Published:Updated:

காப்பாற்றியவருக்குக் காவல்; லாரி டிரைவர் மீது வழக்கு! -அதிமுக கொடிக்கம்ப விபத்தால் கொதிக்கும் கோவை

அ.தி.மு.க-வினரின் விளம்பர வெறியால் மேலும் ஒரு இளம்பெண் பாதிக்கப்பட்டுள்ளார். இவர்களது விளம்பர வெறிக்கு முற்றுப்புள்ளி எப்போது?' என ட்விட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார் ஸ்டாலின்.

அ.தி.மு.க கொடி
அ.தி.மு.க கொடி

கோவை சிங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் அனுராதா. தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். நேற்று காலை பணிக்குச் செல்வதற்காக, தனது இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார். அப்போது, அ.தி.மு.க கொடிக் கம்பம் ஒன்று சரிந்ததால், வேகமாக பிரேக் போட முயற்சித்தார். இதனால், அவரின் இருசக்கர வாகனம் கீழே விழுந்தது. அதே நேரத்தில், அந்த வழியாக வந்த லாரி ஒன்று அனுராதாவின் கால்கள் மீது ஏறியது.

அனுராதா
அனுராதா

தற்போது அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். `அனுராதாவின் ஒரு காலில் எலும்பு வெளியே வந்துவிட்டது. மற்றொரு காலில் நரம்புகள் கட்டாகிவிட்டன’ என அவரின் உறவினர்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.

அப்பகுதியின் அ.தி.மு.க பிரமுகரும் யோகா மாஸ்டருமான சுவாமி போமிவர்தன் – தாமரை இல்லத் திருமணம் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று நடைபெற்றது. அதற்காக, அவிநாசி சாலையின் ஒரு பகுதி முழுவதும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு அ.தி.மு.க கொடிக் கம்பங்களும் வைக்கப்பட்டன.

விபத்தை ஏற்படுத்திய லாரி
விபத்தை ஏற்படுத்திய லாரி

இந்த நிலையில், இந்தச் சம்பவத்தில் விஜய் ஆனந்த் என்பவரும் லாரி மோதியதால் பாதிக்கப்பட்டுள்ளார். சிறு காயங்களுடன் தப்பிய விஜய் ஆனந்தின் இரு சக்கர வாகனம் மீது லாரி ஏறியதில் கடுமையான சேதம் ஏற்பட்டது. இந்த நிலையில், இந்த விபத்து தொடர்பாக காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்தார். அந்தப் புகாரின் அடிப்படையில் விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநர் முருகன் மீது கிழக்குப் போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

சாலையோரத்தில் நடப்பட்டிருந்த அ.தி.மு.க கொடிக் கம்பம் சாய்ந்ததே விபத்துக்கு காரணமென அனுராதாவின் உறவினர்கள் குற்றம்சாட்டியிருந்த நிலையில், லாரி ஓட்டுநர் மீது மட்டும் வழக்கு பதிவு செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

லாரியின் அடியில் கிடக்கும் டூவீலர்
லாரியின் அடியில் கிடக்கும் டூவீலர்

அனுராதாவுக்கு 8 மணிநேரம் தொடர்ச்சியாக அறுவை சிகிச்சை நடைபெற்றதாக அவரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இன்னும் அவர் கண் விழிக்கவில்லை எனவும் கண் விழித்தபிறகு அடுத்தகட்ட சிகிச்சை தொடர்பாக மருத்துவர்கள் தெரிவிப்பார்கள் எனவும் தெரிவித்தனர். மேலும், இந்த விபத்து தொடர்பாக வழக்குத் தொடர்வது குறித்து தற்போது வரை எதுவும் முடிவு செய்யவில்லை என்றும் தெரிவித்தனர்.

இந்த விவகாரம் தொடர்பாக தி.மு.க தலைவர் ஸ்டாலின், `கோவையில் அனுராதா என்பவர் விபத்துக்குள்ளானதற்கு அ.தி.மு.க கொடிக் கம்பம் சரிந்து விழுந்ததே காரணமெனவும், அதை காவல்துறையினர் மறைப்பதாகவும் புகார்கள் எழுகின்றன. அ.தி.மு.க-வினரின் விளம்பர வெறியால் மேலும் ஒரு இளம்பெண் பாதிக்கப்பட்டுள்ளார். இவர்களது விளம்பர வெறிக்கு முற்றுப்புள்ளி எப்போது?' என ட்விட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார்.

காப்பாற்றியவருக்குக் காவல்; லாரி டிரைவர் மீது வழக்கு! -அதிமுக கொடிக்கம்ப விபத்தால் கொதிக்கும் கோவை

சிங்காநல்லூர் தொகுதியின் தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக் கூறுகையில், ``முதலமைச்சர் வருகைக்காக வைத்திருந்த அ.தி.மு.க கொடிக்கம்பம் சாய்ந்ததே விபத்துக்குக் காரணம். இதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்

அனுமதி பெற்று கொடிக்கம்பங்கள் நடப்பட்டதா என்பதை கோவை மாநகர காவல் ஆணையாளர் விளக்க வேண்டும். விபத்தில் படுகாயமடைந்த பெண்ணை மருத்துவமனையில் அனுமதித்த வடிவேல் என்பவரை சட்டத்துக்குப் புறம்பாக காவல் நிலையத்தில் இரவு வரை வைத்திருந்தது ஏன்?” எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

`நீதிமன்றம் இந்த வழக்கை தாமாக முன்வந்து விசாரிக்க வேண்டும்' எனவும் கோரிக்கை வைக்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.