Election bannerElection banner
Published:Updated:

விழுப்புரம்: தனியார் ரசாயன ஆலையில் பயங்கர தீ விபத்து - பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருள்கள் நாசம்

தீ விபத்து
தீ விபத்து

இன்று காலை 11:30 மணியளவில் திடீரென தனியார் ரசாயன ஆலை ஒன்றில் பெரும் தீ விபத்து ஏற்பட்டு, அந்தப் பகுதியில் கரும்புகை மண்டலம் சூழ்ந்து, அப்பகுதி கிராம மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம், மயிலம் அருகே உள்ளது பெரும்பாக்கம் கிராமம். மயிலத்திலிருந்து புதுச்சேரி செல்லும் சாலையிலுள்ள பெரும்பாக்கம் கிராமத்தில் அமைந்துள்ளது தனியார் ரசாயன ஆலை. பெயின்ட்டுடன் கலப்பதற்காகப் பயன்படுத்தப்படும் 'தின்னர்' எனும் பொருள் அங்கு தயாரிக்கப்படுகிறது. கடலூரைச் சேர்ந்த மாதவன், வெங்கடேஷ் ஆகிய இருவர் இணைந்து கடந்த 2008-ம் ஆண்டு முதல் இந்த ரசாயன ஆலையை நடத்திவருகின்றனர். இந்த ரசாயன ஆலையில் சுமார் 35 ஊழியர்கள் வரை வேலை செய்துவருவதாகக் கூறப்படுகிறது. அவர்களில், 22 பேர் இன்று காலை நேர ஷிஃப்டில் பணியாற்றிவந்திருக்கிறார்கள்.

தீ அணைக்கப்பட்ட பின்.
தீ அணைக்கப்பட்ட பின்.

பாரல்களில் இருந்த ரசாயனத்தை மாற்றிக்கொண்டிருந்தபோது சுமார் 11:30 மணியளவில் திடீரென தீப்பிடித்து எரிந்ததாகக் கூறப்படுகிறது. இரண்டு பெண்கள் உட்பட பணியில் ஈடுபட்டிருந்த மொத்தம் 22 நபர்களும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். அதில் பாகூர் கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ் என்பவருக்கு மட்டும் சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளன. அவர் சிகிச்சை பெற்று நலமாக இருப்பதாகக் காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.

தீ மளமளவெனப் பரவியதால் கரும்புகை அந்தப் பகுதியைச் சூழ்ந்தது. விரைந்து வந்த மயிலம், வானூர், திண்டிவனம் மற்றும் விக்கிரவாண்டியைச் சேர்ந்த தீயணைப்புத்துறையினர் தீயை அணைக்க வெகு நேரமாகப் போராடிவந்தனர். சுமார் 22 தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டபோதும் தீயை அணைக்க முடியவில்லை. தண்ணீர் தேவைக்குக் கூடுதலாக லாரிகள் மூலம் தண்ணீர் கொண்டு வரப்பட்டது. அப்போதும் தீயை அணைக்க முடியாததால் புதுச்சேரி விமான நிலையத்தில் பயன்படுத்தப்படும் அதி நவீன தீயணைப்பு இயந்திரத்தை நாடியது தீயணைப்புத்துறை.

மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை.
மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை.

பின், புதுச்சேரி விமான நிலையத்திலிருந்து இரண்டு அதிநவீன தீயணைப்பு இயந்திரங்கள் கொண்டுவரப்பட்டு தொடர்ந்து தீயணைப்பு முயற்சி நடைபெற்றுவந்தது. சுமார் மூன்றரை மணி நேர தொடர் முயற்சிக்குப் பின் தீ கட்டுக்குள் வந்தது. விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை மற்றும் எஸ்.பி.ராதாகிருஷ்ணன் இருவரும் நேரில் பார்வையிட்டு விசாரித்துச் சென்றுள்ளனர். சுமார் 250 பாரல்களில் வைக்கப்பட்டிருந்த தின்னர் ரசாயனம், இயந்திரங்கள், ஆலை அமைப்பு, ஒரு லாரி உட்பட பல்வேறு பொருள்கள் எரிந்து பல லட்ச ரூபாய் மதிப்பில் சேதம் ஏற்பட்டுள்ளது. சுமார் 30,000 லிட்டர் தின்னர் வைக்கப்பட்டிருந்த தனிப் பகுதிக்கு தீ பரவாமல் கட்டுப்படுத்தப்பட்டிருப்பதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும் இது தொடர்பாக விசாரணை நடந்துவருகிறது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு