Published:Updated:

கோழிக்கோடு: விபத்துக்கு காரணமான `டேபிள் டாப்’ ஓடுதளம்? - தீவிரமடையும் விசாரணை

கோழிக்கோடு விமானம் விபத்து
கோழிக்கோடு விமானம் விபத்து

ஓடுபாதையில் இருந்து சற்று தள்ளி இறங்கிய விமானம் அதிக தூரம் ஓடி பள்ளத்தில் விழுந்து நொறுங்கியிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் வளைகுடா நாடுகளிலும் வேறு பிற நாடுகளிலும் அதிகமாக வசித்து வருகின்றனர். இதனால் சிறிய கேரள மாநிலத்தில் சர்வதேச விமான நிலையங்கள் பிற மாநிலங்களைக் காட்டிலும் அதிகமாகக் காணப்படுகின்றன. கோழிக்கோடு கரிப்பூர் சர்வதேச விமான நிலையத்தில் நேற்று தரை இறங்க முயன்ற ஏர் எக்ஸ்பிரஸ் விமானம் விபத்துக்குள்ளான சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. விபத்தில் விமானம் இரண்டாக உடைந்ததில் இரண்டு விமானிகள் உட்பட 18 பேர் மரணமடைந்துள்ளனர். விமானத்தில் பயணித்த அத்தனை பயணிகளும் காயம் அடைந்துள்ளனர். அதில் பலர் படுகாயம் அடைந்துள்ளதால் மரண எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. இந்த நிலையில் ஓடுதளத்தில் உள்ள பிரச்னைகளால் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் இப்போது சர்ச்சை எழுந்துள்ளது.

விமானம் விபத்து
விமானம் விபத்து

2019 ஜூலை மாதம் டைரக்டர் ஜெனரல் ஆப் சிவில் ஏவியேசன் (DGCA) இந்தியாவில் உள்ள அனைத்து விமான நிலையங்களையும் தணிக்கை செய்தது. அதில் கோழிக்கோடு கரிப்பூர் விமான நிலையமும் தணிக்கை செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து விமான நிலைய ஓடுபாதையில் அதிகப்படியான ரப்பர் டெப்பாசிட் ஆகியுள்ளதாகவும். இதனால் மழைக்காலத்தில் இரவில் விமானம் தரை இறங்கும்போது பாதுகாப்பற்ற நிலையை ஏற்படுத்தும் எனவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ஏர்போர்ட் அத்தாரிட்டிக்கு டைரக்டர் ஜெனரல் ஆப் சிவில் ஏவியேசன் ஷோக்காஸ் நோட்டீஸ் வழங்கியிருக்கிறது.

விமானம் தரை இறங்கும்போது ஓடுபாதையில் டயர் உரசுவதால் படிந்திருந்த ரப்பர், பின்னர் அகற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது. அதிலும் விபத்துக்குள்ளான விமானம் ஒதுக்கப்பட்ட ஓடுபாதையில் அல்லாமல் மற்றொரு ஓடுபாதையில் தரை இறங்கியுள்ளது. அதிலும் ஓடுபாதையின் தொடக்கத்தில் இறங்காமல் சற்று தள்ளி இறங்கியுள்ளது. அதனால் ரப்பர் படிமத்தால் பிரச்னை ஏற்பட வாய்ப்பு இல்லை என கூறப்படுகிறது.

கோழிக்கோடு விமான நிலையத்தின் ஓடுபாதை நீளம் குறைவாக உள்ளதாக ஏற்கெனவே புகார் இருந்துவந்தது. எனவே, ஓடுபாதையில் இருந்து சற்று தள்ளி இறங்கிய விமானம் அதிக தூரம் ஓடி பள்ளத்தில் விழுந்து நொறுங்கியிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

விபத்துக்குள்ளான விமானம்
விபத்துக்குள்ளான விமானம்

விமானம் தரை இறங்குவதற்கு முன்பு கூடுதல் நேரம் வானில் வட்டமிட்டதாகக் கூறப்படுகிறது. விமானத்தை தரை இறக்குவதில் பிரச்னை இருந்திருந்தால் பைலட் அதுபற்றி விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்திருப்பார். ஆனால், அதுபோன்ற தகவல் இல்லை என்றும் கூறப்படுகிறது. எனவே, விமானம் தரை இறங்கியபோது பிரச்னை இருந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

இதனிடையே கோழிக்கோடு விமான நிலையம், டேபிள் டாப் விமான நிலையம் என்று அழைக்கப்படுகிறது. அதாவது, டேபிள் டாப் விமான நிலையத்தின் ரன்வே, மலை மீதோ, உயரமான பகுதி மீதோ இருக்கும். ரன்வே தாண்டி சென்றால் பள்ளம் இருக்கும். இதைப் போன்ற விமான நிலையங்களில் விமானங்களைத் தரையிறக்குவது சவாலான காரியம். கூடுதல் பயிற்சிகள் தேவை.

இதனிடையே ரன்வேயில் பிரச்னை இல்லை என அதிகாரிகள் மறுத்திருக்கிறார்கள். கடந்த மே மாதத்துக்குப் பின்னர் பல விமானங்கள் இங்கு தரையிறங்கி உள்ளன. அப்போது எல்லாம் எந்தச் சிக்கலும் இருந்ததில்லை என்கின்றனர். இதனிடையே மழை காரணமாக விமானம் ரன்வேயில் சற்று தள்ளி லேண்ட் ஆகி இருக்கலாம். நீளம் குறைவு காரணமாக வழுக்கி பள்ளத்தில் விழுந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இதுவே சாதாரண விமான நிலையமாக இருந்திருந்தால் பள்ளத்தில் விழுந்து இரண்டாக உடைவது தவிர்க்கப்பட்டிருக்கலாம் என்கிறார்கள் சிலர்.

கேரளா விபத்து
கேரளா விபத்து

இந்த நிலையில் விமானத்தின் அனைத்து பதிவுகளும் அடங்கிய கறுப்புப் பெட்டியைக் கைப்பற்றி ஆய்வு செய்யும் படலத்தில் அதிகாரிகள் இறங்கியுள்ளனர். கறுப்பு பெட்டியை ஆய்வு செய்தால் விபத்துக்கான முழு காரணமும் தெரியவரும் என்கிறார்கள் அதிகாரிகள்.

அடுத்த கட்டுரைக்கு