Published:Updated:

`இது விபத்து பகுதி’ , தொப்பூர் கணவாய்ப் பகுதியும், குறைக்கப்பட்ட விபத்துகளும்!

தொப்பூர் கணவாய் - தேசிய நெடுஞ்சாலை
News
தொப்பூர் கணவாய் - தேசிய நெடுஞ்சாலை

கடந்த நான்கு ஆண்டுகளில் ஏற்பட்ட 326 விபத்துகளால் 136 உயிர்களை காவு வாங்கிய தொப்பூர் கணவாய் பகுதியில், தற்போது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் காரணமாக வெகுவாக விபத்துகள் தவிர்க்கப்பட்டு, உயிர் பலியும் குறைந்துள்ளது.

தொப்பூர் கணவாய் எங்கே உள்ளது?

தேசிய நெடுஞ்சாலை எண் 44, வட மாநிலங்களை தமிழ்நாட்டுடன் இணைக்கும் முக்கிய நெடுஞ்சாலை. கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், தெலங்கானா, ஆந்திரா மாநிலங்களை தமிழ்நாட்டுடன் இணைக்கும் 3,745 கி.மீ நீளமுடைய முக்கிய தேசிய நெடுஞ்சாலை. இந்த தேசிய நெடுஞ்சாலை தருமபுரி மாவட்டத்தில் தொப்பூர் முதல் காரியமங்கலம் வரை 54 கிலோமீட்டர் தொலைவுக்கு உள்ளது.

தொப்பூர் கணவாய் - தேசிய நெடுஞ்சாலை
தொப்பூர் கணவாய் - தேசிய நெடுஞ்சாலை

கனரக வாகனங்களின் சாலை!

இந்தச் சாலை தருமபுரி மாவட்டத்தில் L & T பாளையம் டோல் பிளாசா பராமரிப்பில் இருந்துவருகிறது. நாளொன்றுக்கு சராசரியாக 35,000 முதல் 40,000 வாகனங்கள் இந்தச் சாலை வழியே கடந்து செல்கின்றன. இவற்றில் 75 சதவிகித வாகனங்கள் கனரக வாகனங்கள். கனரக வாகனங்களில் 20 டன் முதல் 60 டன் வரை எடையுள்ள லாரிகள் வருகின்றன. மாநிலங்களின் பொருள்கள் ஏற்றுமதி, இறக்குமதி பரிவர்த்தனைக்கும், மும்பை, பெங்களூரு போன்ற பகுதிகளின் தொழில்நுட்ப வளர்ச்சி, ஓசூர், கர்நாடகா மாநிலங்களின்‌ தொழிற்பேட்டைகளின் வளர்ச்சி ஆகிய காரணங்களால் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு அதிக போக்குவரத்து உள்ள சாலையாக இது உள்ளது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

சாலையின் அபாயகரமான பகுதி..!

தவிர்க்க முடியாத சாலையாக தருமபுரி - சேலம் சாலையில் அமைந்துள்ள கட்டமேடு முதல் காவலர் குடியிருப்பு சந்திப்பு வரையுள்ள அபாயகரமான நான்கு தொடர் வளைவுகளும், தாழ்வான சாலையாகவும் இருப்பதால் இந்தக் கணவாய்ப் பகுதியில் அதிக அளவில் விபத்துகள் ஏற்படுகின்றன.

தொப்பூர் கணவாய் - தேசிய நெடுஞ்சாலை
தொப்பூர் கணவாய் - தேசிய நெடுஞ்சாலை

விபத்துகள் ஏற்படுவதற்கான காரணங்கள் என்னனென்ன..? விவரம் தெரிந்தவர்களிடம் விசாரித்தபோது,

  • தருமபுரி - சேலம் சாலையில் கட்டமேடு முதல் காவலர் குடியிருப்பு சந்திப்பு வரை இடைப்பட்ட இரண்டு கிலோமீட்டர் தொலைவுக்குள் நான்கு பெரிய வளைவுகள் உள்ளன.

  • இங்கு அதிக அளவில் விபத்துக்குள்ளாவது கனரக வாகனங்கள். ஏனெனில், அவை அதிக எடையுடன் சாலையை வேகமாகக் கடப்பதால் பெரும்பாலான விபத்துகள் ஏற்படுகின்றன.

  • பள்ளமான சாலையில் வேகமாக வரும் வாகனங்கள் இரண்டாவது மூன்றாவது வளைவுகளைக் கடந்து, நான்காவது வளைவுக்கு வரும்போது முழுக் கட்டுப்பாட்டையும் இழப்பதால் விபத்து ஏற்படுகிறது.

  • தாழ்வான சாலையில் எரிபொருள் சிக்கனத்தைக் கடைபிடிக்க நியூட்ரல் கியரில் வாகனத்தை இயக்கிவரும் வாகன ஓட்டிகளால், வாகனத்தின் பிரேக் வேகம் பிடிக்காமல் விபத்து ஏற்படுகிறது.

  • சாலைப் பகுதியின் தன்மை அறியாமல் புதிதாக வரும் வாகன ஓட்டிகள் வாகனங்களை வேகமாக இயக்குவதால் விபத்துகள் ஏற்படுகின்றன.

  • கனரக வாகனங்களில் முறையற்ற உருவத்தில் பாரங்களைக் கட்டி எடுத்து வருவதன் மூலமும் விபத்து ஏற்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இது போன்ற காரணங்களால் ஏற்படும் விபத்துகளால் ஒன்றுமறியாத லாரி ஓட்டுநர்களும், சாதாரணப் பொதுமக்களும் பாதிக்கப்படுகின்றனர். உயிர்ச்சேதம் ஏற்படுவதால் அவர்களின் குடும்பங்களும் பாதிக்கப்படுகின்றன. விலைமதிப்பற்ற உயிர்களை சாலை விபத்தில் இழக்கவேண்டிய நிலை ஏற்பட்டுவிடுகிறது.

கடந்த நான்கு ஆண்டுகளில் ஏற்பட்ட 326 விபத்துகளால் 136 பேர் மரணித்துள்ளனர்.

மூன்று வருடங்களில் ஏற்பட்ட விபத்து மற்றும் உயிரிழப்பு விவரம் பின்வருமாறு...

2018-ம் ஆண்டின் 101 விபத்துகளில் 32 பேர் உயிரிழப்பு.

2019-ம் ஆண்டின் 101 விபத்துகளில் 45 பேர் உயிரிழப்பு.

2020-ம் ஆண்டின் 97 விபத்துகளில் 38 பேர் உயிரிழப்பு.

தொப்பூர் கணவாய் - தேசிய நெடுஞ்சாலை
தொப்பூர் கணவாய் - தேசிய நெடுஞ்சாலை

L & T பாளையம் டோல் பிளாசா பதிவேடுகளின்படி கடந்த நான்கு ஆண்டுகளில் கட்டமேடு - காவலர் குடியிருப்பு சந்திப்பு இதற்கு இடைப்பட்ட 2 கிலோமீட்டர் விபத்து பகுதியில் நடந்த மொத்த விபத்துகளின் எண்ணிக்கை 350. இவற்றில் 326 விபத்துகள் இந்த தருமபுரி - சேலம் சாலையில் குறிப்பிட்ட 2 கிலோமீட்டர் தூரத்துக்குள் நடந்துள்ளன.

இந்த கோர விபத்துகளைத் தடுக்க மாவட்ட நிர்வாகம், காவல்துறையினர், நெடுஞ்சாலைத்துறை, டோல் பிளாசா நிர்வாகம் ஆகியோர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளனர்.

இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்துப் பார்க்கலாம்.

`இந்தப் பகுதியில் பயணிக்கும் வாகனங்கள் 30 கிலோமீட்டர் வேகத்தில் செல்ல வேண்டும்’ என்ற அறிவிப்புப் பலகையும் `இரண்டாவது கியரில் செல்ல வேண்டும்’ என்ற அறிவிப்புப் பலகையும் தமிழ், ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகளில் வைக்கப்பட்டுள்ளன.

தொப்பூர் கணவாய் - தேசிய நெடுஞ்சாலை
தொப்பூர் கணவாய் - தேசிய நெடுஞ்சாலை

ஒலிபெருக்கி மூலம் வாகன ஓட்டிகளுக்கு அறிவிப்புகள் செய்யப்பட்டுவருகின்றன.

கட்ட மேடு காவலர் குடியிருப்பு சந்திப்பு வரை உள்ள சாலையின் தன்மையையும், வாகனத்தின் வேகத்தைக் குறைக்க நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளன.

தொப்பூர் கணவாய் - தேசிய நெடுஞ்சாலை
தொப்பூர் கணவாய் - தேசிய நெடுஞ்சாலை

கட்ட மேடு காவலர் குடியிருப்பு சந்திப்பு வரை உள்ள வளைவுகளில் ஒளிரும் பட்டைகள் அதிக அளவில் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த விபத்து பகுதியிலுள்ள இரட்டைப் பாலத்தின் பக்கவாட்டு சுவர்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளன.

தொப்பூர் ஆஞ்சநேயர் கோயில் வளைவு விபத்து பகுதியில் இரண்டாவது கியரில் செல்ல வேண்டும் எனவும், வாகனத்தை 30 கிலோமீட்டர் வேகத்தில் மட்டுமே இயக்க வேண்டும் எனவும் எச்சரிக்கைப் பலகை டிஜிட்டல் டிஸ்பிளே போர்டு வைக்கப்பட்டுள்ளது.

தொப்பூர் கணவாய் - தேசிய நெடுஞ்சாலை
தொப்பூர் கணவாய் - தேசிய நெடுஞ்சாலை

கட்டமேடு - காவலர் குடியிருப்பு சந்திப்பு வரை உள்ள விபத்து பகுதியில் வேகமாக வாகனங்களை இயக்குவதைக் கண்காணிக்கவும், அதிக பாரம் ஏற்றி வரும் வாகனங்களைக் கண்காணிக்கவும் இரண்டு இடங்களில் ஸ்பீடு வயலேஷன் ரெடக்‌ஷன் சிஸ்டம் அமைத்து வட்டாரப் போக்குவரத்து அலுவலர் மூலம் ஆன்லைனில் அபராதம் விதிக்கப்பட்டுவருகிறது. கட்ட மேடு பகுதியில் கட்டுப்பாட்டு அறை அமைத்து ஒலிபெருக்கி மூலம் வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை அறிவிப்புகள் அறிவிக்கப்பட்டுவருகின்றன.

தொப்பூர் கணவாய் - தேசிய நெடுஞ்சாலை
தொப்பூர் கணவாய் - தேசிய நெடுஞ்சாலை

இதனால் நடப்பாண்டில் விபத்துகளின் எண்ணிக்கை 27-ஆகக் குறைந்திருக்கிறது. விபத்துகளில் 21 பேர் மரணித்துள்ளனர். இந்தத் தரவுகளைக் கடந்த ஆண்டுப் பதிவுகளோடு ஒப்பிடும்போது, விபத்துகள் வெகுவாகவே தவிர்க்கப்பட்டிருப்பது தெரியவரும். இருப்பினும், இப்போது ஏற்படுத்தப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் கனரக வாகன ஓட்டுநர்களிடையே சாலை அமைப்பு மற்றும் வேகக் கட்டுப்பாடு பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளன. இதனால் விபத்து பெரும்பாலாகத் தவிர்க்கப்பட்டு, இப்போது விபத்து குறைக்கப்பட்ட சாலையாக மாறியுள்ளது. இந்தத் தரவுகள் நம்பிக்கை அளித்தாலும் விபத்துகள் இல்லா நிலை வேண்டும் என்பதுதான் அனைவரின் கோரிக்கையாக இருக்கிறது. அந்தப் பொறுப்பு, அரசுக்கு மட்டுமல்ல, வாகன ஓட்டுநர்களுக்கும் வேண்டும்!