Published:Updated:

தஞ்சாவூர்: அறுந்து கிடந்த மின்கம்பி; தன் குழந்தையைக் காப்பாற்றச் சென்ற தந்தை மரணம்

மகனை காப்பாற்ற தன் உயிரை விட்ட தந்தை
மகனை காப்பாற்ற தன் உயிரை விட்ட தந்தை ( ம.அரவிந்த் )

கதிர்வேல் தன் மகன் மின் கம்பியைத் தொடப் போகிறான் என்பதை அறிந்து பதறித் துடித்து தன் உயிரை பற்றி நினைக்காமல் ஓடிச் சென்று மகனை தூக்கிப்போட்டு காப்பாற்றி தன் உயிரை விட்டுள்ளார்.

பேராவூரணி அருகே உள்ள சித்தாதிக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் ராசேந்திரன். லாரி டிரைவராக வேலைசெய்து வருகிறார். இவரின் மனைவி இந்திரா. இவர்களுக்கு இரண்டு மகன்கள். மூத்த மகன் கதிர்வேல்(32), பொறியியல் பட்டதாரி. சென்னையில் உள்ள தனியார் ஐ.டி கம்பெனி ஒன்றில் பணியாற்றி வருகிறார். இளைய மகன் மணிகண்டன் எம்.காம் படித்துவிட்டு வேலை தேடி வருகிறார். ராசேந்திரனுக்கு வயதாகிவிட்டதால் முன்புபோல் வேலைக்குச் செல்ல முடிவதில்லை.

கறும் உறவினர்கள்
கறும் உறவினர்கள்

கதிர்வேலின் வருமானத்தை நம்பியே குடும்பம் இருந்துள்ளது. திருமணமான கதிர்வேல் தன் மனைவி ரம்யா மற்றும் இரண்டு வயது மகன் செல்வன் ஆகியோருடன் சென்னை பள்ளிக்கரணையில் வசித்து வந்தார். தன் சம்பளத்தின் மூலம் தன் குடும்பத்தையும் கிராமத்தில் உள்ள பெற்றோரையும் கவனித்து வந்துள்ளார்.

கொரோனா பரவி வருவதையடுத்து லாக்டெளன் பிறப்பிக்கப்பட்டதாலும், கொரோனா பரவாமல் தடுக்க கதிர்வேல் பணிபுரிந்த கம்பெனி ஒர்க் ஃப்ரம் ஹோம் முறையை நடைமுறைக்குக் கொண்டு வந்ததாலும் மனைவி மற்றும் மகனுடன் சொந்த ஊரான சித்தாதிக்காட்டிற்கு வந்து தங்கியிருந்தபடி வேலைபார்த்து வந்துள்ளார்.

இந்நிலையில், கதிர்வேல் வீட்டின் முன்பு மின் கம்பி ஒன்று அறுந்து கிடந்துள்ளது. வெளியே விளையாடிக் கொண்டிருந்த மகன் செல்வன் அந்தக் கம்பி கிடந்த இடத்திற்குச் சென்றுள்ளான்.

அறுந்து கிடக்கும் மின் கம்பி
அறுந்து கிடக்கும் மின் கம்பி

கம்பி அறுந்து கிடப்பதையும், மகன் அதன் அருகே விளையாடிக் கொண்டிருப்பதையும் பார்த்துப் பதறிய கதிர்வேல் ஓடிச்சென்று மகனை தூக்கி வீசியுள்ளார். அப்படியிருந்தும் குழந்தைக்கு லேசாக மின்சாரம் தாக்கியதில் காயம் ஏற்பட்டது. அவனை தூக்கிப்போட்டு மகனின் உயிரை காப்பாற்றிய கதிர்வேல், அப்போதே நிலைதடுமாறி கம்பியில் விழுந்ததில் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டார். கண்ணிமைக்கும் நேரத்தில் எல்லாம் நடந்துமுடிந்துவிட்டது.

கொரோனா பாதிப்பிலிருந்து தற்காத்துக்கொள்ள ஊருக்கு வந்தவரின் உயிரை அறுந்துகிடந்த மின் கம்பி பறித்து விட்டது. இந்தச் செய்தி அப்பகுதி முழுவதும் பரவ அதிர்ச்சியடைந்த ஆண்கள், பெண்கள் என அனைவரும் கதிர்வேல் வீட்டின் முன் திரண்டனர். இந்தச் சம்பவத்தால் அந்தக் கிராமமே சோகத்தில் மூழ்கியது.

கிராம மக்கள்
கிராம மக்கள்

இது குறித்து அப்பகுதியைச் சேர்ந்த சிலரிடம் பேசினோம்.

``கதிர்வேல் சின்ன வயசுல இருந்தே திராவிட கழகத்தில் ஆர்வம் கொண்டவர். வளர்ந்த பின்னர் தன்னை தீவிரமாக அதில் ஈடுபடுத்திக் கொண்டார். மக்கள் பிரச்னைகளுக்காக களத்தில் நிற்கக்கூடியவர். கஷ்டப்படுபவர்களுக்கு தன்னால் முடிந்த பல உதவிகளைச் செய்திருக்கிறார். சென்னையில் பணிக்குச் சென்றாலும் அங்கேயும் தி.க.வில் செயல்படுவதை குறைத்துக்கொள்ளவில்லை. தாம்பரம் பகுதியில் முக்கிய பொறுப்பினையும் வகித்து வந்தார்.

கதிர்வேல் படித்து, வேலைக்குச் சென்ற பிறகே கஷ்டங்கள் குறைந்து அவர் குடும்பத்தில் நிம்மதி படர்ந்து வந்தது. கதிர்வேலின் தம்பி மணிகண்டனுக்கும் சரியான வேலை கிடைக்காததால் குடும்பச் சுமை முழுவதையும் கதிர்வேலே சுமந்து வந்தார். இந்லையில் குடும்பத்தின் பொருளாதார நிலை உயர்வதற்காக அமெரிக்கா செல்வதற்கும் ஏற்பாடு செய்திருந்தார். அதற்குள் கொரோனா பரவத் தொடங்கியது. அத்துடன் அவர் தம்பிக்கும் திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால் அதனை முடித்துவிட்டுச் செல்லலாம் எனத் திட்டமிட்டிருந்தார்.

இறந்த கதிர்வேல்
இறந்த கதிர்வேல்

`நான் வெளிநாடு போய்ட்டு வந்தேன்னா கஷ்டம் தீர்ந்துரும்' என்று தனக்கு நெருக்கமானவர்களிடம் சொல்லி வந்துள்ளார். கணவரின் உயிரிழப்பை தாங்க முடியாமல் கதிர்வேலின் மனைவி ரம்யா கதறியது அனவரின் நெஞ்சையும் பிழிய வைப்பதாக இருந்தது. ஒரு குடும்பத்திற்கே முதுகெலும்பாக இருந்த கதிர்வேல் மரணம் எங்கள் கிராமத்தையே கண்ணீர் வடிக்க வைத்துவிட்டது. இரண்டு வயது மகனை வைத்துக்கொண்டு ரம்யா என்ன பாடுபடப்போகிறாரோ என்பதை நினைத்தாலே துயரம் அழுத்துகிறது'' என்றனர் ஆற்றாமையுடன்.

அடுத்த கட்டுரைக்கு