Published:Updated:

வெடித்த ஹெலிகாப்டர்... அதிர்ந்த தேசம்.. விடை தெரியாத கேள்விகளுக்கு விடை கிடைக்குமா?

பிபின் ராவத் - மதுலிகா ராவத்
பிரீமியம் ஸ்டோரி
News
பிபின் ராவத் - மதுலிகா ராவத்

நெருப்பின் உக்கிரம் அதிகமிருந்ததால், யாராலும் நெருங்க முடியவில்லை. சிறிது நேரத்திலேயே சம்பவ இடத்துக்கு வந்த மீட்புப்படையினர், உடனடியாக மீட்புப்பணிகளைத் தொடங்கினார்கள்

வெடித்த ஹெலிகாப்டர்... அதிர்ந்த தேசம்.. விடை தெரியாத கேள்விகளுக்கு விடை கிடைக்குமா?

டிசம்பர் 8-ம் தேதி அப்படியொரு துக்க நாளாக அமையும் என்று தேசம் எதிர்பார்த்திருக்கவில்லை. அன்றைய தினம், நீலகிரி மாவட்டம், ஊட்டி அண்ணா உள்விளையாட்டு அரங்கத்தில் நடந்த ஓர் அரசு நிகழ்ச்சியில், வனத்துறை அமைச்சர் இளித்துரை ராமசந்திரன், மாவட்ட ஆட்சியர் அம்ரித் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கலந்துகொண்டிருந்தார்கள். நண்பகல் 12:30 மணியளவில் ஆட்சியர் அம்ரித்துக்கு ஒரு போன் கால் வந்தது. அழைப்பை ஏற்ற சில நொடிகளிலேயே பதற்றமான அம்ரித், அவசர அவசரமாக மேடையில் பேசிக்கொண்டிருந்த அமைச்சர் ராமசந்திரனிடம் தகவலைப் பகிர்ந்தார். மேடையிலேயே, ‘‘ஆட்சியர் உடனடியாகக் கிளம்ப வேண்டும். ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியிருக்கிறது’’ என்று ராமச்சந்திரன் பதற்றத்துடன் அறிவித்தபோதுதான், இந்திய முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் வந்த ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய தகவலை அங்கிருந்தவர்கள் தெரிந்துகொண்டனர். அடுத்த சில நிமிடங்களில் அதிகாரிகள், மீட்புப்படையினரின் வாகனம் குன்னூர் நஞ்சப்பன் சத்திரம் பகுதிக்கு விரைய... ஊட்டி மட்டுமல்ல, மொத்த இந்தியாவும் பரபரப்பானது.

குன்னூர் வெல்லிங்டன் ராணுவப் பயிற்சிக் கல்லூரியில் நடைபெறவிருந்த கலந்துரையாடல் நிகழ்ச்சிக்காக, டிசம்பர் 8-ம் தேதி டெல்லியிலிருந்து கோவை மாவட்டம் சூலூர் விமானப்படை தளத்துக்கு ராணுவ விமானத்தில் வந்தார் முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத். அவருடன் அவர் மனைவி மதுலிகா ராவத், பிபின் ராவத்தின் ராணுவ ஆலோசகர் பிரிகேடியர் லிட்டர், அவரின் உதவியாளர் கர்னல் ஹர்ஜிந்தர் சிங் உள்ளிட்டோரும் வந்திருந்தார்கள். சூலூரில் சிறிது நேரம் ஓய்வெடுத்த அவர்கள், காலை 11:48 மணிக்கு Mi-17 V5 ரக ஹெலிகாப்டரில் வெல்லிங்டன் பயிற்சிக் கல்லூரிக்குக் கிளம்பினார்கள். மொத்தம் 14 பேருடன் கிளம்பிய அந்த ஹெலிகாப்டர் 12:15 மணிக்கு வெல்லிங்டன் ராணுவ உயரதிகாரிகள் பயிற்சிக் கல்லூரியான ஜிம்கானா மைதானத்தில் தரையிறங்க வேண்டும். ஆனால், தரையிறங்குவதற்கு ஏழு நிமிடங்கள் இருந்தபோது, 12:08 மணிக்கு ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி வெடித்துச் சிதறியது.

வெடித்த ஹெலிகாப்டர்... அதிர்ந்த தேசம்.. விடை தெரியாத கேள்விகளுக்கு விடை கிடைக்குமா?

ஆபத்தை ஏற்படுத்தியதா பனிப்பொழிவு?

இந்தச் சம்பவம் குறித்து விபத்து நடந்த பகுதியிலுள்ள மக்கள், மீட்புப்பணியில் ஈடுபட்ட அதிகாரிகளிடம் பேசினோம். ‘‘கடந்த ஒரு வாரமாக காட்டேரிப் பூங்கா, நஞ்சப்பன் சத்திரம் பகுதியில் மழை, பனிப்பொழிவு அதிகம் இருந்தது. விபத்து நடந்த நேரத்தில்கூட எதிரிலுள்ளவர்கள் தெரியாத அளவுக்கு பனிப்பொழிவு காணப்பட்டது. 12:07 மணிக்கு ஹெலிகாப்டர் பறந்துவரும் சத்தம் கேட்டது. சத்தம் நெருங்க நெருங்க, ஹெலிகாப்டர் நெருப்புடன் மரத்தில் மோதியபடி வந்ததைப் பார்க்க முடிந்தது. கடைசியில், ஒரு பெரிய மரத்தில் மோதி அந்த மரம் துண்டாகி ஹெலிகாப்டரும் கீழே விழுந்தது. ஹெலிகாப்டர் கீழே விழுவதற்கு சில விநாடிகளுக்கு முன்பு, மூன்று பேர் தீப்பற்றிய நிலையில் அடுத்தடுத்து கீழே விழுந்தார்கள். சில நொடிகளில் ஹெலிகாப்டர் வெடித்து, சுமார் 40 அடி உயரத்துக்குத் தீ கொழுந்துவிட்டு எரிந்தது.

அருகிலிருந்த மக்கள் பதறியடித்து ஹெலிகாப்டர் அருகே செல்ல முயன்றார்கள். ஆனால், நெருப்பின் உக்கிரம் அதிகமிருந்ததால், யாராலும் நெருங்க முடியவில்லை. சிறிது நேரத்திலேயே சம்பவ இடத்துக்கு வந்த மீட்புப்படையினர், உடனடியாக மீட்புப்பணிகளைத் தொடங்கினார்கள். முதலில் ஹெலிகாப்டருக்கு வெளியே தீக்காயத்துடன் இருந்த மூன்று பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார்கள். அதன்பிறகு ஹெலிகாப்டரில் சிக்கியிருந்தவர்களும் மீட்கப்பட்டார்கள். அவர்களின் உடல் பெரும்பாலும் கருகியிருந்தன’’ என்றார்கள் அதிர்ச்சி விலகாமலேயே.

இந்தக் கோரச் சம்பவத்தில் ஹெலிகாப்டரில் பயணித்த பிபின் ராவத், மதுலிகா ராவத் உட்பட 13 பேர் மரணமடைந்திருக்கிறார்கள். வெல்லிங்டன் ராணுவப் பயிற்சிக் கல்லூரியின் பயிற்சியாளரான குரூப் கேப்டன் வருண் மட்டும் உயிர்பிழைத்திருக்கிறார். அவர் 80 சதவிகித தீக்காயம் அடைந்திருப்பதால், அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. பிபின் ராவத்தின் மரணம் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட பிறகு, அன்றிரவு 8 மணியளவில் வெல்லிங்டன் ராணுவப் பயிற்சிக் கல்லூரிக்கு வந்த முதல்வர் ஸ்டாலின், விபத்து குறித்து நேரில் விசாரித்தார். ராணுவ அதிகாரிகளிடம், ‘‘தேவையான உதவிகளை மாநில அரசு செய்யும்’’ என்று உத்தரவாதம் அளித்த முதல்வர், அடுத்த நாள் உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்திவிட்டுத்தான் சென்னைக்குப் புறப்பட்டார்.

வெடித்த ஹெலிகாப்டர்... அதிர்ந்த தேசம்.. விடை தெரியாத கேள்விகளுக்கு விடை கிடைக்குமா?

ஏகப்பட்ட குளறுபடிகள்... யார் பொறுப்பு?

பிபின் ராவத் வருகையில் ஏகப்பட்ட குளறுபடிகள் நடந்திருப்பதாகச் சொல்லி அதிரவைக்கிறார்கள் காவல்துறை அதிகாரிகள் சிலர்... நம்மிடம் பேசிய காவல்துறை மூத்த அதிகாரி ஒருவர், ‘‘பிபின் ராவத் வருகிற தகவல் ராணுவத் தரப்பிலிருந்து சூலூர் மற்றும் குன்னூர் லோக்கல் போலீஸாருக்கு மட்டுமே சம்பிரதாயத்துக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடக்கத்தில், சூலூர் விமானப்படை தளத்திலிருந்து ஹெலிகாப்டர் அல்லது சாலை மார்க்கமாகச் செல்லலாம் என்று இரண்டு திட்டங்கள் இருந்துள்ளன. இதற்காக, லோக்கல் போலீஸார் வி.ஐ.பி எஸ்கார்ட் வண்டிகளுடன் சூலூருக்கு விரைந்திருக்கிறார்கள். ஆனால், ராணுவ அதிகாரிகள் எந்த பதிலும் சொல்லாததால் போலீஸார் திரும்பிவிட்டார்கள்.

பொதுவாக உயரதிகாரிகள் வருவதற்கு முந்தைய நாள், ஹெலிகாப்டர்களைக் கொண்டு சோதனை ஓட்டம் நடத்தப்படுவது வழக்கம். அதைச் செய்திருந்தாலே, அந்தப் பகுதியில் பனிப்பொழிவு தாக்கத்தை புரிந்துகொண்டிருக்கலாம். நாட்டின் தலைமைத் தளபதியாக இருப்பவருக்கு ஏகப்பட்ட பாதுகாப்பு புரோட்டோகால் இருந்தும், அவற்றைப் பின்பற்றவில்லை. பகாசூரன் மலைப்பகுதியின் மேல்தான் ஹெலிகாப்டர்கள் அதிகம் செல்லும். ஆனால், பிபின் ராவத் பயணித்த Mi-17 V5 ரக ஹெலிகாப்டர் அந்த வழியில் செல்லாமல், பனிப்பொழிவு இருந்த இரண்டு மலைப்பகுதிகளுக்கு நடுவேயுள்ள பள்ளத்தாக்கின் வழியே பறந்திருக்கிறது. அது மரத்தில் மோதவில்லை என்றாலும், மலையில் மோதியிருக்கும் வாய்ப்புகள் அதிகம்’’ என்றார்.

வெடித்த ஹெலிகாப்டர்... அதிர்ந்த தேசம்.. விடை தெரியாத கேள்விகளுக்கு விடை கிடைக்குமா?

பூத்தூவ மட்டும்தானா ஹெலிகாப்டர்?

ரஷ்ய தயாரிப்பான Mi-17 V5 ரக ஹெலிகாப்டரில் பல உயர் பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன. எளிதில் தீப்பற்றாது; 13,000 கிலோ வரை எடையைச் சுமந்து செல்ல முடியும்; வானிலையை அறியும் நவீன உபகரணங்கள் என பல்வேறு சிறப்பம்சங்கள் இருப்பதால்தான், ரஷ்யாவிடமிருந்து மொத்தம் 151 ஹெலிகாப்டர்களை வாங்கியது இந்தியா. அப்படியிருந்தும், ஹெலிகாப்டரில் எப்படித் தீப்பற்றியது... அதிலிருந்த வானிலை ரேடார் எச்சரிக்கை செய்யவில்லையா என்ற கேள்விகள் எழுகின்றன.

சூலூர் விமானப்படைத்தளத்தில் ஒவ்வொரு மாதமும் சாகச நிகழ்ச்சிகள் நடைபெறும். ஹெலிகாப்டரிலிருந்து தண்ணீரை இறைப்பது, பூக்களை இறைப்பது என்று சாகசம் காட்டுவார்கள். விபத்து நடந்த மலைப் பகுதிக்குச் செல்ல சாலை வசதி சரியில்லாததால், மீட்புக்குழுவினர் சம்பவ இடத்துக்குத் தண்ணீர் கொண்டுசெல்ல மிகவும் சிரமப்பட்டார்கள். குடத்திலும், சிறு பிளாஸ்டிக் பைப்பிலும் தீயை அணைக்க முயன்றார்கள். ஆனால், அந்த நேரத்தில் ஹெலிகாப்டர் மூலம் தண்ணீரை இறைத்து துரித நடவடிக்கை எடுத்திருக்க முடியும். ‘‘இது போன்ற ஆபத்தான காலகட்டங்களில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தவில்லையென்றால், அதை எப்போது பயன்படுத்துவது... பூத்தூவ மட்டும்தானா ராணுவ ஹெலிகாப்டர்?’’ என்ற குரலை சம்பவ இடத்தில் பரவலாகக் கேட்க முடிந்தது.

உயரதிகாரிகள் வருகையின்போது பாதுகாப்புக்காகக் குறைந்தது இரண்டு ஹெலிகாப்டர்கள் வருவது வழக்கம். ‘பிபின் ராவத் வருகையின்போது பாதுகாப்பு ஹெலிகாப்டர்கள் ஏன் வரவில்லை?’ என்ற கேள்வியை எளிதாகக் கடக்க முடியவில்லை. இந்தச் சூழலில், விமானப்படை தளபதி வி.ஆர்.சௌதாரி சம்பவ இடத்தில் விசாரணை நடத்திவருகிறார். முப்படை விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு, ஏர் மார்ஷல் மன்வேந்திர சிங் தலைமையில் விசாரணையும் தொடங்கியிருக்கிறது. ஹெலிகாப்டரின் கறுப்புப் பெட்டி கைப்பற்றப்பட்டு, விமானியின் குரல் பதிவு உள்ளிட்ட முக்கியத் தரவுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

‘‘தேச பக்தரை இழந்துவிட்டோம்!’’

பிபின் ராவத்தின் மரணம் தொடர்பாக, சென்னையிலுள்ள ராணுவ உயரதிகாரி ஒருவரிடம் பேசினோம். ‘‘இந்தச் சம்பவம் ஹெலிகாப்டரின் இயந்திரக் கோளாறால் நிகழ்ந்திருக்கலாம் அல்லது விமானியின் கவனக்குறைவு, பனிமூட்டம் காரணமாக ஏற்பட்ட விபத்தாகக்கூட இருக்கலாம். சதியால்கூட இந்தச் சம்பவம் நடைபெற்றிருக்கலாம். எது உண்மை என்பது விசாரணையின் முடிவில்தான் தெரியவரும். ஆனால், துணிச்சல் மிகுந்த தேச பக்தர் ஒருவரை நாடு இழந்துவிட்டது என்பது மட்டும் உண்மை’’ என்றார்.

விபத்தில் இறந்தவர்களின் உடல்கள் சூலூர் விமானப்படைத் தளத்துக்கு தமிழக அரசின் ஆம்புலன்ஸ்களில் கொண்டுவரப்பட்டபோது, வழியெங்கும் மக்கள் ஆம்புலன்ஸ் வாகனங்களின் மீது பூக்களைத் தூவி மரியாதை செலுத்தியது அனைவரையும் நெகிழச்செய்திருக்கிறது. ராணுவம் ஒருபக்கம் விசாரணையைத் தொடங்கியிருக்கும் நிலையில், விரைவில் என்.ஐ.ஏ-வும் விசாரணைக் களத்தில் குதிக்கும் என்று தகவல்கள் வருகின்றன. கடந்தகாலங்களில் நடைபெற்ற பல்வேறு ஹெலிகாப்டர் விபத்துகளுக்கும், மரணங்களுக்கும் இதுவரை விடை கிடைக்கவில்லை. அதுபோல இல்லாமல், இந்தச் சம்பவத்தில் விடை தெரியாத கேள்விகளுக்கு விரைவில் விடை கிடைக்க வேண்டும்!

வெடித்த ஹெலிகாப்டர்... அதிர்ந்த தேசம்.. விடை தெரியாத கேள்விகளுக்கு விடை கிடைக்குமா?

விரைவில் குணமடைய வேண்டும் வருண் சிங்!

ஹெலிகாப்டரில் பயணித்த 14 பேரில் குரூப் கேப்டன் வருண் சிங் மட்டும்தான் உயிர்தப்பியிருக்கிறார். ஹெலிகாப்டர் விழுந்து தீப்பிடிப்பதற்கு முன்பாக, அதிர்ஷ்டவசமாக வெளியில் குதித்ததால், வருண் உயிர்பிழைத்திருக்கிறார். 80 சதவிகிதத் தீக்காயம் இருந்தாலும், அவரின் உடல் பாகங்கள் செயல்படுகின்றன. மேல் சிகிச்சைக்காக அவர் பெங்களூரு விமானப்படை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறார்.

வெடித்த ஹெலிகாப்டர்... அதிர்ந்த தேசம்.. விடை தெரியாத கேள்விகளுக்கு விடை கிடைக்குமா?

பக்கபலமாக நின்ற கிராம மக்கள்!

ஹெலிகாப்டர் விபத்து நடந்த இடத்திலிருந்து 10 மீட்டர் தொலைவிலேயே குடியிருப்புகள் உள்ளன. பகல் நேரம் என்பதால் பெரும்பாலான மக்கள் வேலைக்குச் சென்றுவிட்டனர். ஹெலிகாப்டர் மரத்தில் மோதாமல் இருந்திருந்தால், அது குடியிருப்பில் மோதி இன்னும் மிகப்பெரிய சேதத்தை ஏற்படுத்தியிருக்கும். விபத்து நடந்தவுடன் ஓடோடி வந்த நஞ்சப்பன் சத்திரம் கிராம மக்கள், மீட்புப்பணிகளுக்குத் தேவையான ஒத்துழைப்புகளை வழங்கினார்கள். தீயை அணைக்க, குடம் குடமாகத் தண்ணீர் கொடுத்தது, போர்வைகள் வழங்கியது, மீட்புப்பணியில் இருந்தவர்களுக்கு தேநீர் கொடுத்தது என்று பக்கபலமாக நின்றார்கள்.