Published:Updated:

கடலூர்: `மாடு பாவம்மா…’ பசுவைக் காப்பாற்றச் சென்ற குழந்தைகளுக்கு நேர்ந்த சோகம்

இடி-மின்னல்
இடி-மின்னல் ( Pixabay )

கடலூர் மாவட்டம், பண்ருட்டியில் நேற்றிரவு பெய்த மழையில் பசு மாடுகளைக் காப்பாற்றச் சென்ற அக்கா, தம்பி இருவரும் இடி தாக்கியதில் உடல் கருகி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

புதுச்சேரி, கடலூர் உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக விட்டு விட்டு கனமழை பெய்துவருகிறது. கடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று மாலை 5 மணியளவில் திடீரென கருமேகங்கள் சூழ்ந்து இடி, மின்னலுடன் கனமழை பெய்யத் தொடங்கியது. கடலூர் மாவட்டம், புதுப்பேட்டையை அடுத்திருக்கும் மணப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த சண்முகத்துக்கு நிஷா, கவியரசன், தீனா என மூன்று குழந்தைகள்.

உயிரிழந்த சிறுமி நிஷா
உயிரிழந்த சிறுமி நிஷா

நிஷா அதே பகுதியிலுள்ள அரசுப் பள்ளியில் 7-ம் வகுப்பும், கவியரசன் 6-ம் வகுப்பும் படித்துவந்தனர். சண்முகம் தனது வீட்டில் பசுமாடு ஒன்றை வளர்த்துவந்தார். வழக்கம்போல நேற்று அதைத் தன் வீட்டுக்குப் பின்புறமுள்ள நிலப்பகுதியில் மேய்ச்சலுக்கு விட்டு, கட்டியிருந்தனர்.

நேற்று மாலை மழை பெய்யத் தொடங்கியதும், ``மாடு நனையுதும்மா. தம்பிகூட நான் போய் கூட்டிக்கிட்டு வந்துர்றேன்” என்று தனது அம்மா ருக்குவிடம் கூறியிருக்கிறார் நிஷா.

உயிரிழந்த சிறுவன் கவியரசன்
உயிரிழந்த சிறுவன் கவியரசன்

அதற்கு ``நீங்க மழையில நனையாதீங்க. நான் வேலையை முடிச்சிட்டுப் போய் அவுத்துட்டு வந்து கட்டிடுறேன்” என்று கூறியிருக்கிறார் ருக்கு. சிறிது நேரத்தில் இடி, மின்னலுடன் மழை வலுக்க ஆரம்பிக்கவே, ``அம்மா மாடு பாவம்மா... இடி இடிக்குது. அது பயந்துடும்மா... நாங்க போய் கூட்டிட்டு வந்துடுறோம்” என்று கூறிவிட்டு தனது தம்பி கவியரசனை அழைத்துக்கொண்டு மாடு கட்டப்பட்டிருக்கும் இடத்தை நோக்கி குடையுடன் ஓடினார் நிஷா.

கட்டியிருந்த மாட்டை அவிழ்த்த நேரத்தில், நிஷாவையும், கவியரசனையும் பலமாக இடி தாக்கியது. அதில் இருவரும் உடல் கருகிய நிலையில் மயங்கி விழுந்தனர். இடிச் சத்தத்தைக் கேட்டு வெளியே வந்து பார்த்த தாய் ருக்கு குழந்தைகள் பேச்சு மூச்சற்று மயங்கிக்கிடப்பதைப் பார்த்துக் கதறியிருக்கிறார். குழந்தைகள் இருவரையும் மீட்ட அந்தப் பகுதி மக்கள் அவர்களை பண்ருட்டி அரசு மருத்துவமனைக்குத் தூக்கிச் சென்றனர்.

புதுக்கோட்டையில் இடி தாக்கி 4 பெண்கள் பலி; 17 பேர் படுகாயம்! - விவசாயப் பணி செய்தபோது நேர்ந்த சோகம்

அங்கு அவர்களைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர்கள் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இரண்டு பிஞ்சுகளைப் பறிகொடுத்த அந்தக் கிராமமே இப்போது சோகத்தில் மூழ்கியிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு