெலிங்டன் ராணுவ மையத்துக்கும், ஊடகங்களுக்கும் பெரிய இடைவெளி இருந்தது. பிபின் ராவத்தின் வருகையும் ஊடகங்களுக்குச் சொல்லப்படவில்லை

முப்படை தலைமைத் தளபதி பிபின் ராவத் உட்பட 13 பேர் பலியான குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து ஏற்படுத்திய ரணங்கள், ஒட்டுமொத்த நாட்டையும் துடிக்க வைத்துள்ளன. ‘இந்த விபத்து பனிமூட்டத்தால் நடந்ததா, தொழில்நுட்பக் கோளாறால் நடந்ததா... இல்லை வேறு காரணங்களால் நடந்ததா?’ என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வியாக இருக்கிறது.

விபத்து நடந்த மறுநாளே ராணுவம் ஒருபக்கம், காவல்துறை ஒருபக்கம் விசாரணையைத் தொடங்கிவிட்டன. இது குறித்து சூலூர், குன்னூர், வெலிங்டன், நஞ்சப்பா சத்திரம் பகுதிகளில் விசாரித்தோம்... ‘‘சம்பவம் நடந்த இடத்தில், அப்போது பனிமூட்டம் அதிகம் இருந்ததாக ஒரு தரப்பில் சொல்கிறார்கள். சூலூர் விமானப்படை தளத்திலிருந்து ஹெலிகாப்டர் புறப்பட்டபோது அங்கு நல்ல வெயில் அடித்தது. ஹெலிகாப்டர் தரையிறங்கும் வெலிங்டன் பகுதியில்கூட பனிமூட்டம் அதிகம் இல்லை. இடைப்பட்ட பகுதிகளில்தான் பனிமூட்டம் அதிகமாக இருந்தது. இதனால், இந்திய வானிலை மையத்திடம், விபத்து நடந்த இடத்தில் இருந்த வானிலை குறித்துக் காவல்துறை தரப்பில் அறிக்கை கேட்கப்பட்டுள்ளது.

பனிமூட்டமா... தொழில்நுட்பக் கோளாறா? - வேகமெடுக்கும் ஹெலிகாப்டர் விபத்து விசாரணை!

ஹெலிகாப்டர் மேட்டுப்பாளையம் கல்லார் பகுதியைக் கடக்கும்போதே, அதன் சத்தம் வித்தியாசமாக இருந்தது. அதிக சத்தத்துடன், ஹெலிகாப்டர் வழக்கத்தைவிட சற்றுத் தாழ்வாகப் பறந்ததைப் பார்க்க முடிந்தது. பர்லியாறு அருகே சென்றபோது ஹெலிகாப் டருடனான தகவல் தொடர்பு துண்டிக்கப் பட்டுள்ளது. காட்டேரி அருகே மேகக் கூட்டத்துக்குள் நுழைந்த சில விநாடிகளில் விபத்து ஏற்பட்டு, அந்தப் பகுதி கறுப்புப் புகையால் சூழப்பட்டது’’ என்றார்கள்.

தீக்கிரையான ஹெலிகாப்டரிலிருந்து மீட்கப்பட்ட பொருள்கள் குறித்துப் பேசிய காவல்துறை அதிகாரி ஒருவர், ‘‘செல்போன் உள்ளிட்ட பொருள்கள் தீயில் கருகியிருந்தன. சில ஏ.கே ரக துப்பாக்கிகள், இரண்டு கைத்துப்பாக்கிகள், இரண்டு கத்திகள், சில தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. பாதி எரிந்த நிலையில் டைரி ஒன்றும், கைப்பை ஒன்றும் கிடைத்திருக்கிறது. ஹெலிகாப்டரிலிருந்து சிதறிக்கிடக்கும் பாகங்களின் தொலைவை வைத்து விபத்தின் தன்மையை ஆராயும் முயற்சியில் விமானப்படை நுண்ணறிவுப் பிரிவினர் ஈடுபட்டுவருகிறார்கள்’’ என்றார்.

சைலேந்திரபாபு
சைலேந்திரபாபு

‘‘பொதுவாக முக்கியப் பிரமுகர்கள் ஹெலிகாப்டரில் வரும்போது பாதுகாப்பு, வானிலை காரணங்களுக்காக உடன் இரண்டு ஹெலிகாப்டர்கள் வருவது வழக்கம். ஆனால், பிபின் ராவத் சூலூர் விமானப்படைத் தளத்திலிருந்து ஹெலிகாப்டரில் புறப்பட்டபோது, உடன் ஹெலிகாப்டர்கள் வரவில்லை. இதை வெலிங்டன் மெட்ராஸ் ரெஜிமென்டல் சென்டரும் உறுதிப்படுத்தியுள்ளது. முப்படைத் தளபதி பதவி புதிதாக உருவாக்கப்பட்டது. அதற்கான மரபுகள், புரோட்டோகால் போன்றவை முழுமையாக உருவாக்கப்படவில்லை. அதனால் இப்படி ஆகியிருக்கலாம்.

விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரை அன்றைய தினம் புரோட்டோகால்படி விங் கமாண்டரான பிரித்வி சிங் சௌஹான்தான் இயக்கினார் என்று மற்றொரு தகவல் வெளியாகியுள்ளது. அவருக்கு அந்த வழித்தடத்தில் அனுபவம் இல்லை. மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சரால் இந்த விபத்து குறித்து விசாரிக்க நியமிக்கப்பட்டுள்ள ஏர் மார்ஷல் மன்வேந்தரா சிங், மூன்று நாள்கள் தொடர் ஆய்வில் ஈடுபட்டார். எதுவானாலும் கைப்பற்றப்பட்ட கறுப்புப் பெட்டியில் கிடைக்கும் ஆதாரங்கள், விபத்தில் பிழைத்து தீவிர சிகிச்சையில் இருக்கும் குரூப் கேப்டன் வருண் சிங்கின் வாக்குமூலம் ஆகியவையே உண்மை நிலவரத்தை விளக்கும்’’ என்கிறார்கள் ராணுவ வட்டாரங்களில்.

கைப்பற்றப்பட்ட கறுப்புப் பெட்டி
கைப்பற்றப்பட்ட கறுப்புப் பெட்டி

காவல்துறை வட்டாரத்தில் விசாரித்தபோது, ‘‘ஹெலிகாப்டர் விபத்து தொடர்பாக அப்பர் குன்னூர் காவல் நிலையத்தில் 174 பிரிவின்கீழ் வழக்கு பதிவுசெய்யப்பட்டது. விபத்து நடந்த மறுநாள் மாலையே தமிழக டி.ஜி.பி சைலேந்திரபாபு தலைமையில் காவல்துறை அதிகாரிகளுடன் குன்னூரில் ஆலோசனைக் கூட்டமும் நடத்தப்பட்டது. விபத்தின் விசாரணை அதிகாரியாக, கூடுதல் எஸ்.பி முத்துமாணிக்கம் நியமிக்கப்பட்டிருக்கிறார். முதற்கட்டமாக 26 பேரைச் சாட்சிகளாக சேர்த்திருக்கிறார்கள்.

தடயவியல்துறை இயக்குநர் ஸ்ரீனிவாசன் தலைமையில் விபத்துப் பகுதியை ஆய்வுசெய்து தடயங்களைச் சேகரித்து ஆய்வுக்கு உட்படுத்தி வருகிறார்கள். ஹெலிகாப்டர் விபத்தைக் கடைசியாகப் படம் பிடித்த நபரின் கைப்பேசியைக் காவல்துறையினர் கைப்பற்றி கோவை தடயவியல் ஆய்வகத்துக்கு அனுப்பியுள்ளார்கள். நஞ்சப்பா சத்திரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருக்கும் வனங்களில், மர்மநபர்களின் நடமாட்டம் இருந்ததா என்பதைக் கண்டறிய தமிழக சிறப்பு அதிரடிப்படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுவருகிறார்கள். அதிநவீன டிரோன் கேமராக்கள் மூலம் அந்தப் பகுதியை ஆய்வுசெய்து வருகிறோம்’’ என்றார்கள்.

பனிமூட்டமா... தொழில்நுட்பக் கோளாறா? - வேகமெடுக்கும் ஹெலிகாப்டர் விபத்து விசாரணை!

‘‘நஞ்சப்பா சத்திரம் பகுதி சீல் வைக்கப்பட்டு, ராணுவத்தின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது. வெளிநபர்களுக்கு அனுமதி இல்லை. ஊடகங்களுக்கும் குறிப்பிட்ட தூரத்துக்குத்தான் அனுமதி. ஒருபக்கம், ராணுவமும், மறுபக்கம் காவல்துறையும் இறங்கி விசாரித்துவருகின்றன. ஆனால், இதில் காவல்துறை ஓர் எல்லையைத் தாண்டி விசாரிக்க முடியாது. ராணுவம்தான் விசாரிக்க முடியும்.

கடந்த சில ஆண்டுகளாகவே வெலிங்டன் ராணுவ மையத்துக்கும், ஊடகங்களுக்கும் பெரிய இடைவெளி இருந்தது. பிபின் ராவத்தின் வருகையும் ஊடகங்களுக்குச் சொல்லப்படவில்லை. இந்தச் சம்பவத்துக்குப் பிறகு, நஞ்சப்பா சத்திரம் மக்களுக்கு நிவாரணப் பொருள்கள் வழங்கியது தொடங்கி ஒவ்வோர் அதிகாரியின் விசிட் குறித்தும் ஊடகங்களுக்கு உடனடியாகத் தகவல் சொல்லப்படுகிறது. இதே வேகத்தில் வெளிப்படையாக விசாரணை நடத்தினால், விபத்துக்கான உண்மைக் காரணத்தைக் கண்டறியலாம், யூகமாகப் பரவும் வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கலாம்’’ என்கிறார்கள் விவரமறிந்த வட்டாரத்தினர்.