Published:Updated:

தூத்துக்குடி: ரிமோட் மூலம் லாக் செய்யப்பட்ட கார்; வெடித்துச் சிதறிய வெடிகள்! - 30 வீடுகள் சேதம்

தூத்துக்குடியில் வாண வெடிகளை வைத்திருந்த காரை வீட்டின் வாசலில் நிறுத்திவிட்டு, ரிமோட்டால் காரின் கதவுகளை மூடியதில் வெடி விபத்து ஏற்பட்டது. இதில், கார் முற்றிலுமாக எரிந்து சாம்பலானதுடன் 30-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்தும், விரிசல் ஏற்பட்டும் சேதமடைந்தன.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

தூத்துக்குடி மாவட்டம், தட்டார்மடம் அருகேயுள்ள இடைச்சிவிளையைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவர், நெல்லை மாவட்டம், திசையன்விளை அருகேயுள்ள அணைக்கரைப் பகுதியில் வெடிகள் தயாரிக்கும் பட்டறை நடத்திவருகிறார். திருமணம், கோயில் திருவிழாக்களுக்கு வெடிகளை சப்ளை செய்துவருகிறார். இந்தநிலையில், திசையன்விளை அருகில் நடைபெற்ற கோயில் கொடை விழாவுக்குக் கோயில் நிர்வாகத்தினர் ஆர்டர் கொடுத்திருந்த வாண வேடிக்கைக்கான வெடிகளைக் கொடுத்திருக்கிறார்.

வெடி விபத்தில் சிதறிய பாலகிருஷ்ணனின் கார்
வெடி விபத்தில் சிதறிய பாலகிருஷ்ணனின் கார்

பின்னர், இரண்டு திருமண வீடுகளுக்கு வெடிகளை சப்ளை செய்வதற்காக ரூ.30,000 மதிப்புள்ள வெடிகளைத் தனது காருக்குள் வைத்துவிட்டு வீட்டுக்கு வந்திருக்கிறார். வீட்டின் வாசலில் காரை நிறுத்திவிட்டு ரிமோட் மூலம் காரின் கதவுகளை மூடியிருக்கிறார். அப்போது எதிர்பாராதவிதமாக காருக்குள் இருந்த வெடிகள் வெடித்திருக்கின்றன.

வெடிகள் பண்டல்களாகக் கட்டப்பட்டு ஒன்றன்மேல் ஒன்றாக அடுக்கிவைக்கப்பட்டிருந்ததால், 30 நிமிடங்களுக்கும் மேலாக பயங்கரச் சத்தத்துடன் தொடர்ந்து வெடி வெடித்தது. வெடிச்சத்தம் கேட்டு அந்தப் பகுதியின் தெருமுனைக்கு ஓடிச் சென்றிருக்கிறார்கள் அந்தப் பகுதியினர். வெடிச்சத்தம் கேட்டு மக்கள் தெருமுனைக்குச் சென்றதால் பெரிய காயமோ, உயிர்ச்சேதமோ எதுவும் ஏற்படவில்லை. இந்த வெடி விபத்தில், பாலகிருஷ்ணனின் கார் வெடித்துச் சிதறியது.

தட்டார்மடம் போலீஸ் ஸ்டேஷன்
தட்டார்மடம் போலீஸ் ஸ்டேஷன்

வாண வேடிக்கை வெடிகள் அங்குமிங்கும் சீறிப்பாய்ந்து வெடித்ததில் அருகிலுள்ள 30-க்கும் மேற்பட்ட வீடுகளில் மேற்கூரை, வெளிச்சுவர்கள் இடிந்தும், விரிசல் ஏற்பட்டும் சேதமடைந்தன. அந்தப் பகுதியைச் சேர்ந்த மூன்றுய் பேருக்குச் சிறிய காயம் ஏற்பட்டுள்ளது. வீடுகளின் முன்பு நிறுத்தப்பட்ட சில வாகனங்களும் சேதமடைந்துள்ளன. இது குறித்துத் தகவல் அறிந்த திசையன்விளையைச் சேர்ந்த தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். தூத்துக்குடி எஸ்.பி., ஜெயக்குமார், சாத்தான்குளம் டி.எஸ்.பி கண்ணன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நீலகிரி: விபரீதத்தில் முடிந்த நாட்டு வெடி தயாரிப்பு! - சிறுவன் உட்பட மூன்று பேர் காயம்

இது குறித்து தட்டார்மடம் காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்து பாலகிருஷ்ணனைக் கைதுசெய்தனர். போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில், பாலகிருஷ்ணன் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திசையன்விளை அருகேயுள்ள அழகியவிளை பகுதியில் வெடிப்பட்டறை நடத்தி வந்தபோது, தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது. இதனால், வெடிப்பட்டறையின் உரிமம் ரத்துசெய்யப்பட்டது.

வெடித்து சிதறிய காரின் ஒரு பகுதி
வெடித்து சிதறிய காரின் ஒரு பகுதி

தற்போது, அணைக்கரைப் பகுதியில் வெடிப்பட்டறை நடத்துவதற்கான உரிமம் பெற்று வெடிகள் தயாரித்து வந்திருப்பது தெரியவந்திருக்கிறது. பாலகிருஷ்ணன் தயாரிக்கும் வெடிகளின் தன்மை குறித்து போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்திவருகின்றனர். காரில் வைத்திருந்த வெடிகள் வெடித்து விபத்து ஏற்பட்ட சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு