Published:Updated:

ஜப்பான்: 43 மாலுமிகள், 5,800 பசுக்களுடன் நடுக்கடலில் மாயமான சரக்குக் கப்பல்!

கப்பல் விபத்தில் இருந்து மீட்கப்பட்ட நபர்
கப்பல் விபத்தில் இருந்து மீட்கப்பட்ட நபர் ( AP )

நியூசிலாந்திலிருந்து 43 மாலுமிகள் மற்றும் 5,800 பசுக்களுடன் சீனா சென்ற ஒரு கப்பல் சூறாவளியில் சிக்கி மாயமாகியுள்ளது. இந்தக் கப்பலைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

நியூசிலாந்தின் நேப்பியர் துறைமுகத்திலிருந்து சீனாவின் டாங்ஷான் துறைமுகத்தை நோக்கி `கஃல்ப் லைவ்ஸ்டாக் 1' என்ற சரக்குக் கப்பல் கடந்த ஆகஸ்ட் 17-ம் தேதி புறப்பட்டது. அந்த சரக்குக் கப்பலில் பிலிப்பைன்ஸைச் சேர்ந்த 39 பேர், நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த தலா இருவர் என 43 மாலுமிகள் இருந்தனர். 438 அடி நீளம் கொண்ட அந்த சரக்குக் கப்பலில் 5,800 பசுக்கள் ஏற்றப்பட்டிருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சரக்குக் கப்பல்
சரக்குக் கப்பல்
AP

நியூசிலாந்திலிருந்து 17 நாள்கள் பயணத்தில் சீனாவின் டாங்ஷானிலுள்ள ஜிங்டாங் துறைமுகத்தைச் சென்றடைவதாக அதன் பயணத் திட்டம் வகுக்கப்பட்டிருந்தது. ஆனால், ஜப்பான் கடல் எல்லைக்குட்பட்ட அமாமி ஓஷிமா தீவுப் (Amami Oshima island) பகுதியில் பயணித்தபோது மேசக் சூறாவளியில் (Typhoon Maysak) சிக்கி மாயமானது. அவசர உதவி கேட்டு அந்தச் சரக்குக் கப்பல் கடைசியாக அமாமி ஓஷிமா தீவு அருகிலுள்ள ஒகினாவா (Okinawa) மற்றும் க்யூஷூ (Kyushu) பகுதிகளுக்கு இடைப் பகுதியில் இருந்தபோது சிக்னல் அனுப்பியதாக அந்நாட்டுக் கடற்படை அதிகாரிகள் கூறுகிறார்கள்.

அதன் பிறகு அந்தக் கப்பல் மாயமாகியிருக்கிறது. அது, சூறாவளியில் சிக்கி மூழ்கியிருக்கலாம் என்று கருதப்படுகிறது. இதையடுத்து ஜப்பானியக் கடற்படை, தேடுதல் பணியைத் தொடங்கியது. ஜப்பானின் அமாமி ஓஷிமா தீவுக்கு அருகே நடத்திய தேடுதல் பணியின்போது, கடலில் மிதந்துவந்த ஒருவரை ஜப்பான் கடற்படை வீரர்கள் மீட்டு, மருத்துவமனையில் அனுமதித்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், அமாமி ஓஷிமா தீவருகே இறந்த நிலையில் பசுவின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மீட்கப்பட்ட நபர்.
மீட்கப்பட்ட நபர்.
AP

மீட்கப்பட்ட நபர் பிலிப்பைன்ஸ் குழுவைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்திருக்கிறது. கடல் சீற்றத்தில் சிக்கி கப்பல் கவிழ்வதற்கு முன்பே, கப்பலின் இயந்திரம் செயலிழந்துவிட்டதாக அவர் கூறியிருக்கிறார். இந்நிலையில், ஜப்பானியக் கடலோர காவல்படை, நீரில் மூழ்கி மயக்க நிலையிலிருந்த மற்றொரு நபரை மீட்டிருக்கிறது. மீட்கப்பட்ட சிறிது நேரத்தில் அவர் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.

பலத்த காற்று மற்றும் கடும் மழையால் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் தாமதமாவதாக ஜப்பான் கவலை தெரிவித்திருக்கிறது. அதேபோல், ஜப்பானை மற்றொரு சக்திவாய்ந்த புயல் தாக்கவிருப்பதால், தேடுதல் பணியை வரும் ஞாயிற்றுக்கிழமை வரை தொடரத் திட்டமிட்டுள்ளது. புயல் கடந்த பின்னர் மீண்டும் தேடுதல் பணியை மேற்கொள்ள இருப்பதாகவும் ஜப்பான் கடற்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஜப்பான்: `உடல்நலக் குறைவு; நீண்டகால பிரதமர்!'- இரண்டாவது முறையாக ராஜினாமா அறிவித்த ஷின்சோ அபே

காணாமல் போனவர்கள் பற்றிய தகவல்கள் குறிப்பிட்ட நாடுகளின் தூதரகங்கள் உதவியோடு அடையாளம் காணப்பட்டு, அவர்களின் குடும்பத்தினருக்குத் தெரியப்படுத்தப்பட்டிருப்பதாகவும் ஜப்பான் தெரிவித்திருக்கிறது. விமானப்படை மற்றும் கப்பல்படை உதவியோடு மாயமான 41 பேரைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்றுவருகிறது.

அடுத்த கட்டுரைக்கு