Published:Updated:

கரூர்: `நடுரோட்டுல யாருடா வீடு கட்டினது?' - தனியார் ஆம்புலன்ஸ் டிரைவரின் `போதை' விபரீதம்

வீட்டுக்குள் புகுந்த ஆம்புலன்ஸ்
வீட்டுக்குள் புகுந்த ஆம்புலன்ஸ் ( நா.ராஜமுருகன் )

ஆம்புலன்ஸூக்குள் இருந்த ஹரிஷோ, 'யாருடா இப்படி நடுரோட்டுல வீட்டைக் கட்டி வச்சது. நாங்க எப்படி ஆம்புலன்ஸை ஓட்டுறது?' என்று போதையில் உளறியிருக்கிறார்.

தனியார் ஆம்புலன்ஸ் டிரைவரும் உதவி டிரைவரும் தலைக்கேறிய போதையில், சாலையின் ஓரத்தில் இருந்த குடிசை வீட்டுக்குள் நிலைதடுமாறிபோய் ஆம்புலன்ஸ் வண்டியை விட்டு மோதிய சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

வீட்டுக்குள் புகுந்த ஆம்புலன்ஸ்
வீட்டுக்குள் புகுந்த ஆம்புலன்ஸ்
நா.ராஜமுருகன்

கரூர் மாவட்டம், புலியூரைச் சேர்ந்தவர், முரளி. இவர் ஆம்னி ஆம்புலன்ஸ் வண்டி ஒன்று வைத்துள்ளார். அந்த வாகனத்தில், டிரைவராக அதே பகுதியைச் சேர்ந்த ஹரிஷ் என்பவரும், அவருக்கு உதவி டிரைவராக ராகவன் என்பவரும் பணிபுரிந்து வருகின்றனர்.

கரூர்: கல்குவாரியில் தேங்கிய மழைநீர்! - குளிக்கச் சென்ற சிறுமிகள் உயிரிழந்த துயரம்

இந்தநிலையில், ஹரிஷூம் ராகவனும் தலைக்கேறும் அளவுக்கு மது அருந்திவிட்டு, ஆம்புலன்ஸ் வாகனத்தை எடுத்துள்ளனர். ஆம்புலன்ஸை முழுவேகத்தோடு இயக்கி, கரூர் டு திருச்சி சாலையில் தாறுமாறாக ஓட்டியபடி சென்றுள்ளனர். இதைக் கண்ட பொதுமக்கள் அலறி ஓடினர். `நோயாளிகளை வைத்துக்கொண்டு இப்படி ஓட்டுகிறார்களே?' என்று மக்கள் பேசிக்கொண்டனர்.

வீட்டுக்குள் புகுந்த ஆம்புலன்ஸ்
வீட்டுக்குள் புகுந்த ஆம்புலன்ஸ்
நா.ராஜமுருகன்

இப்படி, கட்டுப்பாடு இல்லாமல் தாறுமாறாக ஹரிஷ் ஓட்டிப்போன ஆம்புலன்ஸ், பி.வெள்ளாளப்பட்டி அருகில் சென்றது. அப்போது நிலைதடுமாறிய ஹரிஷ், ஆம்புலன்ஸ் வாகனத்தை சாலையின் ஓரமாக இருந்த ஒரு குடிசை வீட்டுக்குள் விட்டுவிட்டார். அந்தக் கூரை வீட்டை உடைத்துக்கொண்டு சென்ற ஆம்புலன்ஸ் அங்கு அடுக்கி வைக்கப்பட்டிருந்த கம்புகள் மேல் சென்று, அந்தரத்தில் நின்றது.

ஆம்புலன்ஸூக்குள் இருந்த ஹரிஷோ, 'யாருடா இப்படி நடுரோட்டுல வீட்டைக் கட்டி வச்சது. நாங்க எப்படி ஆம்புலன்ஸை ஓட்டுறது?' என்று போதையில் உளறியிருக்கிறார். ஹரிஷ் ஓட்டிவந்த ஆம்புலன்ஸ் மோதிய வீட்டில் வசித்தவர்கள் யாரும் அப்போது வீட்டுக்குள் இல்லை. அதனால், அந்த வீட்டில் வசித்து வந்த அவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். அதற்குள், அங்கு திரண்ட பொதுமக்கள் ஆம்புலன்ஸை நெருங்கி, தகாத வார்த்தைகளால் திட்டிய ஹரிஷையும் ராகவனையும் வெளியில் இழுத்துப் போட்டனர். அதோடு, பசுபதிபாளையம் காவல் நிலையத்துக்குத் தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த பசுபதிபாளையம் காவல்நிலைய போலீஸார், அந்த ஆம்புலன்ஸை கைப்பற்றினர்.

வீட்டுக்குள் புகுந்த ஆம்புலன்ஸ்
வீட்டுக்குள் புகுந்த ஆம்புலன்ஸ்
நா.ராஜமுருகன்

அதோடு, ஹரிஷ், ராகவன் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து, அவர்களைக் கைது செய்து, சிறையில் அடைத்தனர். தலைமறைவாக இருக்கும் அந்தத் தனியார் ஆம்புலன்ஸின் உரிமையாளரான முரளியை, பசுபதிபாளையம் காவல் நிலைய போலீஸார் தேடி வருகின்றனர். 'ஆம்புலன்ஸ் டிரைவர்கள் இப்படி இருந்தா என்ன பண்றது? நோயாளிகளை ஏத்திக்கிட்டு போகும்போதும் இப்படி போதையோடு வாகனத்தை இயக்கினால், அதில் செல்லும் நோயாளிகளின் நிலை என்னவாகும்? இதை அரசு உடனே கவனிக்கணும்' என்று பொதுமக்கள் கோரிக்கை வைக்கிறார்கள். சாலை ஓரமாக இருந்த குடிசை வீட்டுக்குள், தலைக்கேறிய போதையுடன் இளைஞர் ஒருவர் ஓட்டி வந்த ஆம்புலன்ஸ் புகுந்த சம்பவம், அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு