ஆந்திரப் பிரதேசத்தின் சத்ய சாய் மாவட்டம், குத்தம்பள்ளியைச் சேர்ந்த 12 பேர் அருகிலுள்ள கிராமங்களுக்கு விவசாய பணிக்காக ஆட்டோவில் சென்றுகொண்டிருந்தனர். அப்போது அவர்கள் பயணம் செய்துகொண்டிருந்த ஆட்டோ மீது, உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்தது. இதன் காரணமாக ஆட்டோ முழுவதும் மின்சாரம் பாய்ந்து உடனடியாகத் தீப்பற்றியது. அதில் ஐந்து பேர் உடல் கருகி இறந்ததாகக் கூறப்படுகிறது. மேலும் மூன்று பேர் படுகாயங்களுடன் அனந்தபூரிலுள்ள மருத்துவமனையில் உயிருக்குப் போராடிவருகின்றனர்.
இந்தச் சம்பவம் குறித்து தகவலறிந்த போலீஸார், மீட்புக்குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உயிரிழந்தவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர்.

இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி மக்களை சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது. இந்த நிலையில், இது தொடர்பாக, எரிசக்தித்துறை அமைச்சர் ராமச்சந்திர ரெட்டி, `` இந்தச் சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறது. மேலும் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.2 லட்சமும் அரசு சார்பில் இழப்பீடு அறிவிக்கப்பட்டிருக்கிறது” என்றார்.
