Published:Updated:

ஹிமாச்சல்: `திடீர் நிலச்சரிவு; உருண்டோடி விழுந்த பாறைகள்!' - பெண் மருத்துவர் உட்பட 9 பேர் பரிதாப பலி

நிலச்சரிவு
நிலச்சரிவு

உயிரிழந்த தீபாவின் சகோதரர் மகேஷ்குமார் சர்மா தனது ட்விட்டரில், ``என் சகோதரி தீபா ஜூலை 29-ம் தேதி, தனது 38-வது பிறந்தநாளைக் கொண்டாடுவதற்காக இமாச்சல பிரதேசத்துக்குச் சென்றிருந்தார். இயற்கையை நேசித்த தீபா இயற்கையின் மடியிலேயே உயிரைவிட்டிருக்கிறார்’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

இமாச்சலப் பிரதேசத்தில் கடந்த சில தினங்களாகக் கடும் மழை பெய்துவருகிறது. அதன் காரணமாக மலைப் பிரதேசத்தின் பல பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுவருகிறது. அந்த வகையில், இமாச்சலப் பிரதேச மாநிலம், கின்னார் மாவட்டத்தின் சங்லா பள்ளத்தாக்கில் நேற்று திடீரென ஏற்பட்ட நிலச்சரிவின் காரணமாக, அந்தப் பகுதி வழியாகச் சென்ற சுற்றுலாப்பயணிகள் வாகனத்தின் மீது பெரிய பெரிய பாறைகள் விழுந்ததில், பெண் மருத்துவர் ஒருவர் உட்பட ஒன்பது சுற்றுலாப்பயணிகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் மூன்று பயணிகள் படுகாயமடைந்தனர். அதைத் தொடர்ந்து, இந்தோ - திபெத் எல்லை போலீஸார் மீட்புப்பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.

கின்னார் மாவட்டத்தில் பெய்துவரும் கனமழையின் காரணமாக, நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மதியம் 1:25 மணியளவில் சங்லா-சிட்குல் சாலையில் அமைந்துள்ள பஸ்தேரி அருகே இந்த கோரச் சம்பவம் நிகழ்ந்தது. பஸ்தேரி பாலம் இடிந்து விழுந்து, நிலச்சரிவின் காரணமாகப் பாறைகள் உருண்டோடி சாலைகளிலிருந்த வாகனங்களை நொறுக்கிப்போட்ட வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி, காண்போர் நெஞ்சைப் பதைபதைக்க வைக்கிறது.

பாறைகள் சுற்றுலா வாகனத்தின் மீது விழுந்து ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த ஒன்பது சுற்றுலாப்பயணிகளில் ஒருவரான ஜெய்ப்பூர் பெண் மருத்துவரின் மரணச் செய்தி அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

ஜெய்ப்பூரைச் சேர்ந்த ஆயுர்வேத மருத்துவரான தீபா சர்மா, தனது பிறந்தநாளைக் கொண்டாடுவதற்காக இமாச்சலப் பிரதேசத்துக்குக் கடந்த சில தினங்களுக்கு முன்பு வந்திருக்கிறார். பல்வேறு சுற்றுலாப் பகுதிகளைப் பார்வையிட்டுவிட்டு, தீபா நேற்று கின்னார் மாவட்டத்துக்குச் சென்றிருக்கிறார். தீபா சென்ற நேரத்தில்தான் நிலச்சரிவு ஏற்பட்டு பாறைகள் உருண்டோடி வாகனங்களைச் சூறையாடத் தொடங்கியிருக்கின்றன. தீபா பயணித்த வாகனத்தின் மீது பாறைகள் விழுந்து அவர் உயிரிழப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன்னதாக அவர், தனது ட்விட்டர் பக்கத்தில், ``பொதுமக்கள் அனுமதிக்கப்படும் இந்தியாவின் கடைசி இடம். இந்த இடத்துக்கு அப்பால் 80 கி.மீ தூரத்துக்கு திபெத்துடன் எல்லை உள்ளது. அங்குதான் சீனா சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ளது" என்று இந்தோ - திபெத்திய எல்லைப் பகுதியில் நின்றுகொண்டு தான் எடுத்த புகைப்படத்தைப் பதிவிட்டிருந்தார். ட்வீட் செய்த சில நிமிடங்களில் மருத்துவர் தீபா இயற்கையின் சீற்றத்துக்கு ஆளாகிவிட்டார்.

மருத்துவர் தீபாவின் மறைவு குறித்து இணையவாசிகள் பலரும் சமூக வலைதளங்களில் தங்கள் இரங்கல்களைப் பதிவிட்டுவருகின்றனர். இந்தநிலையில், உயிரிழந்த தீபாவின் சகோதரர் மகேஷ்குமார் சர்மா தனது ட்விட்டரில், `என் சகோதரி தீபா ஜூலை 29-ம் தேதி, தனது 38-வது பிறந்தநாளைக் கொண்டாடுவதற்காக இமாச்சலப் பிரதேசம் சென்றிருந்தார். இயற்கை மீது அளவுகடந்த நேசம் கொண்டவரான அவர் இந்தப் பயணத்துக்காக புது கேமராவையும் தொலைபேசியையும் எடுத்துச் சென்றிருந்தார். இயற்கையை நேசித்த தீபா இயற்கையின் மடியிலேயே உயிரைவிட்டிருக்கிறார்" என்று பதிவிட்டுள்ளார்.

மருத்துவர் தீபா
மருத்துவர் தீபா

அதேபோல், விபத்தில் உயிரிழந்த 8 பேர், மகாராஷ்டிரா மற்றும் டெல்லியைச் சேர்ந்தவர்கள் என்று எல்லைக்காவல் படையினரால் கூறப்பட்டிருக்கிறது.
இந்தியர்கள் அனைவரையும் உலுக்கிப்போட்டிருக்கும் இந்தக் கோர நிலச்சரிவு விபத்து தொடர்பாகக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.

இந்தநிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களுக்குப் பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து 50,000 ரூபாயும் வழங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்திருக்கிறார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு