Published:Updated:

`அடுத்தடுத்து வெடித்த சிலிண்டர்கள்!’ - ஊட்டியைப் பதறவைத்த நள்ளிரவு தீ விபத்து

ஊட்டி தீ விபத்து
ஊட்டி தீ விபத்து

திடீரென பயங்கர வெடிசத்தத்துடன் சிலிண்டர்கள் வெடித்துச் சிதறி, மேலும், பல கடைகளுக்கு தீ பரவியது. இந்தப் பயங்கர தீயால் ஊட்டி நகருக்கு மேல் வானமே சிவப்பு நிறத்தில் மாறியது.

ஊட்டி நகரின் மையப்பகுதியில் செயல்பட்டு வருகிறது, நூற்றாண்டு பழைமைவாய்ந்த நகராட்சி சந்தை. இந்தச் சந்தையில் சிறியதும் பெரியதுமாக சுமார் 1,300 கடைகள் உள்ளன.

ஊட்டி தீ விபத்து
ஊட்டி தீ விபத்து

வாட்டிவதைக்கும் கொரோனாவாலும், அதனால் கொண்டுவரப்பட்ட பொது முடக்கத்தாலும் கடைகளை மைதானத்திற்கும் பேருந்து நிலையத்திற்கும் இடமாற்றம் செய்து பெரும் துயர்பட்டு, பொதுமுடக்க தளர்வுக்குப் பின் இப்போதுதான் சந்தையில் மெல்ல கடைகளை நடத்தத் துவங்கினர்.

இத்தகைய சோதனையான காலகட்டத்தில் இவர்களுக்கு மேலும் துயரளிக்கும் வகையில் நள்ளிரவில் தீ விபத்து ஏற்பட்டு 50-க்கும் அதிகமான கடைகள் எரிந்து சாம்பலாயின. விடிய விடிய போராடி தீயை அணைத்தும் பயனின்றி கடைகள் எரிந்து நாசமாயின.

ஊட்டி தீ விபத்து
ஊட்டி தீ விபத்து

இந்த தீ விபத்து குறித்து தீயணைப்பு வீரர் ஒருவர் கூறுகையில், ``நள்ளிரவில் அழைப்பு வந்தது. வீரர்களுடன் விரைந்துவந்து களமிறங்கினோம். பெரும்பாலான கடைகள் 2 மீட்டர் முதல் 3 மீட்டர் அகலம் மற்றும் நீளம் கொண்ட கடைகளாகவே உள்ளன.

மிகவும் நெருக்காமாக இருந்த கடைகளில் உள்ள மரப்பலைகள் தீயில் நன்கு எரிந்தன. ஏதோ ஒரு கடையில் மின்கசிவால் தீ ஏற்பட்டுள்ளது. கடையில் இருந்த சமையல் எரிவாயு சிலிண்டரும் வெடித்துள்ளது. இதனால் தீ 60-க்கும் மேற்பட்ட கடைகளுக்கும் பரவியது. தீயை அணைக்க நகராட்சி தண்ணீர் லாரிகளும் பயன்படுத்தப்பட்டது. சுமார் 4 மணி நேரத்திற்கு மேல் போராடியே தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்தோம்" என்றார்.

தீ விபத்தில் கடையை இழந்த சிறு வியாபாரி ஒருவர் நம்மிடம் பேசுகையில்,``நள்ளிரவில் பக்கத்துக்கு கடைக்காரர் போன் மூலம் அழைத்து, `கடைகள் எல்லாம் தீப்பற்றி எரிகிறது. உடனே வா' எனச் சொன்னார். வந்து பார்த்தபோது கடைகள் எரிந்துகொண்டிருந்தன. ஊட்டி நகரே அலறும் அளவிற்கு திடீரென பயங்கர வெடிசத்துடன் சிலிண்டர்கள் வெடித்துச் சிதறி, மேலும் பல கடைகளுக்குத் தீ பரவியது. இந்தப் பயங்கர தீயால் ஊட்டி நகருக்கு மேல் வானமே சிவப்பு நிறத்தில் மாறியது. பொது முடக்கத்தால் வாழ்வாதாரத்தை இழந்து வியாபாரம் இல்லாமல் தவித்து வருகிறோம். இது போதாதென்று கடன்பட்டு, போட்ட முதலெல்லாம் தீயில் சாம்பலானது. எப்படி வாழப்போகிறோம் எனத் தெரியவில்லை. இழப்பீடு கிடைத்தால் கொஞ்சம் மீள்வோம்’’ எனக் கண்ணீருடன் தெரிவித்தார்.

ஊட்டி தீ விபத்து
ஊட்டி தீ விபத்து

தீ விபத்தின்போது இரண்டு சமையல் எரிவாயு சிலிண்டர்கள் அடுத்தடுத்து வெடித்துச் சிதறின. பயங்கர வெடி சத்தத்தால் தூங்கிக்கொண்டிருந்த ஊட்டி நகர மக்கள் அச்சத்துடன் வீட்டை விட்டு வெளியே ஓடி வந்துள்ளனர். தீ விபத்திற்கான காரணம் குறித்து ஊட்டி பி1 காவல் நிலைய அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அடுத்த கட்டுரைக்கு