Published:Updated:

சிவகாசி: பட்டாசு குடோனில் வெடி விபத்து! - இரண்டாவது நாளாக மீட்பு பணிகள் தீவிரம்

சிவகாசியில் பேன்சி ரக பட்டாசு தயாரிப்பிற்கான பேப்பர் குழாய் தயார் செய்யும் கம்பெனியில் இருப்பு வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் பயங்கர சத்தத்துடன் வெடித்ததில் 2 மாடிக் கட்டடம் இடிந்து தரைமட்டமானது. இதில், சிக்கியவர்களை மீட்கும் பணி 2வது நாளாக நடந்து வருகிறது.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகில் உள்ள ரயில்வே ரிசர்வ் லைன் காலனியில் மதுரையைச் சேர்ந்த ராமநாதன் என்பவருக்குச் சொந்தமான பட்டாசு பேப்பர் குழாய் கம்பெனி செயல்பட்டு வருகிறது. இவர், பேப்பர் குழாய் உற்பத்திக்கான உரிமம் பெற்று கம்பெனியை நடத்தி வருகிறார். இரண்டு மாடிக் கட்டடத்தில் அண்டர்கிரவுண்ட் குடோனாகவும், மேல்தளம் பேன்சி ரகப் பட்டாசுகள் தயாரிப்பிற்குப் பயன்படுத்தப்படும் பேப்பர் குழாய்கள் தயாரிக்கும் கம்பெனியாகவும், மேல் மாடி வீடாகவும் பயன்பாட்டில் இருந்துள்ளது.

மீட்பு பணிகள்
மீட்பு பணிகள்

இங்கு நேற்று வழக்கம் போல் பேப்பர் குழாய் தயாரிப்பு நடந்து வந்துள்ளது. இதில், அதில், அப்பகுதியைச் சேர்ந்த 6 பேர் வேலை செய்து வந்ததாகச் சொல்லப்படுகிறது. அண்டர்கிரவுண்ட் பகுதியில் அனுமதியின்றி பட்டாசுகள் இருப்பு வைக்கப்பட்டிருந்ததாகவும் சொல்லப்படுகிறது. இந்த நிலையில், மாலையில் பட்டாசு இருப்பு வைக்கப்பட்டிருந்த பகுதியில் திடீரென தீப்பற்றி விபத்து ஏற்பட்டது. இதில், அங்கு வேலை செய்து கொண்டிருந்த வேல்முருகன், மனோஜ்குமார் ஆகியோர் காயங்களுடன் தப்பி ஓடி வந்தனர்.

இதையடுத்து பயங்கர சத்தத்துடன் அடுத்தடுத்த பட்டாசுகள் வெடித்ததில் இரண்டு மாடிக் கட்டடமும் இடிந்து தரைமட்டமானது. இதில் வெளியான கரும்புகை 3 கி.மீ தூரம் வரை பரவி புகைமூட்டமானது. கட்டட இடிபாடுகளுக்கு இடையில் 4 பேர் வரை சிக்கியிருக்கலாம் எனக் கூறப்பட்ட நிலையில் தீயணைப்புத்துறையினர் தொடர்ந்து 4 ஜே.சி.பி உதவியுடன் மீட்புப்பணிகளில் ஈடுபட்டனர். இதற்கிடையில் மழை பெய்ததாலும் மீட்புப்பணிகளில் தொய்வு ஏற்பட்டது. பட்டாசு குடோனில் மருந்து வைக்கப்பட்டிருந்தால் தொடர் வெடி விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது என்பதாலும் மீட்புப்பணிகள் நேற்று இரவுடன் நிறுத்தி வைக்கப்பட்டன.

தொடரும் மீட்புப்பணிகள்
தொடரும் மீட்புப்பணிகள்

இடிபாடுகளைச் சுற்றிலும் 200 மீட்டர் தொலைவில் வசித்து வருபவர்களை தற்காலிகமாக வேறு இடங்களில் சென்று தங்கிட அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் இரண்டாவது நாளாக இன்று காலை முதல் மீட்புப் பணிகள் மீண்டும் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கட்டடத்தின் உரிமையாளர் ராமநாதன் அவரின் மனைவி பஞ்சவர்ணம் ஆகியோர் தலைமறைவாகி விட்டதாகவும் சொல்லப்படுகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு