கரூர்: செல்போன் வெடித்து மாணவர் பலி... அதிர்ச்சியில் தந்தையும் இறந்த சோகம்!

செல்போன் பலத்த சத்தத்தோடு வெடித்திருக்கிறது. இதில் படுகாயமடைந்த பாலாஜி, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துபோயிருக்கிறார்.
சார்ஜரில் போட்டபடி செல்போனைப் பயன்படுத்திய மாணவர் ஒருவர், செல்போன் வெடித்து பரிதாபமாக பலியானார். அதைப் பார்த்த அவரது தந்தையும் அதிர்ச்சியில் ஹார்ட் அட்டாக் வந்து இறந்த சம்பவம், உறவினர்களை அதிரவைத்திருக்கிறது.

கரூர் மாவட்டம், சின்னதாராபுரத்தைச் சேர்ந்தவர் பாலாஜி. பன்னிரண்டாம் வகுப்பு படித்துவந்தார். இவர், வீட்டிலுள்ள மின்சாதனப் பொருள்களைப் பழுது பார்ப்பதில் ஆர்வமாக இருப்பார் என்று கூறப்படுகிறது. தன் கையில் கிடைக்கும் மின்சாதனப் பொருள்களை ஓய்வு நேரங்களில் கழற்றி ஆராய்வார் என்றும் சொல்லப்படுகிறது.
இந்தநிலையில், அவர் தனது வீட்டில் செல்போனை சார்ஜரில் போட்டுவிட்டு, அதைப் பயன்படுத்தியதாக சொல்கிறார்கள். இதனால், சூடான செல்போன் பலத்த சத்தத்தோடு வெடித்திருக்கிறது. இதில் படுகாயமடைந்த பாலாஜி, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துபோயிருக்கிறார். இதனால், அதிர்ச்சியடைந்த அவரது தந்தை செல்லமுத்து (40) என்பவர், நெஞ்சுவலி (ஹார்ட் அட்டாக்) காரணமாக உயிரிழந்தார்.

இதைக் கண்டு பதறிய அவர்களின் உறவினர்கள், இருவரையும் கொண்டு வந்து கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்கள். அவர்களைப் பரிசோதித்த மருத்துவர்கள், இருவரும் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். அதைக் கேட்டு, உறவினர்கள் அதிர்ந்துபோனார்கள். இருவரது உடல்களும் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உடற்கூறாய்வுக்காக வைக்கப்பட்டிருக்கிறது. காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து, விபத்து எப்படி ஏற்பட்டது என்று விசாரித்துவருகின்றனர்.