Published:Updated:

கரூர் செப்டிக் டேங்க் விபத்து: மேலும் ஒரு தொழிலாளியின் உடல் மீட்பு! - அதிரவைக்கும் சம்பவம்

செப்டிக் டேங்க்

கரூரில் வீட்டருகே கட்டப்பட்ட செப்டிக் டேங்க்கில் விஷவாயு தாக்கி ஏற்கெனவே மூன்று தொழிலாளர்கள் பலியான நிலையில், நான்காவதாக மேலும் ஒரு தொழிலாளியின் உடல் மீட்கப்பட்டிருப்பது, அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

கரூர் செப்டிக் டேங்க் விபத்து: மேலும் ஒரு தொழிலாளியின் உடல் மீட்பு! - அதிரவைக்கும் சம்பவம்

கரூரில் வீட்டருகே கட்டப்பட்ட செப்டிக் டேங்க்கில் விஷவாயு தாக்கி ஏற்கெனவே மூன்று தொழிலாளர்கள் பலியான நிலையில், நான்காவதாக மேலும் ஒரு தொழிலாளியின் உடல் மீட்கப்பட்டிருப்பது, அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Published:Updated:
செப்டிக் டேங்க்

கரூர் செல்லாண்டிபாளையம் அருகேயுள்ள சுக்காலியூர் காந்திநகர் கரட்டுபாளையம் பகுதியில் குணசேகரன் என்பவர், சொந்தமாகப் புது வீடு கட்டிவருகிறார். இந்த நிலையில், அந்தப் புதுவீட்டுக்கு பக்கவாட்டில் கட்டப்பட்ட புதிய கழிவறைத் தொட்டியில், கான்கிரீட் தளத்துக்குக் கொடுக்கப்பட்ட பலகைகளை அகற்றுவதற்கு உள்ளே இறங்கியுள்ளனர். தொட்டியை இரண்டு மாதங்களாக மூடிவைத்திருந்ததால், விஷவாயு உள்ளே இருந்தது தெரியாமல் உள்ளே சென்ற, தான்தோன்றிமலையைச் சேர்ந்த மோகன்ராஜ் (23), தோரணக்கல்பட்டியை சேர்ந்த சிவா என்கிற ராஜேஸ் (38), கிருஷ்ணராயபுரம் அருகேயுள்ள சின்னமலைபட்டியைச் சேர்ந்த சிவகுமார் (38) ஆகியோர் சடலமாக மீட்கப்பட்டனர்.

சம்பவ இடம்
சம்பவ இடம்

இதற்கிடையே, உயிரிழந்த சின்னமலைப்பட்டி சிவகுமாரின் உறவினரான கோபால் என்பவரைக் காணவில்லை என அவரின் மனைவி அளித்த புகாரின் அடிப்படையில், சிவக்குமாருடன் பணிக்கு வந்ததாகச் கூறப்படும் கோபால், அதே தொட்டியில் உயிரிழந்திருக்கக்கூடும் என போலீஸார் சந்தேகமடைந்தனர்.

இதற்கிடையில், கோபாலின் சகோதரர் சரவணன் என்பவர் இந்தக் கட்டடத்தில் வந்து பார்த்தபோது, தன் சகோதரர் கோபாலின் செருப்புகள் இருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்து, அந்தத் தகவலை காவல்துறையில் தெரிவித்ததாகச் சொல்லப்படுகிறது. இதனால், அந்த செப்டிக் டேங்க்கில் சோதனை செய்து பார்த்ததில், சின்னமலைப்பட்டி ரங்கன் மகன் கோபால் (36) என்ற இளைஞரின் உடலை அழுகிய நிலையில் கரூர் தீயணைப்புப்படை அலுவலர் திருமுருகன் தலைமையிலான தீயணைப்பு மீட்புப் படையினர் மீட்டு, கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பிவைத்துள்ளனர்.

கோபால்
கோபால்

சம்பவ இடத்தில் கரூர் வருவாய் கோட்டாட்சியர் ரூபினா, கரூர் நகர காவல் கண்காணிப்பாளர் தேவராஜ் ஆகியோர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். அதோடு, அந்தக் கழிவுநீர் தொட்டிக்குள் இருந்த தண்ணீரை மோட்டார் வைத்து பைப் மூலம் இறைத்து வெளியேற்றிவருகின்றனர். ஏற்கெனவே, இரண்டு நாள்களுக்கு முன்பு மூவரின் சடலம் மீட்கப்பட்ட இடத்தில் மேலும் ஓர் இளைஞரின் சடலம் அழுகிய நிலையில் மீட்கப்பட்ட சம்பவம், அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.