Published:Updated:

புனே: ரசாயன தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து! - 15 பெண்கள் உட்பட 17 பேர் உடல் கருகி பலி

தீயால் ஏற்பட்ட புகை மண்டலம்
தீயால் ஏற்பட்ட புகை மண்டலம்

புனேயிலுள்ள ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 15 பெண்கள் உட்பட 17 பேர் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.

மகாராஷ்டிரா மாநிலம், புனே அருகிலுள்ள பிரன்கட் எம்.ஐ.டி.சி-யில் எஸ்.வி.எஸ்.அக்வா டெக்னாலஜிஸ் என்ற கெமிக்கல் கம்பெனி செயல்படுகிறது. இந்த கம்பெனியில் குளோரின் டை ஆக்சைடு தயாரிக்கப்படுகிறது. இது தண்ணீரைச் சுத்தப்படுத்தப் பயன்படுகிறது. இந்த கம்பெனியில் அதிக அளவில் பெண்கள் வேலை செய்துவந்தனர். இந்த நிலையில், கம்பெனியில் நேற்று பிற்பகல் திடீரென மெஷின் ஒன்று வெடித்து தீப்பிடித்துக்கொண்டது. இதில் ஊழியர்கள் அனைவரும் தீயில் சிக்கிக்கொண்டனர். தீ விபத்து குறித்துக் கேள்விப்பட்டதும் தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்தனர்.

தீயால் ஏற்பட்ட புகை மண்டலம்
தீயால் ஏற்பட்ட புகை மண்டலம்

கம்பெனியின் சுவரை உடைத்துக்கொண்டு தீயணைப்பு துறையினர் உள்ளே சென்று உள்ளே சிக்கியவர்களை மீட்க முயன்றனர். ஆனால் அதற்குள் தீ முழுவதுமாக அனைத்துப் பகுதிகளுக்கும் பரவிவிட்டது. ஏழு தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டன. தீ அணைக்கப்பட்டபோதும் உள்ளே சிக்கிக்கொண்டவர்களைத் தேடியதில் 17 பேரின் உடல்கள் எரிந்த நிலையில், அடையாளமே காண முடியாத நிலையில் மீட்கப்பட்டது. அவற்றில் 15 பேர் பெண்கள். அவர்களது உடல்கள் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டன. டி.என்.ஏ மூலமே அவர்களின் உடலை அடையாளம்காண முடியும் என்று தீயணைப்புத்துறையினர் தெரிவித்தனர்.

இந்தத் தீ விபத்து குறித்து தீயணைப்பு அதிகாரி தேவேந்திரா கூறுகையில், ``பிளாஸ்டிக் பேக்கிங் பிரிவில் ஏற்பட்ட தீ மற்ற இடங்களுக்குப் பரவியதாக கம்பெனி நிர்வாகம் கூறுகிறது. ஆனால் உள்ளே இருந்த மெஷினில் வெடி விபத்து ஏற்பட்டதால் இந்தச் சம்பவம் நடந்ததாக ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து விசாரித்துவருகிறோம்” என்று தெரிவித்தார்.

அஜித் பவார்
அஜித் பவார்

சம்பவ இடத்தை மாவட்ட ஆட்சி தலைவர் ராஜேஷ் தேஷ்முக் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஒருவர் மட்டும் காயத்துடன் தப்பினார். அவரை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இறந்து கிடந்தவர்கள் பல இடங்களில் மொத்த மொத்தமாக்க கிடந்தனர். அவர்கள் கூட்டாகச் சேர்ந்து தப்பிக்க முயன்றிருக்க வேண்டும் என்று தீயணைப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிட்ட துணை முதல்வர் அஜித் பவார், உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு தலா 5 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார். உள்ளே இருந்த இயந்திரங்கள் அனைத்தும் எரிந்து நாசமாகிவிட்டன.

அடுத்த கட்டுரைக்கு