Published:Updated:

குமரி: மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் கருவறையில் தீ விபத்து! - அதிர்ச்சியில் கதறி அழுத பக்தர்கள்

மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில்
மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில்

கன்னியாகுமரி மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் கருவறையில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பக்தர்களை அதிர்ச்சியும், வருத்தமும் அடைய செய்துள்ளது.

தமிழ்நாடு முழுவதும்  கொரோனா ஊரடங்கால் வழிப்பாட்டு தலங்களில் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அதே சமயம் ஆகம விதிப்படி கோயில் பூஜைகள் தடையில்லாமல் நடைபெற்று வருகின்றன. கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்திப்பெற்ற மண்டைக்காடு பகவதியம்மன் கோயில். அம்மன் புற்று வடிவில் சுயம்புவாக தோன்றி காட்சி அளிப்பது இக்கோயிலின் சிறப்பு. இக்கோயிலின் மாசி கொடை விழாவின்போது கேரள மாநிலத்தைச் சேர்ந்த பெண் பக்தர்கள் 41 நாட்கள் விரதம் இருந்து இருமுடி கட்டி புனிதப்யாத்திரையாக வந்து அம்மனை தரிசிப்பார்கள். பின்னர் இருமுடியில் கொண்டுவரும் பொருட்களில் பொங்கலிட்டு வழிபாடு நடத்துவார்கள். இந்த கோயிலின் கருவறையின் மேல்பகுதி கேரள பாரம்பர்ய கட்டடக்கலையின்படி ஓடு வேயப்பட்ட கூரை அமைக்கப்பட்டுள்ளது.

கொழுந்துவிட்டு எரியும் தீ
கொழுந்துவிட்டு எரியும் தீ

பிரசித்திபெற்ற மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் இன்று காலை 6.30 மணிக்கு பூஜைகளும், தீபாராதனையும் நடைப்பெற்றது. பின்னர் கோயில் குருக்கள் கருவறையை விட்டு வெளியே வந்தனர். சுமார் 7 மணியளவில் திடீரென கருவறை கூரையில் தீ பிடித்தது. கோயில் குருக்களும் பணியாளர்களும் தீயை அணைக்க முயன்றனர். அதற்குள் மேற்கூரை முழுவதும் தீ படர்ந்தது. தீ எரிவதை பார்த்த அப்பகுதி பெண் பக்தர்கள் கண்ணீர்விட்டு கதறி அழுதனர்.

இதுகுறித்து குளச்சல் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. குளச்சல் மற்றும் தக்கலை தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்று தீயை அணைத்தனர். ஆனாலும் கோயில் கருவறையின் மேற்கூரை முழுவதும் எரிந்து நாசமாகிவிட்டது. இதையடுத்து கோயிலுக்குள் இருந்த பூஜைப் பொருட்கள் மீட்கப்பட்டன. புற்று வடிவிலான மூலவர் அம்மனுக்கு எந்த சேதமும் ஏற்படவில்லை. மேலும் கோயில் ஊழியர்கள், பேரூராட்சி பணியாளர்கள், ஆர்.எஸ்.எஸ் அமைப்பை சேர்ந்தவர்கள் கோயிலின் மேற்கூரையில் சேதமான ஓடுகளை அகற்றினர். மேலும் கோயிலை சுத்தப்படுத்தும் பணியையும் செய்தனர்.

மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில்
மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில்

முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக தகவல் தொழில் நுட்ப துறை அமைச்சர் மனோ தங்கராஜ், குமரி கலெக்டர் அரவிந்த், எம்.எல்.ஏ-க்கள் எம்.ஆர்.காந்தி, தளவாய்சுந்தரம், பிரின்ஸ் மற்றும் அரசியல்கட்சி பிரமுகர்கள், இந்து இயக்க நிர்வாகிகள் மற்றும் பக்தர்கள் கோயில் வளாகத்தில் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து கன்னியாகுமரி மாவட்ட திருக்கோயில்கள் இணை ஆணையர் (பொ) செல்வராஜ் கூறுகையில், "கருவறையில் எரிந்துகொண்டிருந்த விளக்கில் இருந்த நெருப்பு, அம்மனுக்கு சார்த்தப்பட்ட பட்டு மூலம் கூரையில் தீ எரிய காரணமாக அமைந்திருக்கலாம் என கருதுகிறோம். மூலவரான அம்மனுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இன்று பரிகார பூஜைகள் செய்யப்படும். உடனடியாக கோயிலின் மேல் பகுதியில் தற்காலிக கூரை அமைக்கப்படும். அதன்பிறகு பழமை மாறாமல் பாரம்பர்யப்படி மேற்கூரை அமைக்கப்படும்" என்றார்.

கோயில் கருவறைக்குள் நடமாடும் எலி, எரிந்துகொண்டிருந்த விளக்குத்திரியை எடுத்து ஓட்டுக்கூரை மீது வைத்ததால் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. இதுகுறித்து முன்னாள் மத்தியமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறுகையில், "மண்டைக்காடு பகவதியம்மன் கோயில் தீ விபத்து துரதிருஷ்டமானது. கோயில் முன் உள்ள  கோபுர கும்பாபிஷேகத்திற்கு முன்பு பக்தர்கள் தேவ பிரசன்னம் பார்த்தனர். அப்போது இந்த தீ விபத்து குறித்து அன்றே எச்சரிக்கை கூறப்பட்டது. கவனமாக இருந்திருக்க வேண்டும். இதற்கு காரணமானவர்களை கோயில் நிர்வாகம் ஆய்வு செய்து விசாரணை நடத்த வேண்டும். ஒளிவு மறைவில்லாமல் விசாரணை மேற் கொள்ள வேண்டும். தவறு நடந்திருந்தால் துறை சார்ந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

தீ விபத்தை பார்வையிடும் அமைச்சர் மனோதங்கராஜ், கலெக்டர் அரவிந்த்
தீ விபத்தை பார்வையிடும் அமைச்சர் மனோதங்கராஜ், கலெக்டர் அரவிந்த்

தமிழக அமைச்சர் மனோ தங்கராஜ் கூறுகையில், "மண்டைக்காடு கோயில் தீ விபத்து குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் காலையிலேயே என்னை தொடர்புக்கொண்டு நிலவரம் கேட்டறிந்தார். ஒவ்வொரு பிரச்னைகளிலும் முதல்வர் கவனம் செலுத்தி வருகிறார். உடனே மறு சீரமைப்பு பணிகளுக்கு உத்தரவாதம் அளிக்க கூறினார். உடனே பரிகார பூஜையும் நடத்தப்படும். முதற்கட்ட விசாரணையில் இது விபத்து என தெரியவருகிறது" என்றார்.

இதற்கிடையில் இந்து கோயில் கூட்டமைப்பு சார்பில் கோயில் நிர்வாகம் மற்றும் குருக்களை கண்டித்து போராட்டம் நடத்தப்பட்டது. இணை ஆணையர் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் கருவறையில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பக்தர்களை அதிர்ச்சியும், வருத்தமும் அடைய செய்துள்ளது.

அடுத்த கட்டுரைக்கு