Published:Updated:

சென்னை: சிக்னலுக்குக் காத்திருந்த பைக்; கட்டுப்பாட்டை இழந்த தண்ணீர் லாரி! - அதிர்ச்சி சம்பவம்

விபத்தை ஏற்படுத்திய தண்ணீர் லாரி
விபத்தை ஏற்படுத்திய தண்ணீர் லாரி

சென்னையில் உறவினர்களுடன் பைக்கில் சென்ற சிறுவன், தண்ணீர் லாரி மோதிய விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தான்.

சென்னை, சாந்தோமிலிருந்து அடையாறு நோக்கிச் செல்லும் சாலையில், பட்டினப்பாக்கத்தில் சிக்னலில் இன்று காலை, சிக்னலுக்காக வாகனங்கள் காத்திருந்தன. அப்போது. தண்ணீர் லாரி ஒன்று திடீரென கட்டுப்பாட்டை இழந்து, அந்த சிக்னலில் காத்திருந்த வாகனங்கள்மீது மோதியது. அதனால் சிக்னலுக்காகக் காத்திருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். லாரியின் சக்கரத்தில் வாகனங்கள் அடுத்தடுத்து சிக்கின. லாரியை நிறுத்த டிரைவர் முயன்றார். ஆனால், லாரியை நிறுத்த முடியவில்லை.

விபத்து நடந்த இடம்
விபத்து நடந்த இடம்

அப்போது, எண்ணூரைச் சேர்ந்த பிரனீஷ் (4) என்ற சிறுவன், அவனின் சகோதரி பிரதீஷா (3) ஆகியோர் தங்களுடைய உறவினர்களுடன் பைக்கில் தரமணிக்குச் செல்ல சிக்னலில் காத்திருந்தனர். தறிக்கெட்டு ஓடிய லாரி, பிரனீஷ் அமர்ந்திருந்த பைக்கின் மீதும் மோதியது. இதில் பிரனீஷ், லாரியின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான். அவனின் தங்கை, மற்றும் உறவினர்கள் காயங்களுடன் உயிர்தப்பினர். அதன் பிறகும் தண்ணீர் லாரி நிற்கவில்லை.

சிக்னலில் காத்திருந்த சென்னை கொடுங்கையூர் எழில்நகரைச் சேர்ந்த ரமேஷின் பைக் மீது லாரி மோதியது. உஷாரான ரமேஷ், பைக்கிலிருந்து குதித்து உயிர் தப்பினார். அப்போது அவரின் பைக், லாரியின் சக்கரத்தில் சிக்கி முழுமையாகச் சேதமடைந்தது. இதையடுத்து லாரி, அங்கிருந்த சிக்னல் கம்பியை இடித்துத் தள்ளிவிட்டு அருகிலிருந்த தடுப்பில் மோதி நின்றது. கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்த விபத்தால் வாகன ஓட்டிகள் அலறியடித்துக்கொண்டு ஓட்டம் பிடித்தனர். இந்த விபத்து குறித்து பட்டினப்பாக்கம் காவல் நிலையத்துக்கும், அடையாறு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

சேதமடைந்த சிக்னல் கம்பி
சேதமடைந்த சிக்னல் கம்பி

சம்பவம் நடந்த இடத்துக்கு விரைந்துவந்த ஆம்புலன்ஸ்களில் காயமடைந்தவர்கள் ஏற்றப்பட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். போலீஸார் வருவதற்குள் விபத்தை ஏற்படுத்திய டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். உயிரிழந்த பிரனீஷின் சடலத்தை மீட்ட போலீஸார், பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இந்த விபத்து குறித்து அடையாறு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், தண்ணீர் லாரியை ஓட்டியது பட்டினம்பாக்கத்தைச் சேர்ந்த சமீர் (24) என்று தெரியவந்தது. அவரைப் பிடித்த போலீஸார் விபத்து குறித்து விசாரித்துவருகின்றனர்.

இது குறித்து போலீஸார் கூறுகையில், ``எண்ணூர் சிவகாமி நகரைச் சேர்ந்தவர் ராஜேந்திர பிரசாத். இவரின் மனைவி ஆசிரியை மரிய ஒளி நிஷா. இந்தத் தம்பதியரின் மகன் பிரனீஷ், மகள் பிரதீஷா. இவர்கள் இருவரும் தங்களது உறவினரான கோபால் மற்றும் உமாவுடன் சென்னை தரமணியிலுள்ள உறவினர் வீட்டுக்குச் செல்ல பைக்கில் இன்று காலை வந்திருக்கிறார்கள். அப்போது பட்டினப்பாக்கம் சிக்னலில் கோபால் பைக்கில் காத்திருந்தார். இந்தச் சமயத்தில்தான் தண்ணீர் லாரி, கோபாலின் பைக்மீது மோதியிருக்கிறது.

சென்னை: பைக்கிலிருந்து தவறி விழுந்த மாநகராட்சிப் பெண் ஊழியர்... உயிரைப் பறித்த பேருந்து!
சக்கரத்தில் சிக்கிய பைக்
சக்கரத்தில் சிக்கிய பைக்

அதனால் நிலை தடுமாறிய கோபால், பிரதீஷா, உமா ஆகியோர் லாரியின் சக்கரத்துக்கு வெளியில் விழுந்திருக்கிறார்கள். ஆனால் பிரனீஷ் மட்டும் லாரியின் சக்கரத்துக்குள் விழுந்து நசுங்கி உயிரிழந்திருக்கிறார்கள். விபத்து குறித்து விசாரணை நடத்திவருகிறோம். அடுத்தடுத்து வாகனங்களின் மீது தண்ணீர் லாரி மோதியிருக்கிறது. இதில் காயமடைந்தவர்களிடமும், விபத்தை நேரில் பார்த்தவர்களிடமும் விசாரணை நடந்துவருகிறது. இதற்கிடையில் விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பி ஓடிய டிரைவர் சமீரைப் பிடித்து அவரிடமும் விசாரித்துவருகிறோம்" என்றனர்.

சிக்னலுக்காகக் காத்திருந்தபோது தண்ணீர் லாரியின் சக்கரத்தில் சிக்கி சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு