Published:Updated:

`வெள்ளத்தில் சென்ற செருப்பு; எடுக்க முயன்ற சிறுவன்’ - தேனியில் பாட்டி கண்முன்னே ஆற்றில் மூழ்கிய பேரன்

சுதீஸின் உடலை மீட்டுக் கொண்டுவரும் தீயணைப்பு வீரர்கள்
சுதீஸின் உடலை மீட்டுக் கொண்டுவரும் தீயணைப்பு வீரர்கள்

மாட்டுக்கு புல் அறுக்க பாட்டியுடன் சென்ற பேரன், பாட்டி கண்முன்னே ஆற்றில் மூழ்கிப் பலியான சோகம் தேனியில் நடந்துள்ளது.

தேனி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள கருநாகமுத்தன்பட்டியைச் சேர்ந்த மொக்கை - லெட்சுமி தம்பதி. இவர்களின் மகள் புவிதாவுக்கும் சிங்கராஜபுரம் ராஜேஷ் என்பவருக்கும் திருமணம் முடிந்து பாண்டி (வயது 6), சுதீஸ் (வயது 7) ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனர். திருப்பூரில் வேலை செய்துவரும் ராஜேஷ், கொரோனா ஊரடங்கு காரணமாக இரண்டு மாதத்துக்கு முன்னர் குடும்பத்தோடு தேனி வந்துள்ளார்.

சுதீஸ்
சுதீஸ்

நேராக ராஜேஷின் சொந்த ஊரான சிங்கராஜபுரம் வந்த நிலையில், புவிதாவின் பெற்றோர், பேரன் சுதீஸை மட்டும் கருநாகமுத்தன்பட்டிக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி, அவர்களது வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளனர். இந்நிலையில், இன்று மதியம் மாட்டுக்கு புல் அறுக்க லெட்சுமி புறப்பட்டுள்ளார். அதை அறிந்த சுதீஸ், பாட்டியுடன் சென்றுள்ளார்.

`கடைசியில் அவன காப்பாத்த முடியலையே..!' - கிணற்றில் விழுந்த சிறுவனால் கலங்கிய தேனி கிராமம்

முல்லைப்பெரியாற்றின் கரையில் லெட்சுமி புல் அறுத்துக்கொண்டிருந்தபோது, சுதீஸ் ஆற்றின் கரையில் விளையாடியுள்ளார். திடீரென சுதீஸ் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டுள்ளார். அதைக் கண்ட பாட்டி லெட்சுமி, சத்தம் எழுப்ப, அருகில் இருந்தவர்கள் ஆற்றில் இறங்கி சுதீஸைக் காப்பாற்ற முயன்றுள்ளனர். ஆனால், நீரின் வேகம் அதிகமாக இருந்ததால், பாட்டி கண்முன்னே சுதீஸ் நீரில் மூழ்கினான். சம்பவம் அறிந்து வந்த தீயணைப்புவீரர்கள், சுமார் மூன்று மணி நேரம் போராடி, சுதீஸ் உடலை மீட்டனர். தொடர்ந்து உடற்கூறு ஆய்வுக்காக, சுதீஸ் உடல் கம்பம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

சுதீஸின் உடலை மீட்டுக் கொண்டுவரும் தீயணைப்பு வீரர்கள்
சுதீஸின் உடலை மீட்டுக் கொண்டுவரும் தீயணைப்பு வீரர்கள்

இது தொடர்பாக விசாரித்துவரும் கூடலூர் போலீஸார், ``முதல்கட்ட விசாரணையில், ஆற்றின் கரையில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவனின் செருப்பு, தண்ணீரில் அடித்துச் சென்றுள்ளது. அதை எடுக்க முயற்சி செய்தபோதுதான், தண்ணீரின் வேகத்தில் சிறுவன் மூழ்கியுள்ளான் எனத் தெரியவந்துள்ளது” என்றனர்.

`எட்டாவது சாட்சி சொன்ன பொய்..!' -கொலை வழக்கில் அதிர்ச்சி தண்டனை கொடுத்த தேனி நீதிபதி
அடுத்த கட்டுரைக்கு