Published:Updated:

அதிகாலையில் பற்றி எரிந்த கோவில்பட்டி சென்னை சில்க்ஸ்!- என்ன காரணம்?

கோவில்பட்டியில் உள்ள சென்னை சில்க்ஸ் ஷோரூமில் இன்று அதிகாலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தால் ரூ.2 கோடி மதிப்பிலான துணிகள் எரிந்து சாம்பலாயின.

தீயை அணைக்கும் பணியில் வீரர்கள்
தீயை அணைக்கும் பணியில் வீரர்கள்

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி நகராட்சி அண்ணா பேருந்து நிலையம் அருகில் உள்ளது `தி சென்னை சில்க்ஸ்' ஜவுளி ஷோரூம். இதன் அருகிலேயே கோவில்பட்டியில் பிரபலமான ஜவுளிக் கடைகளும் அடுத்தடுத்து உள்ளன. இன்று அதிகாலை சுமார் 3.30 மணி அளவில் சென்னை சில்க்ஸ் ஜவுளி ஷோரூமின் மூன்றாவது மாடியில் இருந்து அதிகமான புகை வெளியேறியுள்ளது. சிறிது நேரத்தில் தீப்பற்றி மளமளவென எரிந்தது.

தீயை அணைக்கும் பணி
தீயை அணைக்கும் பணி

இதைக் கவனித்த அருகில் உள்ள மற்றொரு ஜவுளிக்கடையின் பாதுகாவலர் ஒருவர், தீயணைப்பு நிலையத்துக்குத் தகவல் கொடுத்துள்ளார். கோவில்பட்டி தீயணைப்பு நிலைய அதிகாரிகள் விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இருப்பினும், இரண்டாவது, முதலாவது தளங்களில் தீ பரவியது. அதிகப்படியான தீ பரவலால், கழுகுமலை, விளாத்திகுளம் பகுதிகளிலும் இருந்தும் தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டன.

மூன்று வாகனங்கள் தீயணைப்புப் பணியில் ஈடுபட்டன. இடைவிடாத மழை பெய்த போதிலும், 6.30 மணிக்குதான் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இப்பெரும் தீ விபத்தில் கட்டடம் முழுவதும் சேதமடைந்தது மட்டுமல்லாமல், ரூ.2 கோடி மதிப்பிலான துணிகள் எரிந்து நாசமாயின. கடைக்கு முன்பு நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களும் எரிந்தன. மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனச் சொல்லப்படுகிறது.

சென்னை சில்க்ஸ் கிளையில் பற்றி எரிந்த தீ
சென்னை சில்க்ஸ் கிளையில் பற்றி எரிந்த தீ

தீ விபத்தால் அப்பகுதி முழுவதும் சுமார் 3 மணி நேரம் புகை மூட்டமாகக் காணப்பட்டது. கோவில்பட்டி கோட்டாட்சியர் விஜயா, தாசில்தார் மணிகண்டன் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்தில் ஆய்வு செய்தனர். இந்த விபத்து குறித்து கோவில்பட்டி மேற்கு காவல்நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவில்பட்டியில் கடந்த ஆண்டு தனியார் மண்டபத்தில் சென்னை சில்க்ஸ் நிறுவனத்தினர், மலிவு விலையில் துணிகளை 5 நாள்கள் விற்பனை செய்தபோது, உள்ளூர் துணிக்கடைக்காரர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் நடந்த பேச்சுவார்த்தையில், `மண்டபத்தில் விற்பனை செய்து எங்களது வியாபாரத்தைக் கெடுக்காதீர்கள். தனியாக கடை அமைத்து விற்பனை செய்வதில் எங்களுக்கு ஆட்சேபனை இல்லை' என விவகாரம் சமரசமாகப் பேசி முடிக்கப்பட்டது.

எரிந்த நிலையில் சென்னை சில்க்ஸ்
எரிந்த நிலையில் சென்னை சில்க்ஸ்

இந்த நிலையில், கோவில்பட்டியில் கண்ணப்பன் என்பவருக்குச் சொந்தமான கட்டடத்தில் கடந்த ஆண்டு, அக்டோபர் மாதம் சென்னை சில்க்ஸ் கிளை தொடங்கப்பட்டது. ஓராண்டு நிறைவு பெறவுள்ள நிலையில், தற்போது மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இது குறித்து சிலர் சந்தேகம் கிளப்பியுள்ளனர்.

இதுதொடர்பாக கோவில்பட்டி டி.எஸ்.பி ஜெபராஜிடம் பேசினோம். ``தீ விபத்து குறித்து விசாரணை செய்து வருகிறோம். தீயணைப்புத் துறையினரின் அறிக்கையில்தான் விபத்துக்கான காரணம் குறித்து தெரியவரும்” என்றார்.

சென்னை உஸ்மான் சாலையில் செயல்பட்டு வந்த சென்னை சில்க்ஸ் துணிக்கடையில் கடந்த 2017, மே 31-ம் தேதி இதேபோல தீ விபத்து ஏற்பட்டது. ஜெனரேட்டர்கள் பயன்பாட்டுக்காக கேன்களில் இருப்பு வைக்கப்பட்டிருந்த டீசலில் தீப்பிடித்ததால் தீயைக் கட்டுக்குள் கொண்டு வர முடியாமல் போனது. இதில், முக்கால்வாசி கட்டடம் இடிந்ததுடன், ரூ.300 கோடி மதிப்பிலான பொருள்களும் நாசமானதாகக் கூறப்பட்டது.

தீ விபத்தை ஆய்வு செய்த அதிகாரிகள்
தீ விபத்தை ஆய்வு செய்த அதிகாரிகள்

முன்னதாக, 2015-ம் ஆண்டு ஜூன் 16-ம் தேதி சேலத்திலும் கடந்த 2018, மார்ச் 29-ம் தேதி விழுப்புரத்திலும் சென்னை சில்க்ஸ் கிளைகளில் தீ விபத்து ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.