Published:Updated:

அதிகாலையில் ஸ்ரீரங்கம் கோயிலில் ஏற்பட்ட தீ விபத்து! - நீதிமன்ற உத்தரவைப் பின்பற்றாதது காரணமா?

ஸ்ரீரங்கம் கோயிலில் தீவிபத்து
ஸ்ரீரங்கம் கோயிலில் தீவிபத்து

திருச்சி ரங்கநாதர் கோயிலில் உள்ள பிரசாத ஸ்டாலில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாலாயிர திவ்ய தேசங்களில் முக்கியமானதும், வைணவ திருத்தலங்களில் முதன்மையானதாகவும் விளங்கும் ஆலயம் ஸ்ரீரங்கம் அரங்கநாதர் ஆலயம்.

ஸ்ரீரங்கம் கோயில்
ஸ்ரீரங்கம் கோயில்

பெரும்பாலான பக்தர்கள் ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் வழியாக ராஜகோபுரம், ரங்காபுரம் வழியாகவே சென்று ரங்கநாதரைத் தரிசிப்பது வழக்கம். அந்த வகையில், ஸ்ரீரங்கம் கருட மண்டபத்திற்கும் ஆரியபட்டால் வாசலுக்கும் இடையே உள்ள பகுதியில் தனியார் நிறுவனம் ஒன்று பிரசாத ஸ்டால் அமைத்துள்ளது.

கோயில் நிர்வாகம் விட்ட டெண்டர் எடுத்த முரளி என்பவர் அந்த பிரசாத ஸ்டாலை நடத்தி வருகிறார். அங்கு கோயிலுக்கு வரும் பக்தர்களுக்காக புளிசாதம், பொங்கல், தயிர், சாதம், வடை, லட்டு உள்ளிட்ட பிரசாதங்கள் விற்பனை செய்யப்படுகின்ன. இந்நிலையில் அந்த பிரசாத ஸ்டாலில் இன்று அதிகாலை 3 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. இதைப் பார்த்துப் பதறிய கோயில் காவலர்கள், பணியாளர்கள் மற்றும் பிரசாத ஸ்டால் ஊழியர்கள் போராடி தீயை அணைத்தனர்.

அதிகாலையில் ஸ்ரீரங்கம் கோயிலில் ஏற்பட்ட தீ விபத்து! - நீதிமன்ற உத்தரவைப் பின்பற்றாதது காரணமா?

அதிகாலையில் ஏற்பட்ட இந்தத் தீ விபத்தில் கோயிலுக்குள் செயல்பட்டுவந்த பிரசாத ஸ்டால் மட்டும் எரிந்து சேதமடைந்துள்ளது. மேலும் தீ உடனடியாக அணைக்கப்பட்டதால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. மேலும், அதையடுத்து மண்டபப் பகுதியில் துணி திரை ஏற்படுத்தப்பட்டுத் தீ விபத்து ஏற்பட்ட பகுதி சுத்தம் செய்யப்படுகிறது. இந்த விபத்துக்கான காரணம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தொடரும் தீ விபத்துகள்

ஸ்ரீரங்கம் கோயிலில் தீவிபத்து நடப்பது புதிதல்ல. கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருச்சி ஸ்ரீரங்கம் வசந்த மண்டபத்தில் தீ விபத்து ஏற்பட்டது. மேலும், இதேபோல் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் உள்ள வீரவசந்த மண்டபத்தில், கடந்த சில வருடங்களுக்கு முன்பு தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்துக்குப் பிறகு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கோயிலுக்குள் இருக்கும் கடைகளை அகற்ற உத்தரவிட்டது.

Vikatan

அதையடுத்து தமிழகம் முழுவதும் கோயில்களில் உள்ள கடைகள் அகற்றப்பட்டன. அந்த வகையில் ஸ்ரீரங்கம் கோயிலில் அம்மா மண்டபம் மற்றும் நான்கு கால் மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் இயங்கிவந்த 20 கடைகளுக்கு சீல் வைத்தனர். அதன்பிறகு நீதிமன்ற உத்தரவுகள் பின்பற்றப்படவில்லை என்கிறார்கள் பக்தர்கள். இந்த நிலையில் மீண்டும் ஸ்ரீரங்கத்தில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இதுபோன்ற விபத்துகளைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை தேவை என்கிறார்கள்!

அடுத்த கட்டுரைக்கு