Published:Updated:

நிரப்பப்பட்ட 200 காஸ் சிலிண்டர்கள்; டிரான்ஸ்ஃபார்மர் மீது மோதிய லாரி! - ஈரோட்டை பதறவைத்த விபத்து

விபத்துக்குள்ளான லாரி
விபத்துக்குள்ளான லாரி

டீச்சர்ஸ் காலனியை ஒட்டி தான் ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகம், அரசு குடியிருப்புகள் மற்றும் கடைகள் அதிகமாக இருக்கின்றன. ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால், இந்தப் பகுதி முழுக்க பாதிக்கப்பட்டுவிடும்.

ஈரோடு மாவட்டம், பெருந்துறை சிப்காட்டில் உள்ள லோடிங் பாயின்ட்டில் இருந்து காஸ் நிரப்பிய சிலிண்டர்களை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று நாமக்கல் நோக்கி கிளம்பியிருக்கிறது. லாரியில், சுமார் 200 சிலிண்டர்களுக்கு மேல் இருந்திருக்கின்றன. காலை 6.30 மணியளவில், இந்த லாரி ஈரோடு டீச்சர்ஸ் காலனி அருகே வந்தபோது, கட்டுப்பாட்டை மீறி சாலையின் இடதுபுறத்தில் இருந்த டிரான்ஸ்ஃபார்மர் மீது பயங்கர வேகத்தில் மோதியது. இதில், டிரான்ஸ்ஃபார்மரில் இருந்த ஆயில் உடைந்து சாலையில் கொட்டியது. டிரான்ஸ்ஃபார்மர் அருகே நிறுத்தப்பட்டிருந்த இரண்டு ஆட்டோக்களும் சேதமடைந்தன. ஆட்டோவில் தூங்கிக் கொண்டிருந்த டிரைவர்கள் இருவருக்கும் லேசான காயம் ஏற்பட்டது.

விபத்துக்குள்ளான லாரி
விபத்துக்குள்ளான லாரி

லாரி மோதிய வேகத்தில் டிரான்ஸ்ஃபார்மரில் தீ பிடித்தால், லாரியில் இருக்கும் 200-க்கும் மேற்பட்ட சிலிண்டர்களும் எந்நேரமும் வெடித்துச் சிதறலாம் என அருகிலிருந்த பொதுமக்கள் பயத்தில் அலறியடித்தபடி ஓடினர். உடனடியாக இந்தத் தகவல் போலீஸாருக்கும், தீயணைப்புத் துறையினருக்கும் கொடுக்கப்பட்டிருக்கிறது.

இந்த டீச்சர்ஸ் காலனியை ஒட்டி தான் ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகம், அரசு குடியிருப்புகள் மற்றும் கடைகள் என அதிகமாக இருக்கின்றன. ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால், இந்தப் பகுதி முழுக்க பாதிக்கப்பட்டுவிடும் எனப் பெரும் பரபரப்பு உண்டானது. இதற்கிடையே, தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து, டிரான்ஸ்ஃபார்மர் மற்றும் காஸ் லாரியின்மீது தன்ணீரைப் பீய்ச்சியடித்தனர். ஒருமணி நேரமாக நடந்த மீட்புப் பணிக்குப் பின்னர், ஆபத்து ஏதுமில்லை என அதிகாரிகள் உறுதியளித்தனர். அதன்பிறகே, அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.

சம்பவ இடத்தில் தீயணைப்புத் துறையினர்
சம்பவ இடத்தில் தீயணைப்புத் துறையினர்

இந்தச் சம்பவம்குறித்து ஈரோடு தீயணைப்பு நிலைய அலுவலர் மயில்ராஜ் பேசியபோது, "டிரைவர் தூக்கக் கலக்கத்தில் டிரான்ஸ்ஃபார்மர் மீது மோதியிருக்கலாம். வண்டியில் 200 சிலிண்டர்களுக்கு மேல் இருந்தன. இந்த டிரான்ஸ்ஃபார்மர், 'ஹெச்.டி லைன்' என்பதால், சின்ன பாதிப்பு ஏற்பட்டாலும் உடனே மின்சாரத்தைத் தானாகவே துண்டித்துவிடும். இதனால் டிரான்ஸ்ஃபார்மரில் தீப்பற்றவோ, அசம்பாவிதமோ நிகழவில்லை. தீப்பற்றியிருந்தால், பெரிய அசம்பாவிதம் ஏற்பட்டிருக்கும்" என்றார். டிரைவர் தூக்கக் கலக்கத்தில் இந்த விபத்தை ஏற்படுத்தினாரா? அல்லது டிரைவரின் கட்டுப்பாட்டை மீறி இந்த விபத்து ஏற்பட்டதா? என்பது விசாரணையில்தான் தெரியவரும். இந்த விபத்துகுறித்து சூரம்பட்டி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

அடுத்த கட்டுரைக்கு