சிவகங்கை மாவட்டம் காரைக்குடியைச் சேர்ந்த கருணாமூர்த்தி என்பவர் தனது குடும்பத்தினருடன் காரில் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு, மீண்டும் சிவகங்கை மாவட்டத்துக்கு திரும்பிக் கொண்டிருந்தார்.
மண்டபம் அடுத்த பாம்பன் பாலத்தில், தனக்கு முன்னால் சென்ற காரை முந்த முற்பட்டார். அப்போது மண்டபத்தை நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்த மீனவர்கள் நாராயணன், ஹரிமுகேஷ் ஆகியோர் எதிரே கார் வேகமாக வருவதைப் பார்த்து, நடைபாதை அருகே மோட்டார் சைக்கிளை திருப்பியிருக்கின்றனர். அவர்கள் மீது மோதாமல் இருக்க கருணாமூர்த்தியும் நடைபாதை நோக்கி காரைத் திருப்பியிருக்கிறார். இதனால் இருவரும் நேருக்கு நேர் மோதிக் கொண்டனர்.
இதில் மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்திருந்த ஹரிமுகேஷ் கடலில் தூக்கி வீசப்பட்டார். தகவலறிந்து அங்கு வந்த மண்டபம் போலீஸார் கடலில் தூக்கி வீசப்பட்ட ஹரிமுகேஷை கயிறு மூலம் மீட்டனர்.
பலத்த காயமடைந்த இருவரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் மண்டபம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு நாராயணனைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அவர் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். ஹரிமுகேஷுக்கு இரண்டு கால்களும் முறிந்து விட்டதால், அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்தில் கார் பாலத்திலிருந்த போஸ்ட் மரத்தின் மீது மோதி நின்றதால் காரில் பயணம் செய்த இரண்டு பெண்கள், இரண்டு குழந்தைகள் உட்பட 6 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

விபத்து குறித்து பாம்பன் போலீஸார் கருணாமூர்த்தி மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த விபத்தால் பாம்பன் பாலத்தில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
மீன்பிடி தடை காலம் என்பதால், நாராயணன் படகுகளை சீர்செய்யும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அவ்வாறு ராமேஸ்வரம் கடற்கரைக்கு படகை சீர் செய்ய சென்றபோது விபத்தில் சிக்கி அவர் இறந்தது மீனவர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.