Published:Updated:

`வேண்டாதவர்கள் செய்த வேலையா.. மின்கசிவா?' - வேலூரில் திடீர் தீயால் 7,000 கோழிகளுக்கு நேர்ந்த சோகம்

கோழிப் பண்ணையில் ஏற்பட்ட தீ
கோழிப் பண்ணையில் ஏற்பட்ட தீ

கே.வி.குப்பம் அருகே இரண்டு கோழிப் பண்ணைகளில் ஏற்பட்ட தீ விபத்தில் 7,000 கோழிகள் செத்து மடிந்தன.

வேலூர் மாவட்டம், கே.வி.குப்பத்தை அடுத்த மாச்சனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சிதம்பரம். அதே பகுதியில், இவருக்குச் சொந்தமாக உள்ள இரண்டு கோழிப் பண்ணைகளில் நேற்றிரவு திடீரென தீப்பிடித்தது. கூரையில் பற்றி எரிந்த தீ, பண்ணையின் அனைத்துப் பகுதிகளுக்கும் மளமளவெனப் பரவியது. இரவு நேரம் என்பதால் உரிமையாளர் சிதம்பரம் பண்ணையில் இல்லை.

கோழிப் பண்ணையில் ஏற்பட்ட தீ
கோழிப் பண்ணையில் ஏற்பட்ட தீ

அக்கம்பக்கத்தினர் சிதம்பரத்துக்குத் தகவல் தெரிவித்தனர். அவர் பதறியடித்துக் கொண்டு பண்ணைக்கு வந்து பார்த்தபோது தீயின் தாக்கம் அதிகமாக இருந்தது. உடனடியாக, குடியாத்தம் தீயணைப்புத் துறையினருக்கும் கே.வி.குப்பம் போலீஸாருக்கும் அப்பகுதி மக்கள் தகவல் கொடுத்தனர்.

கொரோனா ஊழல்... அரசின் மறுப்பும் ஜூ.வி-யின் கேள்விகளும்!

தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து இரண்டு மணிநேரத்துக்கும் மேலாக தண்ணீரைப் பீய்ச்சியடித்து தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர். எனினும், இரண்டு பண்ணைகளிலும் இருந்த சுமார் 7,000 கறிக்கோழிகள் தீயில் கருகிச் செத்து மடிந்தன. இந்தச் சம்பவத்தில் உரிமையாளர் சிதம்பரத்துக்கு பல லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

தீ விபத்துக்குப் பிறகு பண்ணையின் நிலை
தீ விபத்துக்குப் பிறகு பண்ணையின் நிலை

பண்ணையில் திடீரென தீப்பற்றியதிலும் சந்தேகம் எழுந்துள்ளது. உரிமையாளர் சிதம்பரத்துக்கு ஆகாத நபர்கள் யாரேனும் தீ வைத்திருக்கலாம் என்கிற பரபரப்பும் நிலவுகிறது.

இது சம்பந்தமாக, கே.வி.குப்பம் போலீஸாரிடம் கேட்டபோது, ``மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது. பண்ணையின் உரிமையாளர் தரப்பில் இதுவரை புகார் தரப்படவில்லை’’ என்றனர்.

`1 கிலோ கோழி ரூ.10 ; உயிருடன் புதைக்கப்பட்ட 6000 கோழிகள்!’ -வியாபாரிகளை உறையவைத்த கொரோனா வதந்தி
அடுத்த கட்டுரைக்கு