Published:Updated:

தூங்கியபோது பற்றி எரிந்த வீடு! - மகன்களைக் காப்பாற்றிய பெற்றோர் தீயில் சிக்கினர்

எஸ்.மகேஷ்

அதிகாலை அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தபோது மூச்சுத்திணறலில் அந்தக் குடும்பத்தினர் சிரமப்பட்டனர். கண்விழித்து பார்த்தபோது தீப்பிடித்து வீட்டில் உள்ள பொருள்கள் கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருந்தது. தீ விபத்திலிருந்து மகன்களை பெற்றோர் காப்பாற்றியுள்ளனர்.

தீ விபத்தில் சிக்கிய மஞ்சுமேனன்
தீ விபத்தில் சிக்கிய மஞ்சுமேனன்

சென்னை போரூர் அடுத்த சக்தி நகரைச் சேர்ந்தவர் பிரகாஷ் மேனன் (55). இவரின் மனைவி பிந்து மேனன் (48). இவர்களுக்கு கிரண் மேனன், ஆதித்யா மேனன் ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனர். பிரகாஷ்மேனன் வெளிநாட்டில் வேலை பார்த்தார். வெளிநாட்டிலிருந்து அவர் ஊர் திரும்பினார். இந்தநிலையில் குடும்பத்தினருடன் ஹாலில் பிரகாஷ் மேனன் தூங்கினார். அப்போது நள்ளிரவில் மின்தடை ஏற்பட்டுள்ளது. இதனால், ஏ.சியின் சுவிட்ச்சை ஆப் செய்யாமல் ஒவ்வொருவரும் தங்களின் படுக்கையறைக்குச் சென்றனர்.

தீ விபத்தில் சிக்கிய பிரகாஷ்மேனன்
தீ விபத்தில் சிக்கிய பிரகாஷ்மேனன்

அதிகாலையில் மூச்சுத்திணறிய பிரகாஷ் மேனன் மற்றும் அவரின் குடும்பத்தினர் கண்விழித்தனர். அப்போது, ஹாலில் இருந்த டி.வி., ஷோபா ஆகியவை தீப்பிடித்து எரிந்துகொண்டிருந்தது. மேலும் வீடு முழுவதும் புகை மூட்டமாக காணப்பட்டது. வீட்டில் மின்சாரமும் இல்லை. இதனால் படுக்கையறையிலிருந்து வெளியில் வர பிரகாஷ் மேனன் குடும்பத்தினர் சிரமப்பட்டனர்.

தீ கொழுந்துவிட்டு எரிவதைப் பார்த்த பிரகாஷ் மேனன் மற்றும் அவரின் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். உடனே தீயை அணைக்க அவர்கள் போராடினர். ஆனால் தீ அணையவில்லை. இதனால் வீட்டிலிருந்து இரண்டு மகன்களையும் மனைவியையும் வெளியில் செல்லும்படி பிரகாஷ்மேனன் கூறினார். தொடர்ந்து பிரகாஷ் மேனனும் பிந்து மேனனும் தீயை அணைக்க முயன்றனர். அப்போது அவர்கள் இருவரின் மீதும் தீப்பிடித்தது.

இதற்குள் போரூர் காவல் நிலையத்துக்கும் தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸாரும் தீயணைப்பு வீரர்களும் சேர்ந்து தீயை அணைத்தனர். பிரகாஷ் மேனன், பிந்து மேனன் ஆகியோருக்கு தீக்காயங்கள் ஏற்பட்டன. அவர்களை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு போலீஸார் அனுப்பிவைத்தனர். அவர்கள் இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. இதுகுறித்து போரூர் போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.

தீ விபத்து
தீ விபத்து

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``மின்தடை ஏற்பட்டவுடன் ஏ.சியின் சுவிட்ச்சை ஆப் செய்யாமல் இருந்துள்ளனர். மீண்டும் மின்சாரம் வந்தபோது மின்கசிவு ஏற்பட்டுள்ளது. இதனால் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. பூட்டிய வீட்டுக்குள் கரும்புகை ஏற்பட்டதால் பிரகாஷ் மேனன் குடும்பத்தினருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. நல்லவேளை அவர்கள் கண்விழித்ததால் உயிரிழப்பு ஏற்படவில்லை. தீயை அணைக்க போராடிய பிரகாஷ் மேனன், பிந்து மேனன் ஆகியோருக்கு காயங்கள் ஏற்பட்டுள்ளன. இந்த தீ விபத்தால் வீட்டிலிருந்த பொருள்கள் சேதமடைந்துள்ளன. மேலும் பிரகாஷ்மேனன் குடும்பத்தினர் துரிதமாகச் செயல்பட்டதால் மற்ற அறைகளுக்கு தீ பரவாமல் தடுக்கப்பட்டுள்ளது" என்றனர்.

தீ விபத்தில் காயமடைந்த பிரகாஷ் மேனனும் அவரின் மனைவி பிந்து மேனனும், மகன்களைப் பார்த்து நலம் விசாரித்துள்ளனர். அவர்களுக்கு எந்தவித தீக்காயங்களும் ஏற்படவில்லை என்று தெரிந்தபிறகுதான் இருவரும் நிம்மதியடைந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.

தீ விபத்து நடந்த பிரசன்னா வீடு
தீ விபத்து நடந்த பிரசன்னா வீடு

கடந்த சில தினங்களுக்கு முன் சேலையூரில் தனியார் டி.வி.நிருபர் பிரசன்னா, அவரின் மனைவி அர்ச்சனா, பிரசன்னாவின் அம்மா ரேவதி ஆகியோர் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தனர். அப்போது பிரிட்ஜ் சுவிட்ச் பாக்ஸில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட கரும்புகையால் மூச்சுத்திணறி மூன்றுபேரும் பூட்டிய வீட்டுக்குள்ளேயே உயிரிழந்தனர். இந்தச் சோகச் சுவடு மறைவதற்குள் போரூரில் அடுத்த தீ விபத்து சம்பவம் நடந்துள்ளது. நல்லவேளை போரூரில் உயிரிழப்பு ஏற்படவில்லை. போரூரில் அடிக்கடி மின்தடை ஏற்படுவதால் மின்கசிவு காரணமாக தீ விபத்துகள் ஏற்படுவதாக போரூர் பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே, மின்வாரிய அதிகாரிகள், முன்எச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என போரூர் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.