Published:Updated:

திண்டுக்கல்லில் வெள்ளம்: 6 பேருடன் அடித்துச் செல்லப்பட்ட காரை இளைஞர்கள் மீட்டது எப்படி?!

வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட கார்

``முதலில் தீயணைப்பு நிலையத்துக்குத் தகவல் கொடுத்துவிட்டு, அவர்களுக்காகக் காத்திருக்காமல் டிராக்டரை வரவழைத்து காரை இழுக்க முயன்றோம்.”

திண்டுக்கல்லில் வெள்ளம்: 6 பேருடன் அடித்துச் செல்லப்பட்ட காரை இளைஞர்கள் மீட்டது எப்படி?!

``முதலில் தீயணைப்பு நிலையத்துக்குத் தகவல் கொடுத்துவிட்டு, அவர்களுக்காகக் காத்திருக்காமல் டிராக்டரை வரவழைத்து காரை இழுக்க முயன்றோம்.”

Published:Updated:
வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட கார்

​திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாகத் தொடர்மழை பெய்துவருகிறது. நேற்று காலை முதலே சாரல் மழை பெய்துகொண்டிருந்த நிலையில் மாலை 5 மணிக்கு கனமழை பெய்யத் தொடங்கியது. இதனால் மாவட்டத்தின் பல்வேறு முக்கியச் சாலைகள் மழைநீரில் மூழ்கின.

மீட்புப் பணி
மீட்புப் பணி

இந்நிலையில் வேடசந்தூரிலிருந்து ஈசநத்தம் வழியாக கரூர் செல்லும் சாலையில் கூம்பூருக்கும் அழகாபுரிக்கும் இடையேயுள்ள தரைப்பாலத்தில் வெள்ளம் ஏற்பட்டது. அப்போது திருநெல்வேலியைச் சேர்ந்த சண்முகம் என்பவர் பொலிரோ காரில், தனது நண்பர்களான பாலசுப்பிரமணி, பாலகிருஷ்ணன், பாண்டியன், செல்வராஜ், மணிக்குமார் ஆகியோருடன் கரூர் நோக்கிச் சென்றுகொண்டிருந்தார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அப்போது கனமழை பெய்துகொண்டிருந்ததால் தரைப்பாலத்தை ஒட்டிய பகுதியில் எரியோடு, அழகாபுரியைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் நின்றுகொண்டிருந்தனர். காரில் வந்தவர்கள் தரைப்பாலத்தின் மேலாக குறைந்த அளவு தண்ணீர் செல்வதாக நினைத்து தரைப்பாலத்தை கடக்க முயன்றனர். இதைப் பார்த்த எரியோடு பகுதியைச் சேர்ந்த சந்திரசேகர் என்பவர் தரைப்பாலத்தை கடக்க வேண்டாம் எனக் கத்திக் கூச்சலிட்டிருக்கிறார். மழையால் சந்திரசேகர் விடுத்த எச்சரிக்கையை கவனிக்காத சண்முகம் காரை ஓட்டியிருக்கிறார். கார் பாலத்தின் நடுப்பகுதியை அடைந்தபோது வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது.

மீட்பு
மீட்பு

இதைப் பார்த்த சந்திரசேகர் அங்கிருந்த முருகேசன், ராஜபாண்டி, செந்தூரபாண்டி, ராஜேஸ் உள்ளிட்ட ஏழு பேருடன் சேர்ந்து காரையும் காரில் வந்தவர்களையும் மீட்பதற்கான நடவடிக்கையில் இறங்கியிருக்கிறார். மேலும் தீயணைப்பு நிலையம், போலீஸாருக்கும் தகவல் கொடுத்துள்ளனர். இதற்கிடையே அங்கிருந்த இளைஞர்களுடன் சேர்ந்து துரிதமாகச் செயல்பட்டு காரையும், காரில் இருந்தவர்களையும் ஒரு மணி நேரம் போராடி மீட்டிருக்கிறார்.

இது குறித்து சந்திரசேகரனிடம் பேசினோம். ``இந்தப் பகுதியில் எப்போதும் வெள்ளம் ஏற்பட்டதே இல்லை. கடந்த ஒரு வாரமாக பெய்துவந்த நிலையில் மாலை பெய்த கனமழையால் திடீர் வெள்ளம் ஏற்பட்டது. இந்தப் பகுதியைச் சுற்றியிருக்கும் வாகன ஓட்டிகளுக்குத் தரைப்பாலத்தில் தண்ணீர் சென்றால் கடக்க முடியாது என்பது தெரியும். அவர்கள் வெளியூர்க்காரர்கள் என்பதால் ஆழம் தெரியாமல் கடக்க முயன்றனர். நாங்கள் அருகே இருந்ததால் முதலில் தீயணைப்பு நிலையத்துக்குத் தகவல் கொடுத்துவிட்டு அவர்களுக்காகக் காத்திருக்காமல் டிராக்டரை வரவழைத்து காரை இழுக்க முயன்றோம்.

மீட்புப்பணி
மீட்புப்பணி

காரில் இருப்பவர்கள் கதவுகளை திறந்தால் தண்ணீர் வேகமாக அடித்துச் சென்றிருக்கும். அவர்கள் கதவுகளை திறக்கவில்லை. அதனால் கயிறுகளைக் கட்டி டிராக்டர் மூலம் இழுக்கத் தொடங்கினோம். மழை தொடர்ந்து பெய்துகொண்டிருந்ததால் வெள்ளத்தின் வேகமும் குறையவில்லை. நாங்கள் போராடிக்கொண்டிருக்கும்போதே போலீஸாரும் வந்து உதவினர். குறிப்பாக எஸ்.ஐ சுப்பிரமணி துரிதமாகச் செயல்பட்டு அவர்களை மீட்க உதவினார். அவர்கள் வெளியே வந்த பிறகு முதலுதவிக்கு ஏற்பாடு செய்தோம். ஆனால் காரில் இருந்தவர்களுக்கு முதலுதவி தேவைப்படவில்லை. நாங்கள் மட்டும் அங்கு இல்லையென்றால் ஆறு பேரின் உயிர் பறிபோயிருக்கும்” என்றார்.