Published:Updated:

கன்னியாகுமரி கடற்கரையில் பயங்கர தீ விபத்து - 69 கடைகள் எரிந்து நாசம்!

கன்னியாகுமரி தீ விபத்து
கன்னியாகுமரி தீ விபத்து

இன்று அதிகாலை வேளையில் கன்னியாகுமரி கடற்கரையில் உள்ள கடைகளில் திடீர் தீவிபத்து ஏற்பட்டது. பிளாஸ்டிக் உள்ளிட்ட பொருள்கள் கடைகளில் இருந்ததால் தீ கொழுந்துவிட்டு எரிந்தது.

சர்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரி, கொரோனா ஊரடங்குக்குப் பிறகு கடந்த சில வாரங்களாகத் திறக்கப்பட்டிருக்கிறது. வழக்கமாக சபரிமலை மண்டல மகரவிளக்கு காலங்களில் கன்னியாகுமரியில் சீஸன் களைகட்டும். சபரிமலை செல்லும் வெளிமாநில ஐயப்ப பக்தர்கள் கன்னியாகுமரி வந்துவிட்டுத்தான் திரும்புவார்கள். இதனால், நவம்பர் மாதம் தொடங்கி ஜனவரி 20-ம் தேதிவரை கன்னியாகுமரியில் ஐயப்ப பக்தர்களின் கூட்டம் அலைமோதும். ஆனால், கொரோனா நோய்த் தொற்று மற்றும் கட்டுப்பாடுகள் காரணமாக சபரிமலையில் குறைந்த அளவே பக்தர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். இதனால் கன்னியாகுமரியிலும் கூட்டம் குறைவாகவே காணப்படுகிறது. இருப்பினும், கொரோனா ஊரடங்குக்குப் பிறகு கன்னியாகுமரி சுற்றுலாத்தலம் திறக்கப்பட்டதால் கடற்கரையில் கடை விரித்திருக்கும் வியாபாரிகள் மகிழ்ச்சியில் இருந்தனர்.

தீயணைக்கும் பணி
தீயணைக்கும் பணி

கன்னியாகுமரி கடற்கரைப் பகுதியில் நெருக்கமாக கடைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. இரும்புக்கம்பி, தகர ஷீட்கள் மூலம் நூற்றுக்கணக்கான கடைகள் கடற்கரையில் அமைக்கப்பட்டிருக்கின்றன. அலங்காரப் பொருள்கள், ஃபேன்ஸி பொருள்கள், நறுமணப் பொருள்கள், பிளாஸ்டிக் பொருள்கள், கைவினைப் பொருள்கள், துணி வகைகள் எனப் பலவகைக் கடைகள் கன்னியாகுமரி கடற்கரையில் நெருக்கமாக இருக்கின்றன.

குற்றங்கள் குறையக் காவடி எடுத்த போலீஸ்... கன்னியாகுமரி மாவட்டத்தில் பாரம்பர்யத் திருவிழா!

இந்தநிலையில், இன்று அதிகாலை வேளையில் கன்னியாகுமரி கடற்கரையில் அமைக்கப்பட்டிருக்கும் கடைகளில் திடீர் தீவிபத்து ஏற்பட்டது. பிளாஸ்டிக் உள்ளிட்ட பொருள்கள் கடைகளில் இருந்ததால் தீ கொழுந்துவிட்டு எரிந்தது. இது குறித்துத் தகவலின் பேரில் நாகர்கோவில், கன்னியாகுமரி பகுதிகளிலிருந்து தீயணைப்பு வாகனங்கள் சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டன. இப்போது தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருக்கிறது. இருப்பினும், கன்னியாகுமரி கடற்கரை புகை மண்டலமாகவே காட்சி அளிக்கிறது. அதிர்ஷ்டவசமாக உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை.

எரிந்து நாசமான கடைகள்
எரிந்து நாசமான கடைகள்

இந்தத் தீ விபத்தில் சுமார் 69-க்கும் மேற்பட்ட கடைகள் முற்றிலும் எரிந்து சாம்பலாகின. மேலும், சில கடைகளில் உள்ள பொருள்கள் கருகிய நிலையில் காணப்படுகின்றன. இந்தத் தீ விபத்தில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான பொருள்கள் எரிந்து நாசமாகியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இழப்புகள் குறித்து கணக்கிடும் பணி நடந்துவருகிறது. கடைகள் எரிந்து நாசமானதால், வியாபாரிகள் சோகத்தில் இருக்கிறார்கள். தீ விபத்துக்கான காரணம் குறித்து கன்னியாகுமரி போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர். மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்திருப்பதாக போலீஸார் தெரிவித்தனர்.

அடுத்த கட்டுரைக்கு