Published:Updated:

மலேசியாவிலிருந்து சொந்த ஊர் திரும்பிய தொழிலதிபர்! - மகள்களுடன் கார் விபத்தில் உயிரிழந்த சோகம்

இரா.மோகன்
உ.பாண்டி

காரில் பயணித்த உஸ்மான் அலி, அவரின் மகள்கள் ஹைநூல் ரசியா, தஸ்லிமா பானு ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மோட்டார் சைக்கிளில் சாலையைக் கடக்க முயன்ற சங்கரும் பலியானார்.

Accident spot
Accident spot

ராமநாதபுரம் மாவட்டம் சாத்தான்குளம் பகுதியைச் சேர்ந்தவர் உஸ்மான் அலி. தொழிலதிபரான இவருக்கு ராமநாதபுரத்தில் ஹோட்டல்கள், திருமண மண்டபம் ஆகியன உள்ளன. மலேசியாவிலும் உஸ்மானுக்குச் சொந்தமாக ஹோட்டல்கள் உள்ளன.

Accident
Accident

இந்தநிலையில், உஸ்மான் அலி நேற்று விமானம் மூலம் மலேசியாவிலிருந்து மதுரை வந்துள்ளார். உஸ்மானுடன் அவரின் மகள்கள் ஹைநூல் ரசியா, தஸ்லிமா பானு மற்றும் மருமகன் முகம்மது கஸாலி ஆகியோரும் வந்துள்ளனர்.

இவர்கள் மதுரை விமான நிலையத்திலிருந்து சொந்த ஊரான சாத்தான்குளத்துக்கு காரில் வந்துள்ளனர். பரமக்குடி அருகே உள்ள சோமநாதபுரம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் இவர்களது கார் வந்துகொண்டிருந்தபோது சாலையின் மறுபுறத்தில் இருந்து மோட்டார் சைக்கிளில் வந்த பரமக்குடி மணி நகரைச் சேர்ந்த தி.மு.க பிரமுகர் சங்கர் என்பவர், காரின் குறுக்கே வந்துள்ளார். இவர் மீது மோதுவதைத் தவிர்க்க நினைத்த கார் ஓட்டுநர் வண்டியை திருப்ப முயன்றுள்ளார். ஆனால், கட்டுப்பாட்டை இழந்த கார், சங்கரின் மீது மோதியபடி சாலையில் இருந்த தடுப்புச்சுவரில் பலமாக மோதி விபத்துக்குள்ளானது.

Ramanathapuram accident
Ramanathapuram accident

இந்தக் கோர விபத்தில் காரில் பயணித்த உஸ்மான் அலி, அவரின் மகள்கள் ஹைநூல் ரசியா, தஸ்லிமா பானு ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மோட்டார் சைக்கிளில் சாலையைக் கடக்க முயன்ற சங்கரும் பலியானார். காயமடைந்த உஸ்மானின் மருமகன் முகம்மது கஸாலி படுகாயத்துடன் சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார். கார் ஓட்டுநரான செந்தில்குமார் சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடிவிட்டார்.

இந்த கோர விபத்து குறித்து தகவல் அறிந்த பரமக்குடி போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். மேலும், விபத்து தொடர்பாக வழக்கு பதிவுசெய்து தப்பி ஓடிய கார் ஓட்டுநர் செந்தில்குமாரை தேடிவருகின்றனர்.

Accident spot
Accident spot

இதனிடையே பரமக்குடி பகுதியில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிப்பு நிகழ்வுகளில் பங்கேற்றிருந்த ராமநாதபுரம் எம்.பி நவாஸ்கனிக்கு இந்த விபத்து குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, பரமக்குடி மருத்துவமனைக்கு வந்த நவாஸ் கனி விபத்தில் காயமடைந்த முகம்மது கஸாலி மற்றும் உஸ்மான் அலியின் உறவினர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார். சொந்த ஊர் திரும்பிய தொழில் அதிபரும் அவரின் மகள்களும் சாலை விபத்தில் பலியான சம்பவம் ராமநாதபுரம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.