Published:Updated:

கும்மிருட்டு; தலைக்கேறிய போதை! - புறா பிடிக்கச் சென்ற இளைஞருக்கு நேர்ந்த கதி!

தலைக்கேறிய மதுபோதையில் இரவு நேரத்தில், புறா பிடிக்கச் சென்ற இளைஞர் ஒருவர், 100 அடி கிணற்றில் விழுந்து உயிரிழந்த சம்பவம், கரூர் மாவட்டத்தில் நடந்திருக்கிறது.

வேல்முருகன்
வேல்முருகன்
Vikatan

சேலம் மாவட்டம், ஓமலூர் பகுதியைச் சேர்ந்தவர், வேல்முருகன் (வயது 23). இவர், கரூர் மாவட்டம், தான்தோன்றிமலை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட காளியப்பனூர் பகுதியில் தங்கி கொத்தனார் வேலை செய்து வந்திருக்கிறார். அதோடு, இவருக்கு புறா, நாய், பூனை பறவைகள் மற்றும் பிராணிகள் வளர்ப்பில் ஈடுபாடு அதிகமாம். அதை விற்பனை செய்து வந்திருக்கிறார். இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இவரின் சித்தி மகன் ராஜாவும் (வயது 23), சொந்த மாவட்டத்தில் வேலை இல்லாமல் அல்லாடி இருக்கிறார். எனவே, அவரும் கிளம்பி கரூர் மாவட்டத்துக்கு வந்து, வேல்முருகனோடு தங்கி, அவரோடு சேர்ந்து கொத்தனார் வேலைக்குச் சென்று வந்திருக்கிறார். இந்த சூழலில்தான், நேற்று முன்தினம் இரவு இருவரும் அமர்ந்து மது அருந்தியுள்ளனர்.

வேல்முருகன் உடல்
வேல்முருகன் உடல்

அப்போது, தன் சித்தி மகன் ராஜாவிடம், 'இந்தப் பகுதியில் நிறைய புறாக்கள் இருக்கு. அதைப் பிடிச்சு வளர்த்து வித்தா, ஆயிரம் ஆயிரமா சம்பாதிக்கலாம்' என்று சொல்லியிருக்கிறார். 'சரி' என்று ராஜா சொல்ல, இருவரும் சேர்ந்து புறா பிடிப்பதற்காகச் சென்றுள்ளனர். அப்பகுதியில் உள்ள ஒரு விவசாய கிணற்றில், புறா நிறைய இருப்பதாக ராஜாவிடம் தெரிவித்த வேல்முருகன், 'கிணற்றுக்குள் இருக்கும் புறாக்களை புடிச்சுட்டு வர்றேன்' என்று கயிறு கட்டி கீழே இறங்கி உள்ளார் வேல்முருகன். அதைப்பார்த்து பதறிய ராஜா, 'இந்தக் கும்மிருட்டில் கிணற்றுக்குள் இறங்குவது நல்லதா படலை. கிணறு எவ்வளவு ஆழம்னு வேற தெரியலை.

இது தேவையில்லாத ரிஸ்க்கு. புறாக்களும் நீ சொல்றாப்புல உள்ளே இருக்குற மாதிரி தெரியலை. தலைக்கேறுற அளவுக்கு மது வேற குடிச்சுருக்க. அதனால், கீழே இறங்க வேண்டாம். எதுவா இருந்தாலும், பகல்ல வந்து பார்த்துக்குவோம்' என்று சொல்லி இருக்கிறார். ஆனால், ராஜா சொல்வதைக் காதில் வாங்காத வேல்முருகன், 'நான் 10 புறாவாச்சும் பிடிக்காம மேல வரமாட்டேன்' என்று சூளுரைத்தப்படி கிணற்றுக்குள் இறங்கி இருக்கிறார். ராஜா பதற்றத்துடனேயே கிணற்றின் மேல் இருந்து கவனித்து வந்திருக்கிறார். இதனிடையே, கிணற்றுக்குள் இறங்கிய வேல்முருகன், மண் சரிந்து, 100 அடி ஆழமுள்ள அந்தக் கிணற்றுக்குள் விழுந்திருக்கிறார்.

கிணறு
கிணறு

சத்தம் கேட்டு பதறிய ராஜா, டார்ச் லைட்டை அடித்து பார்த்திருக்கிறார். உருவம் எதுவும் தெரியவில்லை. அதனால், காவல்நிலையத்துக்கு தகவல் கொடுத்திருக்கிறார். அவர்கள் வந்து பார்த்தபோது, 100 அடி கிணற்றுக்குள் விழுந்த வேல்முருகன், பாறையில் மோதி அந்த இடத்திலேயே இறந்ததை உறுதிசெய்தனர். இச்சம்பவம் குறித்து, ராஜா அளித்த தகவலின்பேரில் தான்தோன்றிமலை காவல் நிலைய போலீஸார், உயிரிழந்த வேல்முருகனை மீட்டு, உடற்கூறு ஆய்வுக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.