Published:Updated:

அதிகாலை நேரம்... ஆழ்ந்த தூக்கம்... மின்கசிவு! - டெல்லி தொழிற்சாலை தீ விபத்தின் பின்னணி

டெல்லி தீ விபத்து
டெல்லி தீ விபத்து ( ANI )

டெல்லி தொழிற்சாலையில் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி, இதுவரை 43 பேர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்த 21 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வடக்கு டெல்லி, ராணி ஜான்சி சாலையில் உள்ள ஆனஜ் மண்டி என்ற இடம், பெரும் வர்த்தகப் பகுதியாகச் செயல்பட்டுவருகிறது. அப்பகுதியில், மிகவும் நெருக்கமான கடைகள், பொதுமக்கள் கூட்டம் என எப்போதும் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கும். அதேபகுதியில் இருக்கும் ஒரு பைகள் தயாரிக்கும் தொழிற்சாலையில், இன்று அதிகாலை திடீரெனத் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

தொழிற்சாலை
தொழிற்சாலை
ANI

அந்தத் தொழிற்சாலையில் பல தொழிலாளர்கள் உறங்கிக் கொண்டிருந்துள்ளனர். அப்போது, யாரும் எதிர்பாராத விதமாக தீ பற்றி எரியவே, தூக்கத்திலிருந்து விழித்த அனைவரும் தீயை அணைக்க முடியாமலும், வெளியில் செல்ல முடியாமலும் தவித்துள்ளனர். சரியாக 5:22 மணிக்கு தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அது, பைகள் தயாரிக்கும் தொழிற்சாலை என்பதாலும், நெரிசல் மிக்க பகுதி என்பதாலும், தீ பற்றிய வேகத்தில் மளமளவென பிற இடங்களுக்கும் பரவியுள்ளது.

சிலிண்டர் வெடித்து தீ விபத்து! - சூடான் ஆலையில் தமிழர்கள் உட்பட 18 இந்தியர்கள் பலி

தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு வருவதற்குள் தொழிற்சாலையின் பெரும்பகுதி எரிந்திருந்ததாகக் கூறப்பட்டுள்ளது. பின்னர், 30 தீயணைப்பு வண்டிகள் இணைந்து தொழிற்சாலையில் பற்றிய தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு, உள்ளே சிக்கியுள்ள தொழிலாளர்களையும் மீட்டுள்ளனர். இந்தத் தீ விபத்தில், இதுவரை 43 பேர் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. மேலும், 21 பேர் பலத்த தீக் காயங்களுடன் டெல்லி ராம் மனோகர் லோகியா மற்றும் ஹிந்து ராவ் ஆகிய மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தீ விபத்து பகுதி
தீ விபத்து பகுதி
ANI

தொழிற்சாலையின் பணிமனையில் ஏற்பட்ட மின் கசிவினால் இந்தத் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என டெல்லி காவலர்கள் தெரிவித்துள்ளனர். இதில் உயிரிழந்தவர்களில் பெரும்பாலானவர்கள், தொழிலாளர்கள் என்பதும் அவர்களில் அதிகமானோர் மூச்சுத் திணறல் காரணமாகவே உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்றுவருகிறது.

இந்தத் தீவிபத்தினால் ஏற்பட்ட இடிபாடுகளில் இன்னும் பல தொழிலாளர்கள் சிக்கியிருக்கலாம் என அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அனாஜ் மண்டி பகுதியில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக, அங்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. புனித ஸ்டீபன் சாலையில் வருவோர், ஜந்தேவாலன் வழியாக ராணி ஜான்சி மேம்பாலத்தைப் பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

காயமடைந்தவர்
காயமடைந்தவர்
ANI

டெல்லி உட்பட, மொத்த இந்தியாவையும் அதிரவைத்துள்ள இந்த கோரத் தீவிபத்துக்கு, நாட்டில் உள்ள அனைத்துத் தலைவர்களும் தங்கள் இரங்கலைத் தெரிவித்துவருகின்றனர். மேலும், தீ விபத்து நடந்த இடத்தில் சிக்கிய உறவினர்கள் மற்றும் உள்ளூர் வாசிகள் அந்தப் பகுதிக்கு விரைந்துவருவதால், அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவிவருகிறது. தீ விபத்துப் பகுதியில் போதுமான ஆம்புலன்ஸ் வசதி இல்லாததால், காயமடைந்தவர்களைத் தீயணைப்பு வீரர்கள், தங்களில் தோலில் சுமந்து ஆட்டோவில் ஏற்றும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு