வேலூர் விருப்பாட்சிபுரத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர் இன்று மதியம், காரில் திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே புதூரிலுள்ள குலதெய்வக் கோயிலுக்குச் சென்றுகொண்டிருந்தனர். வேலூர்-கடலூர் சாலையில் அதிவேகமாக கார் சென்றபோது, ஆரணிக்கு அருகில் முனிவந்தாங்கல் கூட்ரோட்டில் காரின் முன்பக்க டயர் திடீரென வெடித்திருக்கிறது. கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடிய கார் மீது எதிரே வந்த கனரக லாரி மோதியது. இதில், கார் நொறுங்கி சேதமடைந்தது. இந்த கோர விபத்தில், காரில் பயணம் செய்த கைக்குழந்தை உட்பட ஆறு பேர் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். முனியம்மாள் (60), ராதிகா (45), கோமதி (26), பரிமளா (21) ஆகிய நான்கு பெண்கள், மூர்த்தி என்ற 60 வயது முதியவர், மூன்று மாதப் பெண் குழந்தை நிஷா ஆகிய ஆறு பேரும்தான் உயிரிழந்தவர்கள்.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
மேலும், இவர்களுடன் பயணித்த கலா (36), பூர்ணிமா (35), மாலதி (27), கார் ஓட்டுநர் சசிகுமார் (25), மூன்று வயது ஆண் குழந்தை குமரன் ஆகிய ஐந்து பேரும் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர். சிகிச்சைக்காக இவர்கள், வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து ஏற்படுத்திய லாரி ஓட்டுநர் தப்பி ஓடிவிட்டார். தகவலறிந்து வந்த சந்தவாசல் போலீஸார், ஆறு பேரின் உடல்களையும் மீட்டு ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள். முன்னதாக சம்பவ இடத்தில், திருவண்ணாமலை மாவட்ட எஸ்.பி பவன்குமார், ஆரணி கோட்டாட்சியர் கவிதா உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு செய்தனர். ஒரே குடும்பத்தில் ஆறு பேர் பலியான சம்பவம், அவர்களது உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.