Published:Updated:

சட்டவிரோத ஃபேன்சி ரக பட்டாசு தயாரிப்பு!- விருதுநகர் பட்டாசு ஆலை தீ விபத்தில் 8 பேர் பலியான சோகம்

இடிந்த அறைகள்
இடிந்த அறைகள்

விருதுநகரில் பட்டாசு ஆலையில் அனுமதியின்றி ஃபேன்சி ரக பட்டாசு தயாரிப்பின் போது ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர். படுகாயமடைந்த 10 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர், சிவகாசி சுற்றுவட்டாரப் பகுதிகளில் 750-க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றன. நாட்டின் ஒட்டுமொத்த பட்டாசுத் தேவையில் 95 சதவிகித தேவையை இப்பகுதிகளில் உள்ள பட்டாசு ஆலைகளே பூர்த்தி செய்கின்றன. இத்தொழிலில் நேரடியாகவும் மறைமுகமாகவும் சுமார் 5 லட்சம் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.

விபத்தில் சிதறிய உடல்கள்
விபத்தில் சிதறிய உடல்கள்

இந்த ஆலைகளில் பட்டாசு உற்பத்தி பாதுகாப்பாக மேற்கொள்ளப்பட்டு வந்தாலும், எதிர்பாராமல் ஏற்படும் திடீர் தீ விபத்துகளால் உயிரிழப்புகளும் ஏற்பட்டு விடுகின்றன. இந்நிலையில் இன்று ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் 8 பேர் உயிரிழந்தனர். விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகேயுள்ள வெள்ளையாபுரத்தைச் சேர்ந்தவர் கணேசன். இவருக்குச் சொந்தமான `ராஜம்மாள்’ என்ற பெயரில் பட்டாசுஆலை சிப்பிப்பாறை கிராமத்தில் இயங்கி வருகிறது.

மாவட்ட வருவாய் அலுவலரின் உரிமம் பெற்ற இந்த ஆலையில் வழக்கம்போல் இன்று பட்டாசு உற்பத்தி நடைபெற்று வந்தது. 7 அறைகள் கொண்ட இந்த ஆலையில் ஆண், பெண் என சுமார் 30 பட்டாசுத் தொழிலாளர்கள் பட்டாசு உற்பத்தியில் ஈடுபட்டு வந்தனர். மாவட்ட வருவாய் அலுவலரின் உரிமம் பெற்றுக் கொண்டு, அனுமதியில்லாமல் சட்டவிரோதமாக ஃபேன்சி ரக பட்டாசுகள் உற்பத்தி நடைபெற்று வந்துள்ளது.

காயம்பட்டவரை தூக்கிச் செல்லும் ஊர்மக்கள்
காயம்பட்டவரை தூக்கிச் செல்லும் ஊர்மக்கள்

அப்போது வெடி மருந்துகளில் ஏற்பட்ட உராய்வின் காரணமாக திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் அடுத்தடுத்து இரண்டு அறைகள் இடிந்து முற்றிலும் தரைமட்டமாகின. இந்த விபத்தில் ஆலையில் பட்டாசு உற்பத்தியில் ஈடுபட்ட தென்காசி மாவட்டம் மைப்பாறை கிராமத்தைச் சேர்ந்த ராணி, ஜெயபாரதி, பத்திரகாளி, வேலுத்தாய், தாமரைச்செல்வி, தங்கம்மாள் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மேலும், படுகாயமந்த காளியம்மாள், முருகையா, மாடசாமி, அய்யம்மாள், பொன்னுதாய், சுப்பம்மாள், பேச்சியம்மாள், பாலசுப்பிரமணியம், முருகலட்சுமி, ஜெயராமன், சங்கரேஸ்வரி உள்ளிட்ட 10 பேர் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதில் முருகையா, காளியம்மாள் ஆகியோர் சிகிச்சை பலனில்லாமல் உயிரிழந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 8 ஆக உயர்ந்தது. இதில் மாடசாமி, பொன்னுத்தாய், பேச்சியம்மாள், முருகலட்சுமி ஆகிய நான்கு பேரும் மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கும் பாலசுப்பிரமணியம் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டனர்.

ஊர் மக்கள்
ஊர் மக்கள்

மற்றவர்கள் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவ்விபத்து குறித்து ஏழாயிரம்பண்ணை போலீஸார் விசாரனை நடத்தி வருகின்றனர். தகவல் அறிந்த சிவகாசி, கழுகுமலை, வெம்பக்கோட்டை தீயணைப்புத்துறையினர் 3 வாகனங்களில், சுமார் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

கடந்த மாதம் சாத்தூர் அருகிலுள்ள சின்னகாமன்பட்டியிலுள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிறுவன் உட்பட மூன்று பேர் உயிரிழந்தனர். இந்த மாதத் தொடக்கத்தில் காக்கிவாடன்பட்டியிலுள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். பட்டாசு ஆலைகளில் அடுத்தடுத்து நடந்து வரும் திடீர் தீ விபத்துகள், பட்டாசு தொழிலாளர்களை வேதனை அடையச் செய்துள்ளது. “சில பட்டாசு ஆலைகளில் உற்பத்தியைப் பெருக்கி அதிக லாபம் பார்ப்பதற்காக சட்டத்தை மீறி பட்டாசு உற்பத்தி அறைகளில் கூடுதலாக தொழிலாளர்களை வைத்து வேலை வாங்கப்படுவதும், வேதிப் பொருள்களின் வீரியம் தெரியாமல் மருந்துகள் கையாளப்படுவதும்தான் பெரும் விபத்துகளுக்குக் காரணம்.

தீயை அணைத்த வீரர்கள்
தீயை அணைத்த வீரர்கள்

உற்பத்தியாளர்கள் விதிமுறைப்படி ஆலைகளை நடத்துவதும் தொழிலாளர்களுக்குப் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதால் மட்டுமே வெடிவிபத்துகளைத் தடுக்க முடியும்” என்றனர் பட்டாசு ஆலை உரிமையாளர்கள்.

அடுத்த கட்டுரைக்கு