மதுரை மாவட்டம், செக்கானூரணியைச் சேர்ந்தவர்கள் சிவபாண்டி (48), செல்வம் (55), பாண்டியராஜன் (44). இவர்கள், தேனி மாவட்டம் கம்பத்தில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு ஆண்டிபட்டி வழியாக செக்கானூரணிக்குத் திரும்பினர். நாகமலைப்புதுக்கோட்டையை சேர்ந்த முருகபிரபு (44) காரை ஓட்டினார். மதுரை-தேனி நெடுஞ்சாலையில் ஆண்டிபட்டி கணவாய், திம்மரசநாயக்கனூர் விலக்கு அருகே திங்கள்கிழமை மாலை 5 மணி அளவில் கார் சென்றுகொண்டிருந்தது. அப்போது எதிரே மதுரையிலிருந்து ஆண்டிபட்டி நோக்கி மற்றொரு காரும், சுற்றுலா வேனும் அடுத்தடுத்து வந்தன.

இந்நிலையில் சிவபாண்டி உட்பட நான்கு பேர் வந்த கார் திடீரென்று நிலை தடுமாறி அதிவேகமாகச் சென்று எதிரே வந்த மற்றொரு கார் மீது மோதியது. இதில் எதிரே வந்த கார் சாலையோரத் தடுப்பில் மோதி நின்றது. பின்னர் முருகபிரபு ஓட்டிய கார், எதிரே வந்த சுற்றுலா வேன் மீதும் பயங்கரமாக மோதி, பறந்து சென்று சாலையின் ஓரத்தில் விழுந்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் கார்கள், வேன் அடுத்தடுத்து மோதிய விபத்தில் இரண்டு கார்கள் முழுவதுமாகச் சேதமடைந்தன. சுற்றுலா வேனின் முன்பகுதி மட்டும் சேதமடைந்தது.
சுற்றுலா வேனில் பயணித்தவர்கள் பெரும் கூச்சலிட்டத்தால் அருகே உள்ள மக்கள் விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இதையடுத்து ஆண்டிபட்டி போலீஸார் மற்றும் தீயணைப்பு நிலையத்துக்குத் தகவல் கொடுத்தனர். அதனடிப்படையில் போலீஸாரும், தீயணைப்பு வீரர்களும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விபத்தில் சிக்கியவர்களை மீட்டனர்.
ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இதற்கிடையே காரை ஓட்டி வந்த முருகபிரபு நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். சிவபாண்டி (48), செல்வம் (55) ஆகியோர் சிகிச்சைக்காக, தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த பாண்டியராஜன் சிகிச்சை பெற்றுவருகிறார்.
மற்றொரு காரில் வந்த ஆண்டிபட்டி அருகேயுள்ள பிச்சம்பட்டியைச் சேர்ந்த ஆசிரியரான ராமச்சந்திரன் (35), அவரது மனைவி ஆனந்த மீனாட்சி (34) ஆகியோரும் படுகாயம் அடைந்தனர். பின்னர் அவர்கள் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். சிகிச்சை பலனின்றி ராம்ச்சந்திரன் உயிரிழந்தார். அவரின் மனைவி தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இதேபோல் சுற்றுலா வேனில் வந்த கேரள மாநிலம் எர்ணாகுளத்தைச் சேர்ந்த சந்திரமதி (56), ரஜிதா (36), சதி (61), நிஜி (33), விருந்தா (27), அஜேஸ் (34), இவரின் குழந்தை ஆர்ஜவ் (1), அஜில் (26), அபிலாஷ் (35), மோகனன் (60) ஆகிய 10 பேர் படுகாயம் அடைந்தனர்.
இவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பலத்த காயமடைந்த சிலர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். இந்த விபத்து காரணமாக தேனி-மதுரை நெடுஞ்சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.