Published:Updated:

`தீபாவளி நாளில் வீர மரணமடைந்த தீயணைப்பு வீரர்கள்; காரணம் யார்..?!’ - கொதிக்கும் மதுரை மக்கள்

தீ விபத்து கட்டடம்
தீ விபத்து கட்டடம்

`மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது’ என்று காவல்துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டாலும், `விதிமீறல்களைக் கண்டுகொள்ளாத அதிகாரிகள்தான் இதற்கு முக்கியக் காரணம்’ என்கிறார்கள் பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும்.

தீபாவளி அன்று தங்கள் குடும்பத்தை மறந்து, மக்களைக் காக்க கடமையாற்றி உயிர்விட்ட தீயணப்பு வீரர்களை நினைத்து கண்ணீர்விடுகிறார்கள் மதுரை மக்கள். அதேநேரம் இது போன்ற சம்பவங்கள் நடக்க காரணமான விதிமீறிய கட்டடங்களைச் செயல்பட அனுமதித்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று பொதுமக்கள் புகாரும் எழுப்பிவருகிறார்கள்.

தீ விபத்து
தீ விபத்து

துணிக்கடையில் ஏற்பட்ட தீ விபத்தை அணைக்கச் சென்ற வீரர்கள் சிவராஜன், கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கட்டடம் இடிந்து விழுந்து மரணமடைந்ததும், கல்யாணகுமார், சின்னகருப்பு ஆகியோர் பலத்த காயமடைந்து தீவிர சிகிச்சையில் இருப்பதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

என்ன நடந்தது..?

மதுரையில் தீபாவளியை முன்னிட்டு நள்ளிரவு வியாபாரம் தீவிரமாக நடந்துகொண்டிருந்த 13-ம் தேதி இரவில் தெற்குமாசி வீதி, விளக்கத்தூன் அருகில் நவபத்கானா தெருவில் பாபுலால் என்பவருக்குச் சொந்தமான `சஞ்சய் டெக்ஸ்டைல்ஸ்’ என்ற துணிக்கடையை அடைத்துவிட்டுச் சென்ற சிறிது நேரத்தில் அந்தக் கடையில் தீப்பிடித்திருக்கிறது. இதை கவனித்த அருகிலுள்ள கடைக்காரர்கள் தீயணைப்புத்துறைக்கு போன் செய்தார்கள்.

சிவராஜன்
சிவராஜன்

அதற்குள் அந்தத் துணிக்கடை, யாரும் அருகில் நெருங்கி வர முடியாத அளவுக்குக் கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது. அருகிலுள்ள மூன்று தீயணைப்பு நிலையங்களைச் சேர்ந்த மீட்புப்படையினர் விரைந்து வந்து தீயை அணைக்க முயன்றனர்.

தீயை அணைக்கத் தீவிரமாகச் செயல்பட்ட சிவராஜன், கல்யாணகுமார், கிருஷ்ணமூர்த்தி, சின்னக்கருப்பு ஆகியோர் கட்டடத்துக்குள் சிக்கிக்கொண்டனர். உள்ளே மாட்டிக்கொண்டதை சிவராஜன் சக ஊழியர்களுக்கு போன் செய்து தெரிவித்திருக்கிறார். ஆனாலும் அவர்களை மீட்க உடனே உள்ளே செல்ல முடியாத அளவுக்கு தீ எரிந்துகொண்டிருந்தது. கட்டடத்தின் முதல் தளமும் இடிந்து விழுந்துகொண்டிருந்தது. ஒருவழியாக இடிபாடுகளில் சிக்கிய கல்யாணகுமார், சின்னக்கருப்பு இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

பிறந்தநாளில் சோகம்

அதிகாலை நேரத்தில் உள்ளே இறந்துகிடந்த வீரர்கள் சிவராஜன், கிருஷ்ணமூர்த்தி இருவரின் உடல்களை மீட்டனர். தீயை அணைக்க உயிரை துச்சமாக நினைத்துச் செயல்பட்ட இரண்டு இளம் வயது வீரர்கள் பலியானது அனைவரையும் அதிர்ச்சியடையவைத்திருக்கிறது. தகவல் தெரிந்து இருவரின் குடும்பத்தினரும் கதறினார்கள். இதில் பலியான திருப்புவனத்தைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்திக்கு அன்றைய தினம் பிறந்தநாள் என்பது கூடுதல் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

கிருஷ்ணமூர்த்தி
கிருஷ்ணமூர்த்தி

இந்தச் சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தச் சோகச் சம்பவத்துக்கு இரங்கல் தெரிவித்த முதலமைச்சர், பலியானவர்களின் குடும்பத்துக்கு ரூ.25,00,000-மும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் அளிக்கப்படும் என்று அறிவித்திருக்கிறார். இவர்களுக்கு அஞ்சலி செலுத்த தீயணைப்புத்துறை இயக்குநர் ஜாபர் சேட் உட்பட அதிகாரிகளும், மதுரை கலெக்டரும் வந்திருந்தனர். துப்பாக்கிக்குண்டுகள் முழங்க இறுதி அஞ்சலி நடந்தது.

``சம்பவம் நடந்த நவபத்கானா தெரு மிகவும் குறுகிய பகுதி. இதில் சிறிய, பெரிய துணிக்கடைகள் அதிகமாக உள்ளன. சென்னை தி.நகர்போல சாதாரண நாள்களிலேயே வந்து செல்லும் ஆயிரக்கணக்கான மக்களால் இந்தப் பகுதி நெருக்கடிக்கு உள்ளாகும். தீபாவளி போன்ற பண்டிகைக் காலங்களில் சொல்லவே வேண்டியதில்லை.

தீ விபத்து
தீ விபத்து

சின்ன விபத்து ஏற்பட்டால்கூட ஒதுங்க இடம் இல்லை. இந்தப் பகுதியில் நான்கு மாடிகொண்ட பிரபலமான மிகப்பெரிய துணிக்கடையும் இருக்கிறது. ஆபத்து காலங்களில் பொதுமக்களை பாதுகாக்க எந்த ஏற்பாடும் இல்லாத நிலையில் புதிது புதிதாக துணிக்கடைகள் திறக்க அதிகாரிகள் அனுமதி கொடுத்துக்கொண்டேயிருக்கிறார்கள்'' என்று பொதுமக்கள் கூறுகிறார்கள்.

மதுரையில் விதிகளை மீறிய கட்டடங்கள் கட்ட அனுமதிக்கக் கூடாது. கட்டியவற்றை அகற்ற வேண்டும் என்று சட்டப் போராட்டம் நடத்திவரும் வழக்கறிஞர் அன்புநிதியிடம் பேசினோம். ``மதுரையில் கட்டப்பட்டிருக்கும் பெரும் வணிக வளாகங்கள் மற்றும் நிறுவனக் கட்டடங்களில் பெரும்பாலானவை விதி மீறப்பட்டுக் கட்டப்பட்டிருக்கின்றன. இவற்றைக் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய நகர் ஊரமைப்புத்துறையும், மாநகராட்சி நிர்வாகமும் பெயருக்கு ஒரு நோட்டீஸை மட்டும் சம்பந்தப்பட்டவர்களுக்கு வழங்குகின்றன. அதன் பிறகு அந்த விதிமீறல் கட்டடத்துக்கு மின் இணைப்பு, குடிநீர் இணைப்பு மற்றும் கழிவுநீர் செல்லும் வசதிகளை லஞ்சம் வாங்கிவிட்டு மாநகராட்சி அதிகாரிகள் அனுமதிக்கிறார்கள்.

வழக்கறிஞர் அன்புநிதி
வழக்கறிஞர் அன்புநிதி

இது போன்ற விதிமீறல் கட்டடங்கள் 100-க்கும் மேல் இருக்கிறது. அனுமதி அளித்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இது சம்பந்தமாக நான் ஏற்கெனவே தாக்கல் செய்த வழக்கு நிலுவையில் இருக்கிறது. இரண்டு வீரர்கள் பலியாகக் காரணமான அந்தத் துணிக்கடைக்கு முறையான அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறதா, நெருக்கடியான அந்தப் பகுதியிலுள்ள மற்ற கடைகளில் பாதுகாப்பு வசதிகள் இருக்கின்றனவா என்பதை அதிகாரிகள் நேர்மையாக விசாரிக்க வேண்டும். அப்போதுதான் இது போன்ற மோசமான சம்பவங்கள் இனி நிகழாது'' என்றார்.

`மின்கசிவால் தீவிபத்து ஏற்பட்டிருக்கிறது’ என்று காவல்துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டாலும், `விதிமீறல்களைக் கண்டுகொள்ளாத அதிகாரிகள்தான் இதற்கு முக்கியக் காரணம்’ என்கிறார்கள் பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும். இது குறித்து நேர்மையான தீவிர விசாரணையை தமிழக அரசு நடத்த வேண்டும் என்பதே மதுரை மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு