Published:Updated:

பெண்ணைக் காப்பாற்றிய ஹீரோக்கள்!- திருப்பூர் விபத்தில் இறந்த கண்டக்டர், டிரைவரால் வேதனையில் கேரளம்

கிரீஸ், பாஜு
கிரீஸ், பாஜு ( pic: facebook )

திருப்பூர் விபத்தில் பலியான கண்டக்டரும் டிரைவரும் தங்கள் பேருந்தில் பயணித்த பெண் ஒருவரைக் காப்பாற்ற எடுத்த முயற்சிகளை கேரளப் போக்குவரத்துத்துறையினர் நினைவு கூர்ந்துள்ளனர்.

திருப்பூரில் நேற்று இரவு நடந்த சாலை விபத்தில் 19 பேர் பரிதாபமாகப் பலியாகியுள்ளனர். கேரள அரசின் சொகுசுப் பேருந்து மீது எதிர் திசையிலிருந்து வந்த கன்டெய்னர் லாரி டயர் வெடித்து சென்டர் மீடியனைத் தாண்டி வந்து மோதியதில் கோர விபத்து ஏற்பட்டது. கேரள அரசுப் பேருந்தை இயக்கிய டிரைவர் கிரிஷ், கண்டக்டர் பாஜு ஆகியோரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். 2018- ம் ஆண்டு இவர்கள் இருவரும் கேரள மக்களால் ஹீரோக்களாகப் பார்க்கப்பட்டவர்கள்.

தங்கள் பேருந்தில் பயணிக்கும் மக்களின் மீது மிகுந்த அக்கறை காட்டும் டிரைவர் மற்றும் கண்டக்டர்களாக இவர்கள் அறியப்பட்டிருந்தனர். 2018-ம் ஆண்டு ஜூன் மாதம் 3- ந் தேதி எர்ணாகுளத்திலிருந்து பெங்களூருவுக்கு கிரிஷ், பாஜு பேருந்தை ஓட்டிச் சென்றுகொண்டிருந்தனர். திருச்சூரைச் சேர்ந்த கவிதா வாரியார் என்ற பெண் பயணியும் பேருந்தில் இருந்தார்.

திருப்பூர் பேருந்து விபத்து
திருப்பூர் பேருந்து விபத்து

பேருந்து ஹோசூரை நெருங்கிய சமயத்தில், கவிதாவுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. மூச்சு விட முடியாமல் தவித்தார். உடனடியாக, சகபயணிகளின் ஒத்துழைப்புடன் டிரைவர் கிரிஷ் மருத்துவமனை நோக்கிப் பேருந்தை ஓட்டினார். அருகிலிருந்த தனியார் மருத்துவமனையில் அந்தப் பெண்ணை சிகிச்சைக்கு அனுமதித்ததோடு, எதைப் பற்றியும் யோசிக்காமல் சிகிச்சைக்கு வேண்டிய முன் பணத்தையும் தங்களிடமிருந்த டிக்கெட் பணத்திலிருந்து கட்டினர். மேலும், பேருந்தில் நடந்த சம்பவம் குறித்தும் பெங்களூரு, எர்ணாகுளத்தில் உள்ள தங்கள் உயரதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தனர். இதற்கிடையே, அந்தப் பெண்ணின் உறவினர்களுக்கும் தகவல் அளிக்கப்பட்டது.

திருச்சூரிலிருந்து பெண்ணின் உறவினர்கள் வர நீண்ட நேரமாகும் என்பதால், டாக்டர்கள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, கண்டக்டர் பாஜு பெண் பயணிக்கு உதவியாக மருத்துவமனையிலேயே தங்கிக்கொண்டார். டிரைவர் கிரிஷ் மட்டும் சக பயணிகளுடன் பேருந்தை பெங்களூரு நோக்கி ஓட்டிச் சென்றார்.

ட்ரம்ப் வருகைக்காகச் சுத்தம் செய்யப்படும் யமுனை நதி! -மாசுபாட்டை மறைக்கப் போராடும் உ.பி அதிகாரிகள்

பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் வந்த பிறகே, மருத்துவமனையிலிருந்து பாஜு விடைபெற்றார்.

விபத்தில் சிக்கிய பேருந்து(  மாடல்)
விபத்தில் சிக்கிய பேருந்து( மாடல்)

தக்க சமயத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டதால் அந்தப் பெண்ணும் உயிர் பிழைத்துக்கொண்டார். தங்கள் பேருந்தில் பயணித்த பயணியின் உயிரைக் காக்க உதவிய இவர்கள் இருவரையும் புகழ்ந்து அப்போதையை கேரளப் போக்குவரத்துத் துறை நிர்வாக இயக்குநர் டாமின் தக்கன்சேரி பாராட்டுக் கடிதம் வழங்கியிருந்தார். பயணிகள் மீது மிகுந்த அக்கறை செலுத்தும் கிரிஷ், பாஜுவின் திருப்பூர் விபத்தில் உயிரிழந்தது கேரளப் போக்குவரத்துத்துறை ஊழியர்களிடையே மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு