Published:Updated:

அதிகரிக்கும் எம்.டி.சி பேருந்து விபத்துகள்... காலாவதியான பேருந்துகள்தான் காரணமா..?

துரைராஜ் குணசேகரன்

இந்திய அளவில் காலாவதியான பேருந்துகளை இயக்குவதில் தமிழகம் இரண்டாம் இடத்தைப் பிடித்திருந்தது. அதிலும், சென்னையில் 56 சதவிகிதம் காலாவதியான பேருந்துகள் இயக்கப்படுவதாக, கடந்த வருடம் மத்திய போக்குவரத்துத்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது.

அரசுப் பேருந்து
அரசுப் பேருந்து

பரபரப்பாக இயங்கும் சாலைகள், எங்கு நோக்கினும் வாகன நெரிசல். இது, சிங்கார சென்னையின் தனி அடையாளம். சாலை விரிவாக்கம் தொடர்ந்து நடைபெற்றாலும் சென்னையில் ஏற்படும் விபத்துகள் நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டேதான் இருக்கிறது. உதாரணத்துக்கு, சென்னையில் 2017-ம் ஆண்டு 6,616 விபத்துகளும், 2018-ம் ஆண்டு 6,928 விபத்துகளும் நடந்ததாகப் பதிவாகியுள்ளன. 2017-ம் ஆண்டைவிட 2018-ம் ஆண்டு நடந்த விபத்து எண்ணிக்கை 4.72 விழுக்காடு உயர்ந்துள்ளது.

சென்னைப் போக்குவரத்து நெரிசல்
சென்னைப் போக்குவரத்து நெரிசல்

இந்திய அளவில் சாலை விபத்துகள் அதிகம் நடைபெறும் மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் முதலிடத்தில் இருக்கிறது.

நாளொன்றுக்குச் சென்னை பேருந்துகளில் சுமார் 36 லட்சம் மக்கள் பயணிக்கின்றனர். இங்கு சுமார் 3,400 அரசுப் பேருந்துகள் உள்ளன. இதில் 3,200 பேருந்துகள் மட்டும் உபயோகத்தில் இருக்கின்றன. இந்த நிலையில், 'பழுதடைந்த பழைய பேருந்துகளுக்குப் பதிலாகத் தற்போது 15 சதவிகித புதிய பேருந்துகள் கொண்டுவரப்பட்டுள்ளன' என்று அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.

மாநகரப் பேருந்து
மாநகரப் பேருந்து

கடந்த வருடம், மத்திய போக்குவரத்துத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையின் தகவல்கள்படி, இந்திய அளவில், காலாவதியான பேருந்துகளை இயக்குவதில் தமிழகம் இரண்டாமிடத்தில் உள்ளது. முதலிடத்தில் பீகார் மாநிலம் உள்ளது. தமிழகத்தைப் பொறுத்தமட்டில் மற்ற மாவட்டங்களைக் காட்டிலும், தலைநகர் சென்னையில்தான் 56 விழுக்காட்டுக்கும் அதிகமான காலாவதியான பேருந்துகள் இயக்கப்பட்டு வருவதாக அந்த அறிக்கையின் தகவல்கள் கூறுகின்றன.

ஒரு பேருந்தை 6 லட்சம் கிலோ மீட்டர் ஓட்டலாம் அல்லது ஏழு ஆண்டுகள் பயன்படுத்தலாம். அதற்கு மேல் பயன்படுத்தப்படும் பேருந்துகள் காலாவதியான பேருந்தாகிவிடுகிறது என்று அரசுத் தரப்பு ஆவணங்கள் கூறுகின்றன. ஆனால், இங்கு ஏழு ஆண்டுகளைக் கடந்தும் இயங்கும் பேருந்துகள்தான் அதிகம்.

மாநகரப் பேருந்து
மாநகரப் பேருந்து

சென்னையைப் பொறுத்தமட்டில், அதிகளவு சாலை விபத்துகளுக்குக் காரணமாக அரசுப் பேருந்துகள்தான் உள்ளதாகப் பதிவான வழக்குகளின் விவரங்கள் தெரிவிக்கின்றன.

2016-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டுவரை சென்னையில் MTC, TNSTC மற்றும் தனியார் பேருந்துகள் மூலம் நடந்த விபத்துகள் எண்ணிக்கையைப் பின்வரும் படத்தில் காணலாம்.

சென்னையில் பேருந்துகளால் ஏற்படும் சாலை விபத்துகள்
சென்னையில் பேருந்துகளால் ஏற்படும் சாலை விபத்துகள்

சென்னையில் 2016-ம் ஆண்டு பேருந்து விபத்துகள் மூலம் நிகழ்ந்த இறப்புகள் 140. இதில், MTC பேருந்துகளின் மூலம் மட்டும் 92 மரணங்கள் நிகழ்ந்துள்ளன. 2017-ம் ஆண்டு பேருந்து விபத்துகள் மூலம் நிகழ்ந்த இறப்புகள் 119. இதில், MTC பேருந்துகளின் மூலம் மட்டும் 17 மரணங்கள் நடந்துள்ளன. 2018-ம் ஆண்டு பேருந்து விபத்துகள் மூலம் நிகழ்ந்த இறப்புகள் 83. இதில், MTC பேருந்துகளின் மூலம் மட்டும் 59 மரணங்கள் நடந்துள்ளன. 2019-ம் ஆண்டு மே மாதம்வரை பேருந்து விபத்துகள் மூலம் நிகழ்ந்த இறப்புகள் 46. இதில், MTC பேருந்துகளின் மூலம் மட்டும் 26 மரணங்கள் நடந்துள்ளன.

தனியார் பேருந்துகளைவிட அரசுப் பேருந்துகள்மூலம் நடைபெறும் விபத்துகள் அதிகரித்துக்கொண்டு போவதற்கு முக்கியக் காரணம், சென்னை மாநகரப் பேருந்து ஓட்டுநர்கள் பெரிதாகச் சாலை விதிகளை மதிப்பது கிடையாது என்று சொல்லப்படுகிறது. ஷேர் ஆட்டோக்களைவிட, அவர்கள் மோசமாகப் பேருந்துகளை இயக்கி வருவதாகப் பொதுமக்கள் புலம்பிவருகின்றனர்.

போக்குவரத்துக் காவலர்
போக்குவரத்துக் காவலர்

வாகன நெரிசல் மிக அதிகமாகக் காணப்படும் நகரத்தின் முக்கியச் சாலைகளிலேயே அசுர வேகத்தில் அரசுப் பேருந்துகள் இயக்கப்படுவது என்பது ஜீரணிக்க முடியாதது. அதிலும் சமீபத்தில் பஸ் ரேஸ் கலாசாரம் தலைதூக்கியுள்ளது, சாலைகளில் பயணிக்கும் பொதுமக்களைப் பெரும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இவற்றையெல்லாம் தட்டிக்கேட்க வேண்டிய காவல்துறையும் சற்றும் கண்டுகொள்ளாதது பெரும் துயரமே.

காலாவதியான பேருந்துகளை இயக்குவதே பெரும் தவறு. அப்படி இயக்கும் ஓட்டுநர்கள்மீதும், அதைக் கண்டுகொள்ளாமல் இருக்கும் காவல்துறையினர்மீதும், இனியாவது இதுபோன்ற நிகழ்வுகள் நடக்காமல் இருக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.