Published:Updated:

மும்பை: 60 மாடி கட்டடத்தில் தீவிபத்து... உயிரைக் காப்பாற்ற 19-வது மாடியிலிருந்து குதித்த நபர் பலி!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
60 மாடி கட்டடத்தில் தீவிபத்து
60 மாடி கட்டடத்தில் தீவிபத்து

மும்பையில் 60 மாடிக் கட்டடத்தில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது. தீயில் இருந்து உயிரை காப்பாற்றிக்கொள்ள 19-வது மாடியிலிருந்து குதித்தவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

மும்பையின் தென்பகுதியில் உள்ள கர்ரிரோட்டில் அவிக்னா பார்க் என்ற 60 மாடி கட்டடத்தில் இன்று (22-10-2021) திடீரென தீவிபத்து ஏற்பட்டது. கட்டடத்தின் 19 வது மாடியில் ஏற்பட்ட தீயை அணைக்க மும்பை முழுவதும் இருந்து தீயணைப்பு வண்டிகள் விரைந்து வந்தன. தீயணைப்பு துறையினர் நூற்றுக்கணக்கானோர் ராட்சத இயந்திரங்கள் மூலம் 19வது மாடியில் தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

தீ விபத்தில் சிக்கிக்கொண்ட 30 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் தனது உயிரைக் காப்பாற்றிக்கொள்ள 19வது மாடியில் இருந்து வெளியில் குதித்துவிட்டார். அவர் ஜன்னல் வழியாக வெளியில் வந்து தீயில் இருந்து தப்பிவிடலாம் என்று நினைத்தார். ஆனால் கீழே விழுந்த அந்த நபர் பரிதாபமாக உயிரிழந்தார். தீ விபத்து ஏற்பட்ட கட்டடத்தில் ஒரே புகை மண்டலமாக இருந்தது. தீயில் சிக்கிக்கொண்ட பொதுமக்கள் 26 பேர் மிகவும் பத்திரமாக மீட்கப்பட்டனர். தீவிபத்து குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு இருப்பதாக மும்பை மாநகராட்சி கமிஷனர் இக்பால் சிங் தெரிவித்தார்.

தீவிபத்து ஏற்பட்ட கட்டிடம்
தீவிபத்து ஏற்பட்ட கட்டிடம்

தீவிபத்தில் உயிரிழந்தவர் செக்யூரிட்டி கார்டு என்றும் தீ குறித்து தெரிந்து கொள்ள மேலே சென்றவர் என்றும் இக்பால் தெரிவித்தார். தீவிபத்து ஏற்பட்ட கட்டடத்தை போலீஸ் அதிகாரிகளுடன் நேரில் சென்று பார்வையிட்ட இக்பால் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், தற்போது கட்டடத்தின் தீ வெப்பத்தை தணிக்கும் பணி நடந்து வருவதாகவும் தெரிவித்தார். முன்னதாக உள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் காளிதாஸ் மற்றும் மாநகராட்சி கூடுதல் கமிஷனர் சுரேஷ் ககானி ஆகியோர் தீயை அணைக்கும் பணியை பார்வையிட்டனர். அதிர்ஷ்டவசமாக இத்தீவிபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று மாநகராட்சி கூடுதல் கமிஷனர் சுரேஷ் தெரிவித்தார். இத்தீவிபத்து சம்பவத்தை தொடர்ந்து அக்கட்டடத்தின் 19-வது மாடியில் வசிப்பவர்கள் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு