Election bannerElection banner
Published:Updated:

புதுக்கோட்டை: மண்ணெண்ணெய் விளக்கால் வந்த ஆபத்து! - கணவன், மனைவி உயிரிழந்த சோகம்

உயிரிழந்த கணவன், மனைவி
உயிரிழந்த கணவன், மனைவி

நள்ளிரவில் மண்ணெண்ணெய் விளக்கு எதிர்பாராதவிதமாக ரெஜினா பேகத்தின் மீது விழுந்து தீ விபத்து ஏற்பட்டுள்ளது. மனைவியைக் காப்பாற்ற முயன்ற கணவன் மீதும் தீப்பற்றிக்கொள்ள கணவனும் மனைவியும் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகேயுள்ள கெண்டையம்பட்டியைச் சேர்ந்தவர் சம்சுதீன். இவரின் மனைவி ரெஜினா பேகம் (28). இவர்களுக்குக் கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. இரண்டு பெண் குழந்தைகள், ஓர் ஆண் குழந்தை என இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். இந்தநிலையில், இரவு வீட்டில் சம்சுதீன், அவரின் மனைவி ரெஜினா பேகம் மற்றும் குழந்தைகள் உறங்கிக்கொண்டிருந்தனர். முன்னதாக ரெஜினா பேகம் படுக்கும்போது படுக்கையின் அருகிலேயே மண்ணெண்ணெய் விளக்கை ஏற்றிவைத்துவிட்டுப் படுத்திருக்கிறார். நள்ளிரவில் மண்ணெண்ணெய் விளக்கு எதிர்பாராதவிதமாக ரெஜினா பேகத்தின் மீது விழுந்து தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சேலையில் தீப்பற்றி எறிந்த ரெஜினா பேகம் அலறித் துடித்திருக்கிறார். அலறல் சத்தம் கேட்டு விழித்த சம்சுதீன் சுதாரித்தவர், குழந்தைகளைச் சற்று தொலைவில் வெளியேவிட்டுவிட்டு, மனைவியைக் காப்பாற்ற முயன்றிருக்கிறார். தீ வேகமாகப் பற்றிய நிலையில் சம்சுதீனால் முழுமையாகத் தீயை அணைக்க முடியவில்லை.

உயிரிழந்த கணவன், மனைவி
உயிரிழந்த கணவன், மனைவி

மாறாக மனைவியைக் காப்பாற்ற முயன்ற சம்சுதீன் மீதும் தீ வேகமாகப் பரவியது. செய்வதறியாமல் இருவரும் அலறித் துடித்திருக்கின்றனர். குழந்தைகளும் கதறி அழ, அலறல் சத்தம் கேட்டு விழித்த அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து இருவரையும் மீட்டு சிகிச்சைக்காகப் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு, இருவருக்கும் தீவிர சிகிச்சை அளித்துவந்த நிலையில் ரெஜினா பேகம் சிகிச்சை பலனின்றி இறந்தார். அடுத்த சில மணி நேரங்களில் சம்சுதீனும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இருவரது உடலும் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டிருக்கின்றன. இது குறித்து மழையூர் போலீஸார் வழக்கு பதிந்து விசாரித்துவருகின்றனர். மண்ணெண்ணெய் விளக்கு பற்றி கணவன், மனைவி உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தாய், தந்தை இருவரும் தீ விபத்தில் அடுத்தடுத்து உயிரிழந்த நிலையில் பெற்றோர்களின்றி அந்தக் குழந்தைகள் செய்வதறியாமல் தவித்துவருகின்றனர்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு