Election bannerElection banner
Published:Updated:

நீலகிரி: ஆபத்துகள் நிறைந்த கல்லட்டி மலைப்பாதை! -மீண்டும் திறக்கப்பட்ட முதல் நாளிலேயே விபத்து

கல்லட்டி மலைப்பாதை
கல்லட்டி மலைப்பாதை

`இந்தச் சாலையை நன்கு அறிந்த உள்ளூர் மக்களே இதில் பயணிக்கும்போது திணற வேண்டியிருக்கிறது. வெளியூர்களிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் ஆபத்தை உணராமல், இந்த மலைப்பாதையைப் பயன்படுத்தி, விபத்தில் சிக்கி உயிரிழக்கின்றனர்.’

நீலகிரி மாவட்டம், ஊட்டி தலைகுந்தாவிலிருந்து மசினகுடி வரை கல்லட்டி மலைச்சரிவில், கொண்டை ஊசி வளைவுகளுடன் வளைந்து நெளிந்து செல்கிறது கல்லட்டி மலைப்பாதை.

கல்லட்டி மலைப்பாதை
கல்லட்டி மலைப்பாதை

ஊட்டியிலிருந்து மசினகுடி, முதுமலை மற்றும் மைசூர் செல்லும் பயணிகள் இந்தக் கல்லட்டி மலைப்பாதையைப் பயன்படுத்திவந்தனர். ஆபத்தான சரிவில் 36 குறுகிய கொண்டை ஊசி வளைவுகளுடன் அமைக்கப்பட்டிருக்கும் இந்தச் சாலை, தமிழ்நாட்டில் அதிகம் வாகன விபத்துகள் ஏற்படும் சாலைகளில் ஒன்றாக இருக்கிறது. உயிரிழப்புகளும் தொடர்ந்துகொண்டேயிருக்கின்றன.

இந்தநிலையில்,கடந்த 2018-ம் ஆண்டு, அக்டோபர் மாதம் பள்ளத்தில் பாய்ந்த சுற்றுலா வாகனத்தில் சிக்கி, சென்னையைச் சேர்ந்த ஐந்து பேர் உயிரிழந்தனர். எனினும், விபத்து நடந்து மூன்று நாள்களுக்குப் பின்னரே தகவல் தெரியவந்தது. உயிரிழந்த ஐந்து பேருடன் மூன்று நாள்கள்களாக அவதிப்பட்டுவந்த இருவரை உயிருடன் மீட்டனர்.

கல்லட்டி மலைப்பாதை
கல்லட்டி மலைப்பாதை

இந்தக் கோர விபத்தைத் தொடர்ந்து இந்தச் சாலையில் பயணிக்க பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. வெளியூர் வாகனங்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. உள்ளூர் வாகனங்கள் மட்டும் சென்று வர அனுமதிக்கப்பட்டுவந்தது.

இந்த நடவடிக்கையால் கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்தக் கல்லட்டி மலைப்பாதையில் விபத்துகள் ஏற்படுவது முற்றிலும் குறைந்தது. இந்தநிலையில், மீண்டும் இந்தச் சாலையில் வெளியூர், வெளி மாநில வாகனங்கள் செல்ல அனுமதிக்க வேண்டும் என உள்ளூர் அமைப்புகள் கோரிக்கை விடுத்துவந்தன.

கல்லட்டி மலைப்பாதை
கல்லட்டி மலைப்பாதை

இவர்களின் கோரிக்கையைப் பரிசீலித்த மாவட்ட நிர்வாகம், சாலையை அனைவரின் பயன்பாட்டுக்கும் கொண்டுவர முடிவு செய்தது. இரண்டு ஆண்டுகள் கழித்து முதன்முறையாக நேற்று, இந்தச் சாலையில் அனைத்து வாகனங்களும் செல்ல அனுமதி வழங்கப்பட்டது. போக்குவரத்து தொடங்கிய முதல் நாளான நேற்றே இந்தச் சாலையில் வாகன விபத்து ஏற்பட்டது.

கல்லட்டி மலைப்பாதை விவகாரம் குறித்து நம்மிடம் பேசிய உதகை நகர மக்கள் விழிப்புணர்வு சங்கத்தின் தலைவர் ஜனார்த்தனன், ``இந்தச் சாலையை நன்கு அறிந்த உள்ளூர் மக்களே இதில் பயணிக்கும்போது திணற வேண்டியிருக்கிறது. வெளியூர்களிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் ஆபத்தை உணராமல், இந்த மலைப்பாதையைப் பயன்படுத்தி, விபத்தில் சிக்கி உயிரிழக்கின்றனர். இரண்டு ஆண்டுகளாக விபத்து இல்லாமல் இருந்தது. தற்போது மீண்டும் இந்தச் சாலை திறக்கப்பட்டிருக்கிறது. முதல் நாளே கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளின் கார் 35-வது கொண்டை ஊசி வளைவில் பாறையில் மோதி விபத்துக்குள்ளானது. நல்லவேளையாக நான்கு பேரும் உயிர் பிழைத்துக்கொண்டனர். பயணிகளின் உயிரைக் காக்கும் வகையில் இந்தச் சாலையில் அவர்களை அனுமதிக்காமல், கூடலூர் சாலையைப் பரிந்துரைக்க வேண்டும்’’ என்றார்.

கல்லட்டி மலைப்பாதை
கல்லட்டி மலைப்பாதை

இது குறித்து காவல்துறையினர் தரப்பில், ``அனைத்து வாகனங்களையும் 2-வது கியரில்தான் இயக்க வேண்டும். 20 கி.மீ வேகத்துக்கு மேல் செல்லக் கூடாது போன்ற அறிவுரைகளை சோதனைச்சாவடியில் சொல்லியே அனுமதிக்கிறோம்" என்றனர்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு