Published:Updated:

மூணாறு நிலச்சரிவு: `குடும்பத்துல 14 பேரை இழந்துவிட்டேன்!’ - கண்ணீர்விடும் கயத்தாறு இளைஞர்

நிலச்சரிவு மீட்புப்பணி
நிலச்சரிவு மீட்புப்பணி

கேரள மாநிலம் ராஜமலை தேயிலைத் தோட்ட நிலச்சரிவில் உயிரிழந்த தமிழர்களில் தன் குடும்பத்தைச் சேர்ந்த 14 பேரை இழந்து தவித்து வருகிறார் உயிரிழந்த தோட்டத் தொழிலாளி சண்முகையாவின் மகன் விஜய்.

கேரள மாநிலத்தின் பல பகுதிகளில் கடந்த சில நாள்களாகப் பெய்து வந்த கனமழையின் காரணமாக ஆறுகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இடுக்கி மாவட்டம் மூணாறு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் தேயிலைத் தோட்டங்கள் காணப்படுகின்றன. இங்கு, நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர், தென்காசி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள், அங்குள்ள குடியிருப்புகளில் குடும்பத்துடன் தங்கியிருந்து வேலை செய்து வருகின்றனர்.

உயிரிழந்தவர்களின் புகைப்படத்துக்கு அமைச்சர் கடம்பூர் ராஜு அஞ்சலி
உயிரிழந்தவர்களின் புகைப்படத்துக்கு அமைச்சர் கடம்பூர் ராஜு அஞ்சலி

இந்நிலையில், மூணாறு அருகிலுள்ள ராஜமலை, பெட்டிமுடி பகுதியில் உள்ள கண்ணன் தேவன் தேயிலைத் தோட்டப்பகுதியில், கடந்த 5 நாள்களுக்கு முன்பு ஏற்பட்ட திடீர் நிலச்சரிவில் 25 குடியிருப்புகள் இடிந்து மண்ணுக்குள் புதைந்தன. அந்தக் குடியிருப்புகளில் வசித்து வந்த 80-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், அவர்களின் குடும்பத்தினர் உயிரிழந்திருக்கலாம் எனச் சொல்லப்படுகிறது. இந்நிலையில், இதுவரை 43 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. தேயிலைத் தோட்ட நிறுவனத்தின் கணக்குப்படி மொத்தம் 83 பேர் இருந்ததாகச் சொல்லப்படுகிறது. ஆனால், வருவாய்த்துறையினரின் கணக்குப்படி எண்ணிக்கை 78 பேர்தான் எனச் சொல்லப்படுகிறது.

மூணாறு நிலச்சரிவு: மோப்ப நாய்; ஒரே இடத்தில் 8 உடல்கள்... 42 ஆக அதிகரித்த பலி எண்ணிக்கை

இந்நிலையில், வெளி மாவட்டங்களில் தங்கி பள்ளி, கல்லூரிகளில் படித்து வந்த தொழிலாளர்களின் குழந்தைகள் தற்போதைய ஊரடங்கினால் பெற்றோரை சந்திக்க வந்தனர். அவர்களின் எண்ணிக்கை சேர்க்கப்படவில்லை. அவர்களைப் பற்றிய எந்த விவரமும் தெரியவில்லை. இதனால் பலி எண்ணிக்கை 100-ஐ தாண்டவும் வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், உயிரிழந்தவர்களில் 55 பேர் தூத்துக்குடி மாவட்டம் கயத்தாற்றைச் சேர்ந்தவர்கள்.

குடும்பத்தில் 14 பேரை இழந்து தவிக்கும் விஜய்
குடும்பத்தில் 14 பேரை இழந்து தவிக்கும் விஜய்

இதில், மீட்கப்பட்ட 43 பேரின் உடல்களில் கயத்தாற்றைச் சேர்ந்த 22 பேர் மற்றும் ஓட்டப்பிடாரத்தைச் சேர்ந்த 5 பேர் என மொத்தம் 27 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இதில், கயத்தாறு, பாரதி நகரைச் சேர்ந்த சண்முகையா என்பவரின் குடும்பத்தைச் சேர்ந்த 14 பேர் உயிரிழந்தனர். அவரின் மனைவி மட்டும் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார். அவரின் மகன் விஜய், கயத்தாறில் தங்கியிருந்ததால் உயிர்பிழைத்தார்.

இதுகுறித்து பாரதிநகரைச் சேர்ந்தவர்களிடம் பேசினோம், ``சண்முகையாவுக்கு இரண்டு மனைவிகள். இதில், ஒருவர் மட்டும் காயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார். சண்முகையா, அவரின் முதல் மனைவி, 3 மகள்கள், 3 மருமகன்கள், 6 பேரன், பேத்திகள் என மொத்தம் 14 பேர் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தனர். சண்முகையாவின் ஒரே மகன் விஜய், கோவாவில் தங்கி வேலைபார்த்து வந்தார். தற்போதைய ஊரடங்கினால் சொந்த ஊரான கயத்தாறில் வந்து உறவினர் வீட்டில் தங்கியிருந்தார். அதனால், உயிர் பிழைத்தார். இருப்பினும், தன் குடும்பத்தினர் 14 பேரையும் இழந்து தனி மரமாகியிருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது” என்றனர்.

உயிரிழந்தவர்களின் புகைப்படத்தை பார்த்து அழும் உறவினர்கள்
உயிரிழந்தவர்களின் புகைப்படத்தை பார்த்து அழும் உறவினர்கள்

தனிமையில் சோகத்தில் கண்ணீருடன் இருந்த விஜய்யிடம் பேசினோம்.``ஆலமரம் போல இருந்த எங்க குடும்பத்தில் எங்க அம்மாவைத் தவிர எல்லாரையும் மண்ணுக்கு காவு கொடுத்துட்டு தவிக்கிறேன். குடும்பத்தினர் 14 பேரில் இதுவரை 5 பேரின் உடல்கள் மட்டும்தான் கிடைத்துள்ளன. மீதியுள்ளவர்களின் உடல்களைத் தேடி வருகிறார்கள். நான் கோவாவில் வேலைக்குச் சேர்ந்ததால், `இனிமேல் தேயிலைத் தோட்டத்தில் வேலை பார்க்க வேண்டாம். கயத்தாறுக்கே வந்திடுங்க’ன்னு சொன்னேன். `சரிப்பா... இன்னும் ரெண்டு மாசத்துல எல்லாருமே ஊரு பக்கம் வந்திடுறோம்’ன்னு சொன்னாங்க. அதுக்குள்ள இப்படி ஆயிடுச்சு. இனிமேல் எப்படி வாழப்போறேன்னு தெரியலை” எனச் சொல்லி விம்மி அழுதார். இச்சம்பவத்தால் கயத்தாறு ஊர் முழுவதும் அழுகுரல்களே கேட்கின்றன.

அடுத்த கட்டுரைக்கு