Published:Updated:

மின்கம்பத்திலிருந்து முறையற்ற மின் கனெக்‌ஷன்; இரண்டு தொழிலாளர்கள் உயிரிழப்பு!

அப்போது, போதிய வெளிச்சம் இல்லாததால் ஜே.சி.பி ஆபரேட்டர் அஜித்குமார் என்பவர் ஃபோக்கஸ் லைட்டை, வேறு இடம் மாற்றுவதற்காக எடுத்தபோது, அவர்மீது மின்சாரம் தாக்கியிருக்கிறது.

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி ஒன்றியத்தில் இருக்கிறது பள்ளப்பட்டி பேரூராட்சி. சமீபத்தில், இந்தப் பேரூராட்சியை தமிழக அரசு, நகராட்சியாக தரம் உயர்த்தி அறிவித்திருக்கிறது. அந்தப் பகுதியில், குடிநீர்க்குழாய் பதிக்கும் பணி நடைபெற்றுவருகிறது. பள்ளப்பட்டி தெற்கு மந்தைத் தெரு அருகில் நடைபெற்ற பணியில், செல்லிவலசு பகுதியைச் சேர்ந்த வீரக்குமாரும், திண்டுக்கல் மாவட்டம் அச்சனம்பட்டியைச் சேர்ந்த அஜித்குமார் என்பவரும் பணிசெய்துகொண்டிருந்தனர்.

சம்பவம் நடைபெற்ற இடம்
சம்பவம் நடைபெற்ற இடம்

அவர்கள் வேலை செய்துகொண்டிருந்தபோது, அருகிலுள்ள மின் கம்பத்திலிருந்து இணைப்பு எடுத்து (கரூர் மாவட்டம், பள்ளப்பட்டி தேர்வுநிலை பேரூராட்சி வளம் மீட்பு பூங்கா செல்லும் வழி) என்ற இரும்பு போர்டில் ஃபோக்கஸ் லைட் கட்டி, ஜே.சி.பி இயந்திரம் மூலம் குழி தோண்டிக்கொண்டிருந்தனர். அப்போது, போதிய வெளிச்சம் இல்லாததால் ஜே.சி.பி ஆப்பரேட்டர் அஜித்குமார் என்பவர் ஃபோக்கஸ் லைட்டை, வேறு இடம் மாற்றுவதற்காக எடுத்தபோது, அவர்மீது மின்சாரம் தாக்கியிருக்கிறது. இதனால், அவர் தடுமாறி குழியில் வேலை செய்துகொண்டிருந்த, வீரக்குமார் மீது விழுந்துவிட்டார். இதில், இருவர் மீதும் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டனர்.

அதன் பிறகு, இறந்தவர்களின் உடல்களை பள்ளப்பட்டி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். இந்தநிலையில், இறந்தவர்களின் உறவினர்கள், கான்ட்ராக்ட் பணியை எடுத்தவர்கள் பணியாளர்களுக்கு உரிய பாதுகாப்பைச் செய்யாமல்விட்டதைக் கண்டித்து சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால், கரூரிலிருந்து திண்டுக்கல் செல்லும் வாகனப் போக்குவரத்து தடைபட்டது. காவல்துறையினர் வந்தும், போராட்டம் நிற்கவில்லை. நான்கு மணி நேரத்துக்கு மேல் நீடித்த இந்தப் போராட்டம், காவல்துறையினரின் அமைதிப் பேச்சுவார்த்தையில் இறந்தவர்களின் உறவினர்கள் சமாதானம் அடைந்த காரணத்தால், முடிவுக்கு வந்தது. தொடர்ந்து, இந்தச் சம்பவம் குறித்து அரவக்குறிச்சி காவல் நிலைய போலீஸார் விசாரணை செய்துவருகின்றனர்.

Vikatan
உறவினர்கள் சாலை மறியல்
உறவினர்கள் சாலை மறியல்

"தொழிலாளர்களை வைத்து பணி செய்யும் ஒப்பந்தம் செய்தவர்கள், அவர்களை இரவு நேரத்தில் பணி செய்யச் சொன்னதே தவறு. இல்லையென்றால், அந்தப் பணியாளர்களுக்கு இரவில் பணிசெய்வதற்கு உரிய ஏற்பாட்டையாவது சரியாகச் செய்திருக்க வேண்டும். ஆனால், மின்கம்பத்தில் மின்சாரம் எடுத்துப் பயன்படுத்தியதால் மின்கசிவு ஏற்பட்டு, இரண்டு அப்பாவிகளின் உயிர்கள் பறிபோயிருக்கின்றன. அரசு, இறந்தவர்களின் உறவினர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். இதுபோல் அஜாக்கிரதையாக மின்சாரம் பயன்படுத்துவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இது போன்று பணிபுரியும் பணியாளர்களுக்கு உரிய பாதுகாப்பு வசதிகளை, அரசுப் பணிகளை ஒப்பந்தம் எடுப்பவர்கள் செய்கிறார்களா என்று கண்காணிக்க வேண்டும்" என்று போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கோரிக்கை விடுத்திருக்கின்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு