Election bannerElection banner
Published:Updated:

சர்வதேசக் கடல் பகுதியில் மூழ்கிய குமரி விசைப்படகு; 11 மீனவர்கள் மாயம்! - கப்பல் மோதியதால் விபத்து?!

மாயமான மீனவர்கள்
மாயமான மீனவர்கள்

கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற 11 மீனவர்கள் மாயமாகியிருக்கும் சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கெனவே மங்களூர் பகுதியில் கப்பல் மோதி படகில் இருந்தவர்கள் இறந்த சம்பவத்தின் வடு ஆறுவதற்குள் மற்றொரு சம்பவம் நடந்துள்ளது.

திகன்னியாகுமரி மாவட்டம், தேங்காய்ப்பட்டணம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடந்த 09.04.2021 அன்று 11 மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனர். IND-TN-MM-4775 பதிவு எண் கொண்ட `மெர்சிடிஸ்’ என்ற மீன்பிடிப் படகில் மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றுள்ளனர். இந்தநிலையில் அந்த விசைப்படகு கோவா மாநிலத்திலிருந்து 600 நாட்டிக்கல் மைல் (சுமார் 1,100 கிலோமீட்டர்) தூரத்தில் விபத்தில் சிக்கி கடலில் மூழ்கியதாகத் தகவல் வெளியானது. அதிலிருந்த 11 மீனவர்களின் நிலை குறித்த தகவல் ஏதுமில்லை. விபத்துக்குள்ளான படகின் ஒரு பகுதியைச் சக மீனவர்கள் பார்த்திருப்பதாகக் கூறப்படுகிறது.

மங்களூரில் ஏற்கெனவே விபத்துக்குள்ளான படகு
மங்களூரில் ஏற்கெனவே விபத்துக்குள்ளான படகு

விபத்துக்குள்ளான படகின் உரிமையாளர் ஜோசப் பிராங்க்ளின், குமரி மாவட்டம், வள்ளவிளை பகுதியைச் சேர்ந்தவர். கடந்த 23.4.2021 மதியம் வரை அருகில் மீன்பிடித்துக்கொண்டிருந்த `பெரியநாயகி’ என்ற விசைப்படகுடன் ஒயர்லெஸ் வழியாக தொடர்பில் இருந்திருக்கிறார். கடந்த 24-ம் தேதி மதியம் மெர்சிடிஸ் விசைப்படகு கடலில் மூழ்கிய நிலையில் இருப்பது கண்டறியப்பட்டது. படகிலிருந்த குமரி மாவட்டம், வள்ளவிளையைச் சேர்ந்த 11 மீனவர்களும் மாயமாகியிருக்கிறார்கள். கர்நாடக மாநிலம், கார்வார் ஆழ்கடல் பகுதியில் அந்தவழியாகச் சென்ற கப்பல் விசைப்படகு மீது மோதி விபத்து ஏற்படுத்தியிருக்கலாம் என மீனவர்கள் சந்தேகிக்கின்றனர். ஆனால், விபத்துக்கான உண்மையான காரணம் இன்னும் தெரியவரவில்லை.

கன்னியாகுமரி மாவட்டம், வள்ளவிளையைச் சேர்ந்த சுமார் 100 மீனவர்கள் பத்து விசைப்படகுகள் மூலம் மாயமான மீனவர்களைத் தேடிவருவதாக தெற்காசிய மீனவர் தோழமை அமைப்பின் பொதுச்செயலாளர் சர்ச்சில் தெரிவித்திருக்கிறார். மாயமான மீனவர்களை விரைந்து மீட்க வேண்டும் என மும்பையிலுள்ள இந்திய தேடுதல் மற்றும் மீட்பு மையம் (MRCC) அதிகாரிக்கும் சர்ச்சில் மனு அனுப்பியுள்ளார்.

தெற்காசிய மீனவர் தோழமை அமைப்பின் பொதுச்செயலாளர் சர்ச்சில்
தெற்காசிய மீனவர் தோழமை அமைப்பின் பொதுச்செயலாளர் சர்ச்சில்

சர்வதேசக் கடலில் விசைப்படகு மீனவர்களுக்கு விபத்து ஏற்பட்டுள்ளதால், சர்வதேச மீட்புப் படையின் உதவியை மத்திய அரசு பெற்று, மாயமான 11 மீனவர்கள் தேடி மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், இந்திய கப்பல் மற்றும் போக்குவரத்துத்துறை வழியாக இந்தியாவின் சர்வதேசக் கடல் பகுதியில் பயணிக்கும் கப்பல்கள் உதவியுடனும் மாயமான மீனவர்களை மீட்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சர்ச்சில் பிரதமர் அலுவலகத்துக்குக் கோரிக்கை மனு அனுப்பியுள்ளார்.

இது குறித்து சர்வதேச மீனவர் வளர்ச்சி அறக்கட்டளை தலைவர் ஜஸ்டின் ஆன்றணி கூறுகையில், ``ஒரு வள்ளம் (படகு) சேதமடைந்த நிலையிலிருப்பதாகவும், இன்னொரு வள்ளத்தைக் காணவில்லை எனவும் மீனவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இந்த மீனவர்களை விரைந்து மீட்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கக் கோரி மத்திய, மாநில அரசுகளுக்கும் கப்பல்படை, கடலோர காவல்படை, கடலோர மீட்பு ஒருங்கிணைப்பு மையம் ஆகியவற்றுக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளேன்.

ஜஸ்டின் ஆன்றணி
ஜஸ்டின் ஆன்றணி

கடலோர காவற்படைக்குச் சொந்தமான `சமுத்ரா பிரஹாரி’ என்ற கப்பல், ஆழ்கடலிலிருந்து இந்த விசைப்படகு கிடக்குமிடத்தைத் தேடிச் செல்வதாகவும், இந்தியன் நேவல் ஏர்கிராப்ட் ஐ.எல் இந்த மீனவர்களை தேடி சென்று திரும்பியதாகவும் மும்பையிலுள்ள கடலோர மீட்பு ஒருங்கிணைப்பு மையத்திடமிருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாயமான 11 மீனவர்களை தேடிக் கண்டுபிடிக்க துரித தேடுதல் வேட்டை நடத்தவும், இந்தியன் நேவல் ஏர்கிராqப்ட் ஐ.எல்-ஐ மீண்டும் அனுப்ப ஆவன செய்ய வேண்டுமெனவும் ராணுவ அமைச்சர், மத்திய மீன்வளத்துறை அமைச்சர், தமிழக முதல்வர், கடலோர மீட்பு ஒருங்கிணைப்பு மைய இயக்குநர் ஆகியோருக்கு வேண்டுகோள் வைத்துள்ளேன்" என்றார். மீனவர்களை மீட்கக் கோரி சி.ஐ.டி.யூ மீன்பிடித் தொழிலாளர் சங்கம் மத்திய அரசுக்குக் கோரிக்கை வைத்திருக்கிறது.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு