புதுச்சேரி விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் இருக்கும் திருபுவனை கிராமத்தில் பிளாஸ்டிக் தொழிற்சாலை இயங்கி வருகிறது. திருவண்டார்கோவிலைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவருக்குச் சொந்தமான இந்த தொழிற்சாலையில் அலுமினியம் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் மறுசுழற்சி செய்யப்படுகின்றன. இந்த நிலையில், இன்று மாலை 20-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் அங்கு பணியாற்றிகொண்டிருந்தனர். அப்போது தொழிற்சாலையின் ஒரு பகுதியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அப்போது அங்கு பணியிலிருந்த ஊழியர்கள் தீயை அணைக்க முயற்சி செய்தனர். ஆனால் ஒரு சில நிமிடங்களிலேயே தீ தொழிற்சாலை முழுவதும் பரவி கொழுந்துவிட்டு எரிந்தது.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
அதனால் பல அடி உயரத்துக்கு எழுந்த கரும்புகை, அந்தப் பகுதி கிராமங்களை சூழ்ந்தது. தகவலறிந்ததும் 3 தீயணைப்பு வாகனங்களில் சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள், உள்ளூர் மக்கள் உதவியுடன் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தொழிற்சாலை முழுவதும் தீ பரவ தொடங்கியதுமே, ஊழியர்கள் அனைவரும் தொழிற்சாலையை விட்டு வெளியேறிவிட்டதால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. மேலும் இந்த விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமாகியுள்ளன. தொடர்ந்து விபத்து குறித்து திருபுவனை காவல்நிலைய காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் மின்கசிவு காரணமாகவே தீ விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.