Published:Updated:

‘ஹெல்மெட் அம்மன்!’ - அசத்தல் பிரசாரம் செய்யும் ஈரோடு பெண்

நவீன் இளங்கோவன்
ரமேஷ் கந்தசாமி

‘ஒரு ஆக்ஸிடன்ட்ல என் முகத்துல பலத்த அடிபட்டது. முகத்துல மட்டும் 8 பிளேட் வச்சிருக்கேன். அதனால அந்த வலி எனக்குத் தெரியும்’ என கேஷூவலாகப் பிரசாரம் செய்கிறார்.

அம்மன் வேடமணிந்து பிரசாரம் செய்யும் சமூக சேவகி
அம்மன் வேடமணிந்து பிரசாரம் செய்யும் சமூக சேவகி ( ரமேஷ் கந்தசாமி )

தமிழ்நாட்டில் தண்ணீர் என்கின்ற வார்த்தைக்குப் பிறகு அதிகமாக ஒலித்த வார்த்தை ‘ஹெல்மெட்’ என்பதாகத்தான் இருக்கும். ஹெல்மெட் போடச்சொல்லி உயர் நீதிமன்றம் இதுவரை பல நூறு உத்தரவுகளைப் பிறப்பித்திருக்கும். சிக்னலுக்கு சிக்னல் நிற்கும் போலீஸ், ஸ்பாட் ஃபைன் எனப் பல டிஸைன்களில் அரசு அதிரடி காட்டினாலும், ‘ஹெல்மெட் போடுவேனா!’ எனச் சிலர் அடம்பிடிக்கின்றனர். ஹெல்மெட் அணியாவிட்டால் இனி பெட்ரோல் கிடையாது என்கின்ற திட்டம் சென்னையில் விரைவில் அமலாகப்போகிறது என்கிற தகவலும் வந்துகொண்டிருக்கின்றன. இப்படி நாளுக்கு நாள் ஹெல்மெட் அணியச் சொல்லி பல அதிரடித் திட்டங்கள் வந்த வண்ணம் இருக்கின்றன. இதற்கிடையே, ஈரோட்டைச் சேர்ந்த சமூக சேவகி ஒருவர், ஹெல்மெட் அணிவது குறித்து மக்களிடையே வித்தியாசமாக விழிப்பு உணர்வு பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

இலஞ்சி ஜானகி
இலஞ்சி ஜானகி
ரமேஷ் கந்தசாமி

இலஞ்சி என்னும் சமூக நல அமைப்பைச் சேர்ந்தவர் ஜானகி. ஈரோடு பேருந்து நிலையத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டுமென ஆரம்பித்து, ஹெல்மெட் அணிவது என பல விஷயங்களை கையிலெடுத்து பிரசாரம் செய்து வருகிறார். இவர் கடந்த 48 நாட்களாக ஈரோட்டில் பல்வேறு இடங்களில் நின்றுகொண்டு, ஹெல்மெட் அணிவதன் அவசியத்தை பொதுமக்களிடம் உணர்த்தி வருகிறார். அந்தவகையில், நேற்று அம்மன் வேடமணிந்தவர், தலையில் ஹெல்மெட்டோடு ஈரோடு பேருந்து நிலையம் அருகே அவருடைய குழுவினருடன் ஆஜரானார். அம்மன் வேடத்தில், தலையில் ஹெல்மெட் அணிந்திருந்த இவரை பலரும் வித்தியாசமாக பார்த்து நின்றனர். வாகன ஓட்டிகள், பள்ளிக் குழந்தைகள், கல்லூரி மாணவர்கள் என பலரையும் அருகில் அழைத்து பிரசாரம் செய்து கொண்டிருந்த இலஞ்சி ஜானகியை சந்தித்து நாம் பேசினோம்.

“மனுசனுக்கு சாவுங்கிறது எப்ப வரும்னு தெரியாது. அது தெரியாததால, அதைப் பத்தி மக்கள் பெருசா பயப்படுறதில்லை. அரசாங்கம் சொல்லுதேன்னு பயந்துக்கிட்டு கடமைக்காகத்தான் ஹெல்மெட் போடுறாங்க. தன்னோட உயிர் முக்கியம்னு ஒவ்வொருவரும் நினைக்கணும். குடும்பத் தலைவருக்கு ஒரு விபத்து நடந்துட்டா, அந்தக் குடும்பமே உடைஞ்சு போயிடும். ஒரு ஆக்ஸிடன்ட்ல என் முகத்துல பலத்த அடி பட்டது. முகத்துல மட்டும் 8 பிளேட் வச்சிருக்கேன்.

பொதுமக்களிடம் பிரசாரம் செய்யும் இலஞ்சி ஜானகி
பொதுமக்களிடம் பிரசாரம் செய்யும் இலஞ்சி ஜானகி
ரமேஷ் கந்தசாமி

அதனால அந்த வலி எனக்குத் தெரியும். அந்த வலி மத்தவங்களுக்கு வரக்கூடாது நான் பிரசாரம் செய்றேன். பெண்கள், குழந்தைகள்கிட்ட குறிப்பா இதை அதிகமா பிரசாரம் செய்றோம். மக்கள்கிட்ட ஒருநிமிஷம் நின்னு நாங்க என்ன சொல்றோமுன்னு பார்க்கணும்ங்கிறதுக்காகத் தான் அம்மன் வேஷத்துல பிரசாரம் செஞ்சேன். ஈரோடு எஸ்.பி ஒத்துழைப்புடன் 48 நாள் பிரசாரம் முடிச்சிருக்கேன். பலர் என்னோட பிரசாரத்தைக் கேட்டு, அடுத்தத்டவை என்னைப் பார்த்து, ‘நீங்க சொன்ன அன்னைக்கே ஹெல்மெட் வாங்கிட்டேன்னு’ சொல்லிட்டு போறாங்க. இந்த வார்த்தைகளை கேக்குறப்ப மனசுக்கு அவ்ளோ சந்தோஷமாக இருக்கு. என்னால முடிஞ்ச வரைக்கும் நான் ஹெல்மெட் போடச்சொல்லி பிரசாரம் செஞ்சிக்கிட்டே இருப்பேன். அதைக்கேட்டு தினமும் ஒருத்தராவது ஹெல்மெட் போட ஆரம்பிச்சாலே போதும்” என்றார்.