Published:Updated:

`திடீர் ஓசை; 20 அடி உயரத்துக்குத் தீ ஜுவாலை!' - கோவிலூரைப் பதறவைத்த மின்வாரிய விபத்து

சிவகங்கை மாவட்டத்தில் துணை மின் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள மின்மாற்றிகள் தீயில் கருகின.

கோவிலூர் தீ விபத்து
கோவிலூர் தீ விபத்து

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை அடுத்த கோவிலூரில் தமிழ்நாடு மின்சாரவாரியத்துக்குச் சொந்தமான துணை மின்நிலையம் இயங்கி வருகிறது. வெளிமாவட்டங்களிலிருந்து பெறப்படும் மின்சாரம், இந்தத் துணை மின்நிலையம் வாயிலாக சிவகங்கை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் பிரித்து அனுப்பப்படுகிறது.

கோவிலூர் விபத்து
கோவிலூர் விபத்து

தூத்துக்குடி, நெய்வேலி உள்ளிட்ட பல்வேறு இடங்களிலிருந்து பெறப்படும் மின்சாரம், இந்தத் துணை மின்நிலையத்தின் மூலம் பிரிக்கப்பட்டு காரைக்குடி, திருப்பத்தூர், தேவகோட்டை, திருவாடானை உட்பட பல பகுதிகளுக்கு அனுப்பப்படுகிறது.

கோவிலூர் துணைமின் நிலையத்தில் தலா 230 கே.வி திறன் கொண்ட 3 மின்மாற்றிகள் பயன்பாட்டில் இருக்கின்றன. இந்நிலையில் துணை மின்நிலையத்தில் இன்று மாலை எதிர்பாராத விதமாக மின்மாற்றி வெடித்தது. இதனால் அப்பகுதியில் கரும்புகை சூழ்ந்தது. உடனடியாக இந்த விபத்து குறித்து பணியாளர்களும் பொதுமக்களும் தீயணைப்பு துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.

கோவிலூர் தீ விபத்து
கோவிலூர் தீ விபத்து

சம்பவ இடத்துக்குக் காரைக்குடி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை பலமணி நேரம் போராடி அணைத்தனர். விபத்து நடந்த பகுதியில் உடனடியாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால், பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.

மின் மாற்றியில் தீப்பற்றியதில் சுமார் 20 அடிக்கு மேலாக தீ ஜுவாலைகள் பரவி அப்பகுதியே புகை மண்டலமாகக் காட்சி அளித்தது.

கோவிலூர் தீ விபத்து
கோவிலூர் தீ விபத்து

எரிந்து முற்றிலும் சேதமான மின்மாற்றியின் மதிப்பு பல கோடி இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. அதிகாரிகளின் அலட்சியமே தீ விபத்திற்குக் காரணம் எனப் பொதுமக்கள் குற்றம் சாட்டினர். இந்தத் தீ விபத்து காரணம் குறித்து தனி விசாரணை நடத்த உயர் அதிகாரிகள் நாளை வர உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.