Published:Updated:

காஞ்சிபுரம் கல்குவாரி விபத்து: ஒருவர் பலி; சிகிச்சையில் மூவர்!-பாறைச் சரிவில் பலர் சிக்கித் தவிப்பு?

கல்குவாரி விபத்து
கல்குவாரி விபத்து

காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள கல்குவாரியில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். மண் சரிவில் சிக்கியிருப்பவர்களை மீட்கும் பணிகள் நடைபெற்றுவருகின்றன.

காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் அருகே மதூரில் ஒரு கல்குவாரி செயல்பட்டுவருகிறது. இந்த குவாரியில் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் பணிபுரிகிறார்கள். இன்று காலை வழக்கம்போல குவாரிக்கு வேலைக்கு வந்த பணியாளர்கள், வேலைகளைப் பார்க்கத் தொடங்கினர். அப்போது, எதிர்பாராதவிதமாக, குவாரியில் கற்கள் சரிந்து விழத் தொடங்கின.

காஞ்சிபுரம் கல்குவாரி விபத்து
காஞ்சிபுரம் கல்குவாரி விபத்து

கற்கள் விழுவதைப் பார்த்த தொழிலாளர்கள், அந்த இடத்தைவிட்டு நகர்ந்ததாகக் கூறப்படுகிறது. இருந்தபோதிலும், விபத்தில் இருபதுக்கும் மேற்பட்டவர்கள் சிக்கியிருக்கக்கூடும் என்று சந்தேகிக்கப்படுகிறது. இந்த விபத்தில் ஐந்து டாரஸ் லாரிகள், ஒரு பொக்லைன் இயந்திரம் ஆகியவை சிக்கியுள்ளன. இதுவரை ஒருவர் சடலமாக மீட்கப்பட்டிருக்கிறார். மேலும் பலர் சிக்கியிருக்கலாம் என்பதால், இறப்பு எண்ணிக்கை அதிகரிக்கக் கூடுமோ என்ற அச்சம் நிலவுகிறது. சுமார் 20-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பாறைச் சரிவில் சிக்கியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

பெரும் பாறைகள் சரிந்து விழுந்திருப்பதால் அவற்றை அகற்றுவதில் சிக்கல் நீடிக்கிறது. அருகிலுள்ள கல்குவாரிகளிலுள்ள இயந்திரங்களைக் கொண்டுவந்து பாறைகளை அகற்றும் பணியில் தீயணைப்புத்துறையினர் ஈடுபட்டுவருகிறார்கள். விபத்து நடைபெற்ற இடம் மிகவும் குறுகிய பாதை என்பதால் மீட்புப்பணியில் சிரமம் ஏற்பட்டிருக்கிறது.

காஞ்சிபுரம் கல்குவாரி விபத்து
காஞ்சிபுரம் கல்குவாரி விபத்து

மிகவும் ஆழத்தில் குவாரி அமைந்திருப்பதால் மீட்பு வாகனங்கள் அங்கு செல்வதிலும் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி, காவல்துறை உயரதிகாரிகள் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகளும் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டுவருகிறார்கள்.

தீயணைப்புத்துறை வாகனங்களும், ஆம்புலன்ஸ்களும் சம்பவ இடத்தில் முகாமிட்டிருக்கின்றன. பாதுகாப்புப் பணிகளுக்காக நூற்றுக்கணக்கான காவலர்களும் அங்கு குவிக்கப்பட்டிருக்கிறார்கள்.

குவாரி
குவாரி

இந்த குவாரியில் தமிழகத்திலிருந்து மட்டுமல்லாமல் மற்ற மாநிலத் தொழிலாளர்கள் பலரும் பணியாற்றிவருகின்றனர். தொழிலாளர்களுக்கு அடிப்படை பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படவில்லை என்றும், அனுபவம் இல்லாத நபர்களைக்கொண்டு வெடிவைக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. இதனால்தான் குவாரிகளில் அடிக்கடி விபத்து நடைபெறுவது தொடர் சம்பவமாக இருக்கிறது என்றும் அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

அடுத்த கட்டுரைக்கு