Published:Updated:

மூணாறு நிலச்சரிவு: `கயத்தாரைச் சேர்ந்த 55 பேரின் நிலை?’ - கலங்கும் உறவினர்கள்

மீட்புப்பணி
மீட்புப்பணி

கேரள மாநிலம் மூணாறு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கியவர்களில் தூத்துக்குடியைச் சேர்ந்த 55 பேரின் நிலை என்ன ஆனது என அப்பகுதி மக்கள் மிகுந்த அச்சத்துடனும் சோகத்துடனும் உள்ளனர்.

கேரள மாநிலத்தின் பல மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. ஆறுகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ரெட் அலார்ட் கொடுக்கப்பட்ட பகுதிகளில் வசித்து வந்த மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதில், இடுக்கி மாவட்டம் மூணாறு மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் பல தேயிலைத் தோட்டங்கள் உள்ளன.

கயத்தார் பேருந்து நிலையம்
கயத்தார் பேருந்து நிலையம்

இங்கு கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமின்றி தமிழகத்தில் தென் மாவட்டங்களில் தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, விருதுநகர் மாவட்டங்களைச் சேர்ந்த பல தொழிலாளர்களும் தங்கியிருந்து வேலை செய்து வருகின்றனர். மூணாறு அருகில் உள்ள ராஜமலை, பெட்டிமுடிப் பகுதியில் ஆங்கிலேயர் காலத்தில் உருவாக்கப்பட்ட தேயிலைத் தோட்டம் உள்ளது. இங்கு பணிபுரியும் தொழிலாளர்கள், தோட்டத்தின் அருகிலேயே உள்ள குடியிருப்புகளில் குடியிருந்து வேலை செய்து வருகின்றனர்.

தொடர்ந்து பெய்துவரும் கனமழையால் இடுக்கி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக ஆங்காங்கே நிலச்சரிவு ஏற்பட்டது. இந்நிலையில், பெட்டிமுடி பகுதியிலுள்ள தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் குடியிருப்பு பகுதியில் நேற்று அதிகாலை சுமார் 5 மணி அளவில் திடீரென ஏற்பட்ட நிலச்சரிவில், 30-க்கும் மேற்பட்ட குடியிருப்பு வீடுகள் இடிந்து மண்ணுக்குள் புதைந்தன. அக்குடியிருப்புகளில் வசித்துவந்த சுமார் 80 பேர் வரை உயிரிழந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இதில், மண்ணில் புதைந்து கிடந்த ஒரு சிறுவன் உட்பட 22 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக கேரள அரசு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

சோகத்தில் உறவினர்கள்
சோகத்தில் உறவினர்கள்

மேலும், 16 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மற்றவர்களை தேடும் பணியில் பொதுமக்கள், தீயணைப்பு படையினர், தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தின் தென் மாவட்டங்களில் தூத்துக்குடி மாவட்டம் கயத்தார், பாரதிநகர் பகுதியைச் சேர்ந்த 80-க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 200-க்கும் மேற்பட்டவர்களும் அங்கு வசித்து வந்துள்ளனர்.

இதில், 55 பேர் மாயமாகி இருப்பதாகக் கூறப்படுகிறது. இவர்களின் நிலை என்ன என்பது குறித்து தெரியாமல் கயத்தாரைச் சேர்ந்த உறவினர்கள் அச்சத்துடன் உள்ளனர். இதுகுறித்து அப்பகுதியினர் கூறுகையில், “எங்க ஊர்ல இருந்து பல குடும்பங்கள் மூணாறு பகுதியிலுள்ள தேயிலைத் தோட்டங்களில் உள்ள குடியிருப்புகளில் தங்கி வேலை செய்துட்டு வர்றங்க. கடந்த திங்கட்கிழமை வரையிலும் மூணாறிலுள்ள எங்களது உறவினர்களிடம் போனில் பேசிக்கிட்டு இருந்தோம். அதிக இடி, மின்னலுடன் மழை பெய்யுறதாகவும், வீடுகளுக்குள் குழந்தைகளை வச்சுக்கிட்டு இருக்க முடியலைன்னும், பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதாகவும் சொல்லி கவலைப்பட்டாங்க.

சோகத்தில் உறவினர்கள்
சோகத்தில் உறவினர்கள்

தொடர்ந்து நாங்க முயற்சித்தும் மழையால் யாருக்கும் போன் போகவில்லை. நிலச்சரிவு ஏற்பட்டு குடியிருப்புகள் மண்ணுக்குள் புதைந்துவிட்ட தகவலை டி.வி பார்த்துதான் தெரிஞ்சுக்கிட்டோம். இதுல எங்க ஊரைச் சேர்ந்த 55 பேரின் நிலை என்ன ஆனது என ஒன்றும் தெரியவில்லை. இதில் நாலு தலைமுறையா வேலை பார்ப்பவர்களும் உள்ளனர். தேயிலை தோட்டத் தொழிலாளர்கள், இதுவரை இதுபோன்ற இயற்கைச் சீற்றத்தை சந்திச்சதில்லை. கயத்தரில் இருந்து 40 பேர் வேன், கார்களில் மூணாறுக்குச் சென்று கொண்டிருக்கிறார்கள்” என்றனர் கண்ணீருடன்.

அடுத்த கட்டுரைக்கு