Published:Updated:

`இரவில் டயர் வெடித்துக் கட்டுப்பாட்டை இழந்த கார்!' - முன்னாள் எம்.எல்.ஏ மகனுக்கு நேர்ந்த துயரம்

முன்னாள் எம்.எல்.ஏ மகன் கார் விபத்து
முன்னாள் எம்.எல்.ஏ மகன் கார் விபத்து

இரவு நேரத்தில் மீன்களைப் பிடித்துவிடுவார்கள் என்பதால் இரவு நேரத்தில்தான் மீன்களுக்கு உணவு அளிப்பார்களாம். அந்த வகையில் ராஜ் கமல் நேற்று இரவு உணவு அளித்துவிட்டு அவரது காரில் வீட்டிற்கு மிக வேகமாக வந்திருக்கிறார்

மீன் பண்ணையில் மீன்களுக்கு உணவு அளித்துவிட்டு வீட்டிற்குச் சென்ற முன்னாள் எம்.எல்.ஏ வின் மகன் சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் அரியலூரில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

ராஜ் கமல்
ராஜ் கமல்

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அடுத்த ராமதேவநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முன்னாள் எம்.எல்.ஏ ராஜேந்திரன். இவர் 2006ம் ஆண்டில் அ.தி.மு.க சார்பில் போட்டியிட்டு ஜெயங்கொண்டம் சட்டப்பேரவை உறுப்பினராக வெற்றி பெற்றார். இந்த நிலையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுடனான கருத்து வேறுபாடு காரணமாகப் பின்னர், தி.மு.கவில் இணைந்தார். அதன்பிறகு இன்றளவும் தி.மு.கவில் பணியாற்றி வருகிறார். இவரது மகன் ராஜ் கமல். இவருக்குத் திருமணமாகி 2 ஆண்டுகள் ஆகின்றன.

இவர், பல்வேறு தொழில்களைச் செய்துவருகிறார். தனது தோட்டத்து வீட்டில் உள்ள வயல்பகுதியில் மீன் பண்ணை வைத்து நடத்தி வருகிறார். இந்தநிலையில் மீன்களுக்கு இரை கொடுத்துவிட்டு இன்று அதிகாலை ராஜ் கமல் தனது காரில் பண்ணையிலிருந்து வீட்டுக்குப் புறப்பட்டார். வீட்டின் அருகே வந்தபோது எதிர்பாராதவிதமாகக் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோர மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

மரத்தின் மீது கார் மோதல்
மரத்தின் மீது கார் மோதல்

இதில், படுகாயமடைந்த ராஜ் கமலை அருகிலிருந்த மக்கள் மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். `அமைதியான இந்தப் பிள்ளைக்கா இப்படி நடக்கணும்’ என்று அப்பகுதி மக்கள் நெஞ்சில் அடித்துக்கொண்டு அழுத சம்பவம் பார்ப்போரைக் கண்கலங்க வைத்தது.

என்ன நடந்தது என்று போலீஸார் வட்டாரத்தில் விசாரித்தோம். ``முன்னாள் எம்.எல்.ஏ ராஜேந்திரன் சகஜமாக எல்லோரிடமும் பழகக்கூடியவர். எளிமையான மனிதர். அவரது மகன் மீன் பண்ணை வைத்திருக்கிறார். இரவு நேரத்தில் மீன்களைப் பிடித்துவிடுவார்கள் என்பதால் இரவு நேரத்தில்தான் மீன்களுக்கு உணவு அளிப்பார்களாம். அந்த வகையில் ராஜ் கமல் நேற்று இரவு உணவு அளித்துவிட்டு அவரது காரில் வீட்டிற்கு மிக வேகமாக வந்துகொண்டிருக்கும் போது ராமதேவ நல்லூர் என்ற ஊர் அருகே வந்தபோது காரின் டயர் வெடித்து பயங்கர சத்தத்துடன் அருகில் உள்ள புளியமரத்தின் மீது வேகமாக மோதியிருக்கிறது.

விபத்து
விபத்து

இதைக் கண்டதும் அக்கம் பக்கத்தில் உள்ள மக்கள் எங்களுக்குத் தகவல் அளித்தனர். அதன் பெயரில் நாங்கள் நேரில் வந்து பார்த்து 108 ஆம்புலன்ஸ் மூலமாக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தோம். ஆனால், வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்" என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு